செய்திகள்
திமுக கூட்டணி

தி.மு.க. கூட்டணி கட்சிகள் அதிருப்தி- சுமூக தீர்வு காண அடுத்தடுத்து பேச்சுவார்த்தை

Published On 2021-03-03 06:55 GMT   |   Update On 2021-03-03 06:55 GMT
ஆளும் கட்சி போட்டியிடும் இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என்று தி.மு.க. கருதுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வருகிற 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. எனவே இன்னும் ஒருசில நாட்களில் தொகுதி பங்கீடு முடிய வேண்டிய அவசியம் உள்ளது. அதன் பிறகுதான் எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை முடிவு செய்ய முடியும்.

ஒரே தொகுதியை 2 கட்சிகள் விரும்பினால் அதையும் பேசி தீர்க்க வேண்டும். எனவே தொகுதி பங்கீடு விரைவாக முடிவடைய வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை உள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

வருகிற 7-ந்தேதி திருச்சியில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அந்த கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இந்த தொகுதிகளை ஏற்பதாக அறிவித்துள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருப்பதால் அனுசரித்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கட்சிகளை தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற எந்த கட்சிக்கும் இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த முறை தி.மு.க. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 180 தொகுதிகளில் நிற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. கருத்துக் கணிப்பின்படி தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே ஆளும் கட்சி போட்டியிடும் இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என்று தி.மு.க. கருதுகிறது. கூட்டணி கட்சிகள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுவது அதிக இடங்களை பெறுவதற்கு தடையாக இருக்கலாம் என்றும் தி.மு.க. கருதுவதாக கூறப்படுகிறது.

தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும், குறைந்த தொகுதிகள்தான் கிடைக்கும் என்று தெரிந்ததால் இந்திய ஜனநாயக கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் இதுவரை எந்த பெரிய கட்சியுடனும் தொகுதி உடன்பாடு முடியவில்லை.

கூட்டணி கட்சிகள் பேசத் தொடங்கியதும் குறிப்பிட்ட தொகுதிதான் தர வாய்ப்பு இருக்கிறது. இதை அனுசரித்து செல்ல வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் ஒரு எண்ணிக்கை தெரிவிக்கப்படுகிறது. இதனால் தாங்கள் விரும்பும் அளவு தொகுதி கிடைக்காதோ என்ற நிலையில் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக தி.மு.க. கூட்டணியில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் இழந்தது.

பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து செய்த பிரசாரத்துக்கு தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதனால் தான் இந்த வெற்றி கிடைத்தது என்று காங்கிரசார் கூறி வருகிறார்கள். எனவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கடந்த சட்டசபை தேர்தலைப் போல் 41 இடங்களில் போட்டியிட விரும்பியது.

ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 18 தொகுதிகள் தருகிறோம் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் மேலிட தூதராக கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி பங்கேற்றார். காங்கிரஸ் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டன. என்றாலும் தி.மு.க.வினர் தங்கள் கருத்தை நியாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

அதன்பிறகு 2 முறை பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது என்றாலும் இதுவரை தொகுதி பங்கீட்டில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. தற்போது 24 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் 35 தொகுதிகளை தர வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. குறைந்தது 30 தொகுதிகளையாவது பெற விரும்புகிறது. இதுவரை எந்த தீர்வும் கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.

கம்யூனிஸ்டு கட்சிகள் நடந்து முடிந்த தேர்தல்களில் 10-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. எனவே இந்த தேர்தலிலும் 10-க்கும் அதிகமான தொகுதிகள் வேண்டும் என்ற கருத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் 10 இடங்களை விரும்பியது. அதற்கும் 4 இடங்கள் என்ற பதிலே கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் 2 கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுடன் நடத்திய தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு ஏற்படவில்லை.

ம.தி.மு.க.வும் 10 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியது. 8 இடங்களாவது கிடைக்கும் என்று நம்பியது. ஆனால் இதற்கும் சாதகமான பதில் தி.மு.க.விடம் இருந்து கிடைக்கவில்லை.

ம.தி.மு.க. தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளார். குறைந்தது 8 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது. எனவே இந்த கட்சியுடனும் உடன்பாடு ஏற்படவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றி வாய்ப்புள்ளது. கூட்டணியின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகவும் உதவியாக இருக்கும். எனவே 15 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. தரப்பில் குறைந்த எண்ணிக்கையே தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் 9 இடங்களாவது வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். என்றாலும் விரும்பிய தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த கட்சிக்கும் தொகுதி பங்கீடு செய்வது இழுபறியாகவே இருக்கிறது. எனவே அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க. தெரிவித்து இருந்தாலும் அதில் இருந்து சற்று இறங்கி வந்து கூடுதல் தொகுதிகளை வழங்கும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்கும் விதமான நல்ல தீர்வை காண தி.மு.க. தரப்பில் முயற்சி நடந்து வருகிறது.

கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர் பார்த்தாலும், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சிகள் போட்டியிட வேண்டும் என்று தி.முக. விரும்புகிறது. தற்போது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி இருந்தாலும் தகுந்த முறையில் அது தீர்த்து வைக்கப்படும். மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். கூட்டணி தொகுதி பங்கீடு சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News