தமிழக தேர்தல் வாக்குறுதிகளை கண்டு ஏங்கும் புதுவை வாக்காளர்கள்
புதுச்சேரி:
பூலோக ரீதியாக புதுவை- தமிழகம் பின்னி பிணைந்துள்ளது. தமிழகத்தின் ஒரு பகுதி புதுவையிலும், அது போல் புதுவை பகுதி தமிழகத்திலும் மாறி, மாறி அமைந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் செல்லப்பிள்ளையாக கடந்த காலங்களில் திகழ்ந்தது.
மத்திய அரசு 90 சதவீத மானியமாக நிதியை புதுவைக்கு வழங்கி வந்தது. இதனால் ஒரு காலகட்டத்தில் புதுவையில் பல்வேறு இலவச திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தினர்.
ரங்கசாமி காங்கிரஸ் முதல்-அமைச்சராக இருந்தபோது முதியோர் பென்ஷன், அனைத்து ரேஷன் கார்டுக்கும் இலவச அரிசி, பொங்கல் பொருட்கள், தீபாவளிக்கு இலவச துணி, பள்ளி மாணவர்களுக்கு காலை ரொட்டி, பால் வழங்கும் திட்டம், சைக்கிள், செருப்பு என பல சலுகைகள் அறிவித்து செயல்படுத்தப்பட்டது.
2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் முதல்- அமைச்சராக ரங்கசாமி இருந்தபோது இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தியதோடு, முதியோர், மாற்று திறனாளிகள் ஓய்வூதியத்தை உயர்த்தி, தேர்தல் அறிவிப்பான இலவச மிக்சி, கிரைண்டரும் வழங்கினார். புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் இத்திட்டங்களை பார்த்து ஏங்கும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது இந்நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 2016-ல் அமைந்த காங்கிரஸ் அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய பல திட்டங்களை செயல்படுத்த முனைந்தது.
ஆனால், முன்னாள் கவர்னர் கிரண்பேடி தடுத்துவிட்டதாக காங்கிரசார் புகார் கூறினர். மத்திய அரசிடமிருந்து நிதியும் குறைந்துவிட்டது. மானியமும் 23 சதவீதமாக குறைந்துவிட்டது.
இதனால் நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல் படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தது. இதனால் கவர்னரை எதிர்த்து காங்கிரசார் பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர்.
ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் முற்றிலுமாக நிலைமை தலை கீழாக மாறியது. சமீபத்தில் தமிழகத்தில் பொங்கலுக்கு அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.2 ஆயிரத்து 500, பொங்கல் பொருட்கள் வழங்கினர். இதனால் புதுவை எல்லை பகுதி மக்கள் ஏக்கத்தோடு பார்த்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்த ரேஷன்கார்டுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், ரேஷன்கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்தம் பருப்பு, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைப்பு என சுமார் 500 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
இதேபோல இன்று வெளியாகும் அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியிலும் இதற்கு இணையான இலவச அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது.
புதுவையில் கடந்த சில ஆண்டாக ரேஷன்கடைகளே மூடப்பட்டு கிடக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட புதுவை மக்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. போட்டி போட்டு அறிவிக்கும் அறிவிப்புகள் புதுவை மக்களை ஏக்கத் தோடு பார்க்க வைத்துள்ளது.