சிறப்புக் கட்டுரைகள்
கவிஞர் இரவிபாரதி

கவிதை வடிவில் கண்ணதாசனின் சுருக்கமான சுயசரிதம்- 21

Published On 2022-04-23 15:56 IST   |   Update On 2022-04-23 15:56:00 IST
கண்ணதாசன் பட்ட கஷ்டங்களைப் போல் எவரும் பட்டிருக்க முடியாது. கண்ணதாசன் அடைந்த நஷ்டங்களைப் போலவும் எவரும் அடைந்து விடவும் முடியாது.

“தன்னை உணர்தல்” என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று.. தான் நடந்து வந்த, கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது என்பது அதைவிட அவசியமான ஒன்று. இந்த இரண்டு குணங்களையும் பெற்றவர்கள், நிச்சயமாய் மிக உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள் என்பது அனுபவத்தில் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கின்ற உண்மையாகும்.

கண்ணதாசனைப் பொறுத்த வரையில் இந்த இரண்டு குணங்களையும் அடக்கத்தோடு பெற்றவர் என்பது மட்டுமல்ல... எல்லோரிடமும் எளிதில் காண முடியாத வெளிப்படைத்தன்மையோடு, ஒளிவு மறைவில்லாமல், மனதில் பட்டதை, உண்மையைப் பேசக்கூடியவர்.

தான் கடந்து வந்த பாதையையும், தனது குணநலன்களையும் தனது குறைகளையும் நிறைகளையும், ஒன்று விடாமல் எழுத்து வடிவில் பதிவு செய்தவர் கண்ணதாசன் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

கண்ணதாசன் பட்ட கஷ்டங்களைப் போல் எவரும் பட்டிருக்க முடியாது. கண்ணதாசன் அடைந்த நஷ்டங்களைப் போலவும் எவரும் அடைந்து விடவும் முடியாது. அடிவாங்க... அடிவாங்கத்தான் “தங்கம்“ ஒளிரும். மிளிரும் என்பதுபோல் பல அடிகளையும், இடிகளையும் தாங்கிப் பிடித்தவர் கவிஞர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதோ ஏழு விருத்தங்களாக, தன்னுடைய சுய சரிதத்தை சுருக்கமாகத் தந்துள்ளார் கண்ணதாசன். ஒவ்வொரு விருத்தத்திலும் ஓராயிரம் செய்திகளை உள்ளடக்கி எழுதியுள்ளார்.

ஒவ்வொரு சொல்லையும், சிந்தித்து, சிந்தித்து செதுக்கியுள்ளார். முத்தானவற்றை மட்டுமே தேர்வு செய்து இந்த முத்தாரத்தை வெகு நேர்த்தியாகக் கட்டியுள்ளார். கவிஞரைப் பற்றி நன்கறிந்தவர்களுக்கு அதிகமான விளக்கம் தேவையில்லை. இருந்தாலும் தேவைப்படுகிற விளக்கங்களை ஆங்காங்கே தந்துள்ளேன்.

ஒவ்வொருவரும், தங்களது வாழ்க்கைப் பயணத்தில் பல படிகள் ஏறுகிறார்கள். பல படிகள் இறங்குகிறார்கள். கண்ணதாசன் ஏறி இறங்கிய படிகள் கணக்கில் அடங்காதவை.

அனைத்து துன்பத்திற்கும் காரணம் “ஆசை” என்பதுதான் புத்தரின் அருள்வாக்கு. ஆசை என்று சொல்லும் போது... மண்ணாசை, பொன்னாசை... பெண்ணாசை என்று அது பல வகைப்படுகிறது. கண்ணதாசனுக்கு மண்ணாசையிலும் அத்தனை மயக்கமில்லை. பொன்னாசையிலும் அத்தனை நாட்டமில்லை. ஆனால் இந்தப் பெண்ணாசைதான் அவரைப் பாடாய்ப் படுத்தி அவரது வாழ்வைச் சிதைத்தது. இறுதி நாட்களில் அந்த தவறுக்காக அவர் வருந்தி நிற்கும் வேளையிலும், அதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்களையும், கற்ற பாடங்களையும் தன் எழுத்துக்களுக்கு அவை உரம் சேர்த்ததாகவே குறிப்பிட்டுக் காட்டுகிறார் கண்ணதாசன்.

