செய்திகள்
ரங்கசாமி

தொகுதி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி- ரங்கசாமியை துரத்தும் பா.ஜனதா

Published On 2021-03-05 03:16 GMT   |   Update On 2021-03-05 03:16 GMT
என்.ஆர்.காங்கிரஸ் தங்களது கூட்டணியிலேயே நீடிக்கும் என்று நம்பிய பா.ஜ.க.வுக்கு ரங்கசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் கண்ணாமூச்சி காட்டி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
புதுச்சேரி:

தொகுதி பேச்சுவார்த்தையில் விடாது துரத்தியும் ரங்கசாமி கண்ணாமூச்சி காட்டுவதால் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

புதுவை சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் அணியில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக நிற்கிறது.

இந்தநிலையில் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்.ஆர்.காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளின் டெல்லி மற்றும் சென்னை தலைமை சார்பில் நடந்து வருகிறது.

இதற்காக குழு அமைத்து அந்தந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் என்.ஆர்.காங்கிரசில் அந்த நிலைமை இல்லை. அதாவது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படவில்லை. எதுவானாலும் அந்த கட்சி தலைவர் ரங்கசாமி எடுப்பதுதான் முடிவு.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட்ட போதிலும் தற்போது தொகுதி உடன்பாடு, முதல்-அமைச்சர் வேட்பாளர் ஆகிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பதால் இழுபறி நீடித்து வருகிறது.

அதாவது என்.ஆர்.காங்கிரஸ் தங்களது கூட்டணியிலேயே நீடிக்கும் என்று நம்பிய பா.ஜ.க.வுக்கு ரங்கசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் கண்ணாமூச்சி காட்டி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க. கூட்டணியை விரும்பாததாலும் பிற கட்சிகளில் இருந்து என்.ஆர்.காங்கிரசில் சேர்ந்துள்ளவர்களின் ஆலோசனை காரணமாகவும் பா.ஜ.க. கூட்டணியில் தொடருவது குறித்து ரங்கசாமி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ரங்கசாமியை வழிக்கு கொண்டுவர பா.ஜ.க. தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கூட்டணி பேச்சின்போது பிடி கொடுக்காமல் பார்க்கலாம், நேரம் கொடுங்கள் என்று கூறி தாமதம் செய்து வருகிறார்.

கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால் மட்டுமே வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று கருதுவதால் பா.ஜ.க.வும் விட்டுக் கொடுத்து வருகிறது. ஆனால் உறுதியான பதில் அளிக்காமல் ரங்கசாமி போக்கு காட்டி வருகிறார்.

அவ்வப்போது வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சேலம், கோவை என்று சுற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று ரங்கசாமி திருச்செந்தூருக்கு சென்று விட்டார்.

ரங்கசாமியின் பிடி கொடுக்காத நடவடிக்கை பா.ஜ.க. மேலிட தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News