செய்திகள்
மேட்டுப்பாளையம் தொகுதி

ஐந்தாவது முறை வெற்றி வாகை சூடுமா அதிமுக: மேட்டுப்பாளையம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-03 05:28 GMT   |   Update On 2021-03-03 05:28 GMT
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதி குறித்த கண்ணோட்டத்தை காணலாம்.
மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டியின் அழகிய மலர் பாதங்களில் கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் வற்றாத ஜீவ நதி எனப்படும் பவானி ஆறு ஓடி கொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்த நீலகிரி மலை ரெயில் இயங்குவதும் இந்த தொகுதியில்தான்.

இதுதவிர ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடைபெறுவதும் இந்த மேட்டுப்பாளையம் தொகுதியில்தான். பில்லூர் அணை டேம், பரளிக்காடு சுழல் சுற்றுலா, பிளாக் தண்டர், கல்லாறு பழப் பண்ணை போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களும் இங்கு உள்ளன. இதனை சுற்றி பார்க்கவே அதிகளவில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தொகுதி இந்த தொகுதி.



மேட்டுப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதசுவாமி கோவில், இடுகம்பாளையம் அனுமந்தராய சுவாமி கோவில், குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவில்களும் உள்ளன. மேலும் கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.

மேட்டுப்பாளையம் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 802. இதில் 1,43,198 ஆண் வாக்காளர்களும், 1,52,566 பெண் வாக்காளர்களும், 38 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.

இந்த தொகுதியில் ஒக்லிக கவுடர், வெள்ளாள கவுண்டர், நாடார், பட்டு நெசவர், முதலியார் உள்பட பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக ஒக்லிக கவுடர் அதிகளவில் உள்ளனர்.



இதன் காரணமாகவே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களாக அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். இதுவரை இருந்த எம்.எல்.ஏக்களில் பலர் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள்தான். தற்போது உள்ள எம்.எல்.ஏ-வும் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்தான்.

இந்த தொகுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சி, சிறுமுகை காரமடை பேரூராட்சி, நெம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி, கூடலூர் பேரூராட்சி என 4 பேரூராட்சிகளும், 18 ஊராட்சிகளும் உள்ளன.



மேட்டுப்பாளையம் தொகுதியில் 1952-ம் ஆண்டில் இருந்து இந்த தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் 8 தடவை அ.தி.மு.கவும், 2 முறை தி.மு.கவும், 5 தடவை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தடவை சுயேட்சை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.கவை சேர்ந்த ஓ.கே. சின்னராஜ் என்பவர் வெற்றி பெற்றார். தற்போது அவரும் இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதவிர அ.தி.மு.கவில் முன்னாள் எம்.பி.யான ஏ.கே.செல்வராஜ், சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சீட் கேட்டு வருகிறார்கள்.

இதேபோன்று தி.மு.கவில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேந்தர் மற்றும் டி.ஆர். சண்முக சுந்தரம், கல்யாண சுந்தரம் ஆகியோரும் இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த தொகுதியின் பிரதானமே விவசாயம்தான். ஏராளமானோர் பாக்கு, வாழை, கறிவேப்பிலை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதுதவிர கத்திரி, தக்காளி, வெண்டை போன்ற பயிர்களையு-ம் பயிரிடுகின்றனர். இங்குள்ள வாழைகள் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாய தொழிலுக்கு அடுத்த படியாக கைத்தறி நெசவுத் தொழிலை அதிகம் பேர் செய்து வருகின்றனர். சிறுமுகை பட்டுக்கு தமிழகம், இந்தியா, வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது. பலர் இந்த பட்டை விரும்பி வாங்கி செல்கின்றனர்.



தொழில் வளர்ச்சியில் மேட்டுப்பாளையம் தாலுகா பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. எஸ்.ஐ.வி.எஸ்.ஆர்எஸ்.ஐ தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் சில தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. தொழில்துறை வளர்ச்சி இல்லாததால் இந்த தொகுதி படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். மேட்டுப்பாளையம் நகரம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி காணப்பட்டாலும் காய்கறி வர்த்தகத்தில் முதன்மை பெற்று விளங்கி வருகிறது. 75-&க்கும் மேற்பட்ட உருளைகிழங்கு மண்டிகள், 4&க்கும் மேற்பட்ட வெள்ளைப்பூண்டு மண்டிகளும், காய்கறி மண்டிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டிகளில் இருந்து உருளை, காய்கறிகள் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் தொகுதியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன

காந்தவயல் பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை தொலைநோக்கு பார்வை இல்லாமல் கட்டியதால் மழை காலங்களில் பாலம் மூழ்கி மக்களின் போக்குவரத்து தடைபடுகிறது. எனவே இந்த உயர்மட்ட பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் அல்லது மாற்று இடத்தில் வேறு பாலம் கட்டித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் நகரில் காலை, மாலை நேரத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால், புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுதவிர ஏற்கனவே அறிவித்த கருவேப்பிலை தொழிற்சாலை இன்னும் அமையவில்லை. அதனை நிறுவ வேண்டும் என மக்கள் கூறுகிறார்கள். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது, நெல்லித்துறை விளாமரத்தூர் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள்.

சமீப காலமாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதியில் காட்டு யானை மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டிருந்தாலும் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.


2016 தேர்தல்

ஓ.கே.சின்னராஜ் (அ.தி.மு.க வெற்றி)- 93,595
சுரேந்திரன்(தி.மு.க)- 77,481
சண்முகசுந்தரம்(த.மா.கா)- 13,324 
ஜெகநாதன்(பா.ஜனதா)- 11,036
அப்துல்வகாப்(நாம்தமிழர்)- 1,509,
முகமதுரபி(எஸ்.டி.பி.ஐ)- 2,209
மூர்த்தி(பா.ம.க)- 1,870
ஆறுமுகம்(சுயேட்சை)- 153
வெள்ளிங்கிரி(கொ.ம.தே.க)- 1,604
நோட்டா- 2,892
செல்லாதவை- 15

தேர்தல் வெற்றி




1952  கெம்பே கவுடர்(சுயேச்சை).
1957  டி.ரகுபதி தேவி(காங்கிரஸ்).
1962  என்.சண்முகசுந்தரம்(காங்கிரஸ்).
1967  டி.டி.எஸ்.திப்பையா(காங்கிரஸ்).
1971- எம்.சி.தூயமணி(தி.மு.க).
1980- எஸ்.பழனிசாமி(அ.தி.மு.க).
1984- மா.சின்னராஜ்(அ.தி.மு.க).
1989- வி.கோபாலகிருஷ்ணன்(காங்கிரஸ்).
1991- எல்.சுலோசனா(அ.தி.மு.க).
1996- பி.அருண்குமார்(தி.மு.க).
2001- ஏ.கே.செல்வராஜ்(அ.தி.மு.க).
2011- ஓ.கே.சின்னராஜ் (அ.தி.மு.க).
2016-  ஓ.கே.சின்னராஜ். (அ.தி.மு.க)
Tags:    

Similar News