“ஆசை வெட்கம் அச்சம் துன்பம்

பாசம் பற்று பதவி உதவிக்

காதல் கடமை கவனம் மறதி

ஈதல் பெறுதல் ஏற்றம் இறக்கம்

எத்தனை எத்தனை படிகளில் ஏறி

இத்தனை வயதை எய்தி விட்டேன் நான்”

இந்த ஆறு வரிகளில், ஒட்டு மொத்த வாழ்க்கையையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் கண்ணதாசன். கவிஞருடைய ஆயுட்காலம் என்பது ஜம்பத்தி நான்கு வயதுதான். ஒரு மனிதன் நூறு வயது வரை வாழ்ந்திருந்தால் அவன் எத்தனை அனுபவங்களைப் பெற்றிருப்பானோ அதனை எனது 54 வயதிற்குள்ளேயே நான் பெற்று விட்டேன் என்பதுதான் இந்தக் கவிதையின் உள்ளடக்கம்.

நம்முடைய ஆதங்கம், வருத்தமெல்லாம் கவிஞர் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருந்தால் தமிழன்னையின் மகுடத்தில் ஒளி வீசுகின்ற ஓராயிரம் வைரங்களைப் பதித்திருப்பார் என்பதுதான். இருப்பினும் இந்த 54 வயதில் 100 வயதில் எழுத வேண்டிய இலக்கியங்களைப் படைத்துள்ளார் என்பதுதான் எல்லோரின் பொதுவான கருத்தாகும்.

கண்ணதாசன் பிறந்த நகரத்தார் சமூகம் என்பது ஆன்மீகத்தில் ஊறித் திளைக்கின்ற சமூகம். பிள்ளை பிறந்த உடனேயே படிப்படியாக ஆன்மீகத்தை ஊட்டி ஊட்டி வளர்ப்பவர்கள் நகரத்தார்கள். அப்படித்தான் ஆன்மீகத்தில் தோய்ந்த பிள்ளையாக கண்ணதாசனும் வளர்ந்தார்.

நாளடைவில் பாட்டெழுத ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து வரும் வேளையிலும் ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவராகவே திகழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பிறகு அவரது போக்கிலே ஒரு மாற்றம் வந்து விட்டது. தன்னை ஒரு சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக்கொண்டு அதிலே பெருமையுடையவராக வலம் வந்தார் கண்ணதாசன்.

காரைக்குடியிலே நடைபெற்ற கண்ணதாசன் திருமணம் கூட ஒரு பக்கம் வைதீகமாகவும், சிறிது நேரம் கழித்து, கலைஞர், அரங்கண்ணல், காரைக்குடி ராமசுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுகிற சுயமரியாதைத் திருமணமாகவும் நடைபெற்றது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கலைஞர் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு தி.மு.க. கூட்டத்திற்கு கண்ணதாசன் பேசச் சென்றபோது “நெற்றியிலே இருக்கிற திருநீறை அழித்து விடு” என்று கலைஞர் சொன்ன யோசனையை ஏற்று உடனே அழித்து விட்டார் கண்ணதாசன்.

அதற்குப் பின்னாலே படிப்படியாக முன்னேறி ஊரும் உலகமும் பாராட்டும் படியாக வளர்ந்த காலங்களில், தி.மு.க.வை விட்டு விலக நேரிட்டதற்குப் பின்னாலே முழுக்க முழுக்க ஆன்மீக வழியாகவே மாறி விட்டார் கண்ணதாசன்.

