சென்னை சித்தர்கள்: ஐகோர்ட்டு பாபா- பாரிமுனை- 73
சித்தர்களில் சிலர் ஒரே இடத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது உண்டு. பூண்டி மகான் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்து நாடு முழுவதும் உள்ள மக்களை தன் வசம் இழுத்து மகத்துவங்கள் செய்தார். சென்னையிலும் அதே போன்று ஒரு சித்தர் அருள் பாலித்து இருக்கிறார்.
அந்த சித்தரின் பெயர் ஐகோர்ட்டு பாபா. பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்டு வளாகத்தில் பார் கவுன்சில் அருகே வெளிப்புறப் பகுதியில் திண்ணை மாதிரி இருந்த 6 மீட்டர் பகுதிதான் அவரது இருப்பிடமாக இருந்தது. ஐகோர்ட்டு பகுதியிலேயே இருந்ததால் அவருக்கு அந்த பெயர் ஏற்பட்டது.
உண்மையில் அவரது பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ராஜ ராஜ ஐகோர்ட்டு பாபா என்றும் அவரை அழைப்பார்கள். அவரது பூர்வீகமும் கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து அவர் சென்னை வந்ததாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் 1970-ம் ஆண்டில் இருந்து அவர் ஐகோர்ட்டு பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.
கருப்பு நிறத்தில் அழுக்கு நிறைந்த ஆடைகளுடன் வலம் வந்த அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவரும் யாரையும் கண்டு கொள்ளவில்லை. சுமார் 30 ஆண்டுகள் இப்படித்தான் கழிந்தது. 2000-ம் ஆண்டு அவரது மகிமை வெளியில் தெரியத் தொடங்கியது.
அந்த ஆண்டு ஐகோர்ட்டு பார் கவுன்சில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை பின்னால் வந்த வாகனம் ஒன்று இடித்து தள்ளியது. காலில் பலத்த அடிபட்ட அவரால் நடக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது ஏற்க மறுத்து தன்னை அங்குள்ள திண்ணையில் உட்கார வைக்க சொல்லி உள்ளார்.
அன்று அந்த திண்ணையில் உட்கார்ந்தவர் தான் பரிபூரணம் ஆகும்வரை அங்கேயே இருந்தார். பொதுவாக சித்தர்கள் தங்களை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு தொண்டு செய்யும் உண்மையான ஆத்மாக்கள் கிடைத்தால் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
அப்படித்தான் 2000-ம் ஆண்டின் போது ஐகோர்ட்டு பாபா தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அதற்கு அவர் தேர்வு செய்த நபர் சரவண கண்ணன். இவரது பூர்வீகம் பழனி அருகே உள்ள ஆயக்குடி. சிறு வயதிலேயே ஆன்மிக பற்று கொண்ட சரவண கண்ணன் சென்னை பள்ளிக் கல்வித் துறையில் கிடைத்த வேலையை ஏற்பதற்காக சென்னை வந்தார்.
சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த அவர் அடிக்கடி வடபழனி ஆலயத்திற்கு சென்று வழிபடுவார். குறிப்பாக அதிகாலையில் பள்ளி எழுச்சி பூஜையிலும், இரவில் பள்ளியறை பூஜையிலும் தவறாமல் பங்கேற்பார். காலையும், மாலையும் வடபழனி முருகன் ஆலயத்திற்கு சென்றதால் அங்கிருந்த பரஞ்ஜோதி பாபாவை தரிசிக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.
பரஞ்ஜோதி பாபாவுக்கு பணிவிடை செய்பவர்களில் ஒருவராகவே சரவண கண்ணன் மாறிப்போனார். இந்த நிலையில்தான் இவரை தனது சீடராகவே மாற்றும் வகையில் ஐகோர்ட்டு பாபா தேர்வு செய்தார். ஆனால் ஐகோர்ட்டு பாபாவைப் பற்றி சரவண கண்ணனுக்கு அதற்கு முன்பு எதுவுமே தெரியாது.
தற்செயலாக ஐகோர்ட்டு பார் கவுன்சில் அருகில் உள்ள ஓட்டலுக்கு காபி குடிக்க தனது நண்பர் ஒருவருடன் சென்று இருந்தபோதுதான் ஐகோர்ட்டு பாபாவை பார்த்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்த அவரை சரவண கண்ணன் கண்டுகொள்ளாமல் ஓட்டலுக்குள் செல்ல முயன்றார். அப்போது ஐகோர்ட்டு பாபா சிரித்தபடியே, ‘சரவண கண்ணன் இங்கே வாருங்கள்’ என்று அழைத்தார்.
