செய்திகள்
ஆண்டிபட்டி தொகுதி

3 முறை முதல்வர்களை உருவாக்கி தந்த ஆண்டிபட்டி தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-03 07:19 GMT   |   Update On 2021-03-03 09:36 GMT
தமிழகத்தில் 3 முறை முதல்வர்களை உருவாக்கி தந்த பெருமைக்குரிய ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் கண்ணோட்டம்.
தமிழகத்தில் 3 முறை முதல்வர்களை உருவாக்கி தந்த பெருமை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உண்டு. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி தாலுகா உத்தமபாளையம் தாலுகாவின் ஒரு சில பகுதிகள் கீழக்கூடலூர், நாராயணதேவன்பட்டி, வண்ணாத்திபாறை, வருவாய் கிராமங்கள், காமையக்கவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சிகள், கூடலூர் நகராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.


விவசாயம் மற்றும் தறி நெசவு பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 16 சட்டமன்ற தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா 3 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது தான் பிரசாரத்துக்கு வராமலேயே ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றதால் அப்போது முதல் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறியது.

அதன் பிறகு ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் 2 முறை போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது இன்று வரை மக்கள் மத்தியில் பேசும் நிகழ்வாக உள்ளது.



இந்த தொகுதியில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 1,36,257 ஆண் வாக்காளர்கள், 1,39,640 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,75,931 வாக்காளர்கள் உள்ளனர்.



எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

மக்களின் கோரிக்கை

இயற்கை எழில்கொஞ்சும் தேனி மாவட்டத்தில் வைகை அணை அமைவிடமாக இத்தொகுதி உள்ளது. வைகை அணையில் இருந்துதான் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இருந்தபோதும் ஆண்டிபட்டி தொகுதியில் பல்வேறு கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



அது தற்போது அனைத்து கட்சியினரின் தேர்தல் வாக்குறுதியாக மாறியுள்ளது. இதே போல ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் இங்கு உள்ளனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே அவர்களது கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இது தவிர மலை கிராம மக்களின் அடிப்படை வசதிகளும் வரும் தேர்தலில் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் வெற்றி



1962 - கிருஷ்ணவேணி (காங்கிரஸ்)
1967 - பரமசிவம் (சுதந்திரா கட்சி)
1971 - குருசாமி (சுதந்திரா கட்சி)
1977 - கந்தசாமி (அ.தி.மு.க.)
1980 - எஸ்.எஸ். ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
1984 - எம்.ஜி.ஆர் (அ.தி.மு.க.)
1989 - ஆசையன் ( தி.மு.க.)
1991 - தவசி (அ.தி.மு.க.)
1996 - ஆசையன் (தி.மு.க.)
2001 - தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)
2002 - ஜெயலலிதா (அ.தி.மு.க.)
2006 - ஜெயலலிதா (அ.தி.மு.க.)
2011 - தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)
2016 - தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)
2019 - மகாராஜன் (தி.மு.க.)
Tags:    

Similar News