கல்லுக்கு உயிரில்லை. எனவே கல்லால் செதுக்கப்பட்ட கடவுளுக்கும் உயிரில்லை என்று பேசிய கண்ணதாசன் விரைவிலேயே தனது போக்கை மாற்றிக் கொண்டு கல்லால் அமைக்கப்பட்ட கடவுள் பயபக்தியுடன் வணங்க ஆரம்பித்ததை இந்தக் கவிதையிலே சிறப்பாக விளக்கி இருக்கிறார். இப்படி உண்டென்பதை இல்லை என்றும், இல்லையென்பதை உண்டென்றும் மாற்றி மாற்றிப் பேசுகிற ஒரே மனிதன் வேறு யாராக இருக்க முடியும். அது வேறுயாருமல்ல நான்தான் என்கிறார் கண்ணதாசன்.

இப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மையை வேறு யாரிடமும் காண முடியாது. இதோ அந்தக் கவிதை

“கடவுளை ஒருநாள் கல்லென்றவனும்

கல்லை ஒருநாள் கடவுளென்றவனும்

உண்டென்றதனை இல்லை என்றவனும்

இல்லைஎன்றவனை உண்டென்றவனும்

உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே

நானே என்பதை நன்றாய் அறிவேன்..”

என்று தனது சுயகுணத்தை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

சேற்றை விலக்கிக் கொண்டு நீரைத் தேடுகிற பூமியில், நீரை விலக்கிக் கொண்டு சேற்றிலே நான் பலமுறை குளித்திருக்கிறேன் என்று கண்ணதாசன் எப்போதோ எழுதிய சொற்றொடர் ஒன்று இபோது வந்து என் நினைவுக் கதவைத் தட்டுகிறது. அது மட்டுமல்ல “பத்தரைமாற்றுத் தங்கமாகத் திகழ்ந்த, நான் போற்றி வணங்கிய பெருந்தலைவர் காமராஜரையும் என்பேனா விட்டு வைக்கவில்லை. அந்த மாபெரும் தலைவரைப் பற்றியும் விமர்சித்திருக்கிறேன். என்றும் மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன் என்றும் இறுதியில் நான் சேர்த்தது என்ன தெரியுமா? “அனுபவம்” என்கிற அரும்பெரும் சொத்துத்தான் என்கிறார் கண்ணதாசன்.

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றினில் பறந்தேன், கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும், மாசினைப் பார்த்தேன்

பார்த்தது கோடி...! பட்டது கோடி...!

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்..

இப்படி வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளை எல்லாம் விமர்சிப்பதும், கல்லிலும் முள்ளிலும் நடந்த கதைகளைக் கூறுவதும் சொல்வாக்கிலே செழித்ததையும் செல்வாக்கிலே திளைத்ததையும் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்துகிறார் கண்ணதாசன். ஊற்றுப் பெருக்காக, கருத்தும், கற்பனையும் சுரந்து வந்து அவரது நாவிலே நடனமாடிய விதத்தை, அந்த அற்புதத்தை என்னென்று சொல்வது?

காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியிலே உள்ள அமராவதி புதூர் குருகுலப் பள்ளியிலேதான் எட்டாவது வரை படித்தார் கண்ணதாசன். அதற்குப் பிறகு அவருக்குப் படிப்பு ஏறவில்லை... பள்ளியிலே படிக்காத புத்தகங்களை எல்லாம் வாசக சாலைக்குச் சென்று வரிவரியாக வாசித்தேன்... ஆக பள்ளிக் கல்வி கொடுத்த படிப்பறிவும் படிப்பகக் கல்வி கொடுத்த அறிவும் கைகோர்த்துக் கொண்டு என்னை ஒரு ஆளாக்கி உயர்த்திப் பிடித்தது. அப்போது கற்றதிலே, பெற்றதைத்தான், நான் இப்போது மற்றவர்களுக்கு வழங்கி வருகிறேன். பேரையும் புகழையும் பெரிய அளவில் பெற்றுவிட்டேன். நான் பெற இருப்பது இறைவனது திருவடி நிழல் ஒன்றுதான் என்றெழுதி நம்மைச் சிந்திக்க வைக்கிறார் கண்ணதாசன்.

அறிவும் தெளிவும் ஆய்ந்திடும் பண்பும்

தணியாக் கல்வித் தாகமும் விடுத்து

கற்றேன் சிலநூல்-கற்றவை எல்லாம்

மற்றவர்க் கெனவே வடித்து வைக்கிறேன்

பெற்றவை என்ன? பேரும் புகழும்

பெறப்போவதுவோ... பெரியவன் பாதம்...