இதைக் கேட்டதும் சரவண கண்ணனுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருந்தது. அழைப்பது அவரா என்று சற்று குழப்பத்துடன் பார்த்தார். உடனே ஐகோர்ட்டு பாபா, ‘வாங்க சார் நான்தான் கூப்பிட்டேன்’ என்று மீண்டும் அழைத்தார். சரவண கண்ணனுக்கு ஆச்சரியம் விலகவில்லை. ‘என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டார்.
அடுத்த வினாடி சரவண கண்ணனின் பூர்வீக ஊர், தாய் பெயர், தந்தை பெயர், தற்போது பார்க்கும் வேலை, தங்கியிருக்கும் இடம் என்று எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். சரவண கண்ணனுக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது. சுமார் 3 மீட்டர் தொலைவிலேயே பயந்தபடி நின்றார்.
அவரை அருகில் வரும்படி ஐகோர்ட்டு பாபா மீண்டும் அழைத்தார். இப்போது சரவண கண்ணனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அப்போது ஐகோர்ட்டு பாபா, ‘வடபழனியில் ஒருவரை தரிசிக்கிறாய் அல்லவா? உன்னை வேலாயுதம் பிள்ளை என்று அழைப்பாரே நினைவிருக்கிறதா? நானும் அவரைப் போல்தான் சார்’ என்று கூறினார்.
இதைக் கேட்டதும் சரவண கண்ணனுக்கு தெளிவு பிறந்தது. தன்னை பற்றிய அனைத்து விவரங்களையும் தெள்ளத் தெளிவாக சொல்லும் இவர் நிச்சயமாக மிகப்பெரிய மகானாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மெய்சிலிர்த்து கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக வழிந்த நிலையில் அவரது காலில் விழுந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த ஐகோர்ட்டு பாபா ஏதோ நீண்டநாள் பழகியவர் போல சகஜமாக பேசத் தொடங்கினார்.
சரவண கண்ணனிடமும் அவரது நண்பரிடமும் டீ வாங்கி தரும்படி கேட்டார். அவர்கள் டீ வாங்கிக் கொடுத்தனர். அதன் பிறகு கையில் வைத்திருந்த பணத்தை தாருங்கள் என்றார். சரவண கண்ணன் தன்னிடம் 180 ரூபாய் இருப்பதாகவும், 3 நாள் செலவுக்கு 30 ரூபாய் தேவை என்று சொல்லிவிட்டு மீதம் உள்ள 150 ரூபாயை கொடுத்துவிட்டார்.
சரவண கண்ணனின் நண்பரிடமும் ஐகோர்ட்டு பாபா பணம் கேட்டார். அந்த நண்பர் தன்னிடம் 10 ரூபாய் மட்டுமே இருப்பதாக சொல்லி எடுத்துக் கொடுத்தார். ஆனால் உண்மையில் அந்த நண்பர் நவரத்தின கல் வாங்குவதற்காக 3,200 ரூபாயை தனது சட்டை பைக்குள் வைத்திருந்தார். 10 ரூபாயை தவிர தன்னிடம் வேறு ரூபாய் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் ஐகோர்ட்டு பாபா உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்று எனக்கு தெரியும் என்று சொல்லி ஆச்சரியப்பட வைத்தார்.
முதல் சந்திப்பிலேயே இப்படி ஆச்சரிய மழை பொழிந்த ஐகோர்ட்டு பாபாவை சரவண கண்ணன் தினமும் தேடிச் சென்று ஆசிபெற தவறவில்லை. அவருக்கு தேவையான எல்லா பணிவிடைகளையும் செய்தார். சரவண கண்ணன் போலவே ஐகோர்ட்டு பாபா மகிமை அறிந்த பலரும் வரத் தொடங்கினார்கள்.
வங்கி மேலாளர், வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள், கல்வி துறை அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் ஐகோர்ட்டு பாபாவை தேடி வந்து ஆசி பெற்று சென்றனர். ஆனால் சென்னையில் அவர் செய்த இந்த சேவை ஓசையில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் அவரிடம் சரவண கண்ணன் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘உங்களுக்கு எந்த ஊர்’ என்று கேட்டார். அதற்கு ஐகோர்ட்டு பாபா கூறுகையில், ‘நான் மெட்ராஸ்காரன் தான். எனக்கு இந்த ஊரில் பெரிய கோவில் ஒன்று இருக்கிறது’ என்று சொன்னார். ஆனால் அது முழுமையாக சரவண கண்ணனுக்கு புரியவில்லை.
சித்தர்கள் எப்போதும் பரிபாஷையில்தான் தகவல்களை வெளியிடுவார்கள். அதேபோன்றுதான் ஐகோர்ட்டு பாபாவும் தன்னை நாடி வருபவர்களிடம் பரிபாஷையில் பேசுவது உண்டு. ஆனால் பெரும்பாலும் ஐகோர்ட்டு பாபா முக்கிய தகவல்களை உள்ளது உள்ளபடி உடைத்து சொல்லி விடுவார். மற்ற சித்தர்களுக்கும், ஐகோர்ட்டு பாபாவுக்கும் காணப்பட்ட மிகப்பெரிய வித்தியாசமாக இது கருதப்படுகிறது.
