செய்திகள்
கோப்புப்படம்

தேர்தலில் என்ன சந்தேகம்?- ‘வாக்கு வாத்தியார்’ கிட்ட கேளுங்க

Published On 2021-03-03 05:31 GMT   |   Update On 2021-03-03 05:31 GMT
தேர்தல் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ''வாக்கு வாத்தியார்'' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னை:

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் நேரங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாமா, தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாமா என்பது போன்றவை குறித்து விளக்கம் கேட்டு இருந்தனர்.

இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர் எழுப்பிய கேள்விகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே வாக்கு அளிப்பதன் அவசியம், தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள 32 கல்லூரிகளில் வினாடி வினா போட்டிகள் நடந்தன.

மேலும் தேர்தல் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ‘‘வாக்கு வாத்தியார்’’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இது குறித்து மாநகராட்சி கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஆன்லைன் தேர்தல் விழிப்புணர்வு ஆசிரியர், நம்ம வாக்கு வாத்தியார், தேர்தல் தொடர்பான எல்லாவற்றுக்கும் வழிகாட்டுவார், ஆலோசனை கூறுவார், உதவுவார்’ என்று கூறி உள்ளார்.

இதன்படி தேர்தலில் எந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம், வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையிலான வீடியோ சென்னை மாநகராட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News