இதுதான் அந்தக் கவிதை... பெரியவன் என்று கண்ணதாசன் குறிப்பிடுவது படைத்த அந்த இறைவனைத்தான்...

கல்லாத நூலில்லை சொல்லாத பொருளில்லை என்று சொல்லுகிற அளவுக்கு எல்லா இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவர் கண்ணதாசன்... இருந்தாலும் அந்தப் பெருமிதம் எதுவும் கொள்ளாமல்... எனது உயரம் எனக்கு மட்டுமே தெரியும் என்று அலட்டிக் கொள்ளாமல் அடக்கமாக வாழ்ந்தவர் கண்ணதாசன். என்னைப்பற்றி மதிப்பீடு செய்வதென்றால் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே பிறந்தவன் எனச் சொல்லலாம் என்கிறார் கவிஞர்.

வேதம் கீதை விளங்குப நிடதம்

ஆதித் திருக்குறள் அற்புதக் கம்பன்

எத்தனை கற்றும் ஏறி இறங்கியும்

தன்னைப் பற்றித் தனியா ராய்ச்சி

நடத்திக் கொள்பவன் நல்வினையடைவான்

என்னைப் பற்றியான் எண்ணிடுங் காலை

சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே பிறக்கும்.

என்பது தான் அந்தக் கவிதை.

கண்ணதாசனின் குடும்பம் என்பது மிகப்பெரியது. மனைவி, மக்கள், பணியாட்கள் என எப்போதும் கலகலப்பாக இருக்கக் கூடிய குதூகலம் நிறைந்த குடும்பம் அது.

உள்ளூர் உறவினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நண்பர்கள் கவிஞரை சூழ்ந்த படியே இருப்பார்கள். நன்மை, தீமை என நாலையும் பார்த்தவர் கவிஞர். மென்மையானவர், மேன்மையானவர் என்று கவிஞரை பற்றி ஊரே சொல்லும். அவரது மேனியில் புண்ணும் உண்டு புகழ் மாலையும் உண்டு. எல்லாம் இருந்தும் என்ன? எனது கண்ணன் வருகைக்காகத்தான் நான் காத்திருக்கிறேன் என்று எழுதுகிறார் கண்ணதாசன்.

மனைவிய ரென்றும், மக்கள் என்றும்

துணைவர்களென்றும் தோழர்களென்றும்

நன்மை, தீமைகள் நாலையும் பார்த்தவர்

மென்மை, வன்மை, மேன்மைகள் கண்டவன்

புண்ணும் புஷ்பமும் பூத்த திருமகன்

கண்ணனுக் காகவே காத்திருக்கின்றான்...

அது மட்டுமல்ல... அடுத்த கவிதையில்...

நானொரு ஆலமரம் போன்றவன், என்னில் இருந்து தோன்றுகிற விழுதுகள் என்றென்றும் என்னைக் காத்து நிற்கும்... காலமும் காலனும் வந்து உற்றார் உறவினர் கதறி அழுமுன் என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் குவிப்பேன்.

நானாக அடங்கி என்வாழ்வை முடிப்பேன் விண் உள்ளலவும் இந்த மண் உள்ளலவும் என் கவிதைகள் என்னை காத்து நிற்கும். இது தான் நடக்கும் என்று ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்பும்

ஆலம் விழுதால் ஆயிரம் விழுதுகள்

எழுதி, எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும் என் வாழ்வை என்செய்யும்.

என்று நிறைவாகிறது அந்தக் கவிதை...

இவற்றையெல்லாம் வைத்து கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கண்ணதாசனின் உயரம் நமக்கு தெரிகிறது.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று படிக்காத மேதை படத்தில் காமராஜரை மனதில் வைத்து எழுதிய அதே பாடல் கண்ணதாசனுக்கும் பொருந்துகிறது என்பது தான் எனது கணிப்பு.

அடுத்த வாரம் சந்திப்போம்

Similar News