பாம்பன் சுவாமிகள் எழுதிய ‘பரிபூரண ஆனந்த போதம்’ என்னும் புத்தகத்தை எப்போதும் தனது பைக்குள் சரவண கண்ணன் வைத்திருப்பார்.
அந்த புத்தகத்தை வைத்தே ஒரு தடவை ஐகோர்ட்டு பாபா திருவிளையாடல் நடத்தினார். அந்த பாடல்களுக்கு உள்ள அர்த்தங்களை ஐகோர்ட்டு பாபா தெள்ளத் தெளிவாக சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். மற்றொரு தடவை சரவண கண்ணன் குமரக்கோட்டம் கந்தசாமி கோயிலில் பஞ்சாமிர்த வர்ணம் பாடலை சத்தம் போட்டு பாடிவிட்டு ஐகோர்ட்டு பாபாவை தேடி வந்தார். அப்போது ஐகோர்ட்டு பாபா சிரித்தபடி, ‘நான் இங்கே கல் மாதிரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். நீயோ கல்முன் போய் கத்திவிட்டு வருகிறாய். எந்த பிரச்சினையானாலும் என்னிடம் வர வேண்டியதுதானே’ என்றார்.
பிறகு சரவண கண்ணனிடம், ‘உன் பைக்குள் இருக்கும் பரிபூரண ஆனந்தபோதம் புத்தகத்தை எடு. அதில் 78-ம் பக்கத்தை திறந்து பார். அங்கிருக்கும் 18-வது வரியை படி’ என்றார். உடனே சரவண கண்ணனும் அந்த புத்தகத்தை எடுத்து 78-ம் பக்கத்தில் 18-வது வரியை படித்திருக்கிறார். சரவண கண்ணனுக்கு அன்றைய தினம் முழுக்க இருந்த பல்வேறு கேள்விகளுக்கு அதில் விடை கிடைத்தது.
எப்படி வாழ்வது? இல்லற வாழ்வை துறந்து ஆசைகள் இல்லாமல் பற்றற்று இருப்பது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு அன்று சரவண கண்ணனுக்கு விடை கிடைத்ததாம். ஐகோர்ட்டுக்கு வெளியே நடைபாதை மக்களோடு மக்களாக அழுக்கு துணியோடு காணப்படும் ஒருவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தில் உள்ள வரிகளை அப்படியே சொல்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு மேன்மைப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்து அவரது சீடர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
ஏசுநாதர் பற்றி நிறைய விஷயங்களை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். பாடல்கள் பாடி விடைகளை சொல்வார். ராகவேந்திரர், மகாவீர் ஆகியோரை என் பையன்கள் என்று சொல்லி பலரையும் திகைக்க வைத்துள்ளார். தன்னிடம் வராதவர்களுக்குக் கூட யார் மூலமாவது நடக்கப்போவதை சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அவர் செய்த அற்புதங்கள் ஏராளம், ஏராளம். ஆனால் அவை அனைத்தும் ஆவணப்படுத்தப் படவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். அவருக்கு நிறைய சீடர்கள் இப்போதும் உள்ளனர். அவர்கள் நினைத்தால் தங்களது அனுபவங்களை மொத்தமாக தொகுத்தால் ஐகோர்ட்டு பாபாவை பற்றி பிரமிக்கத்தக்க உண்மைகள் இந்த உலகுக்கு கிடைக்கும்.
இப்படி பலருக்கும் தெரியாமலேயே வாழ்ந்த ஐகோர்ட்டு பாபா 2006-ம் ஆண்டு சித்திரை மாதம் தனது ஆத்மாவை உடலில் இருந்து மீட்டுக்கொள்ள முடிவு செய்தார். 10 நாட்களுக்கு முன்பு அவர் தனக்கு அறிமுகமான அனைவரையும் வரச் சொன்னார். ஒவ்வொருவரிடமும் 5 ஆயிரம் கொடு, 10 ஆயிரம் கொடு என்று வலுக்கட்டாயமாக கேட்டு வாங்கினார்.
பிறகு அந்த பணத்தை 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளாக மாற்றிவரச் சொன்னார். அந்த ரூபாய் நோட்டுகளை பாரிமுனையில் நடைபாதையில் வசிக்கும் மக்களை வரவழைத்து அள்ளி அள்ளிக் கொடுத்தார். அப்படி கொடுத்து முடித்தபிறகு சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திர தினத்தன்று அவர் பரிபூரணம் அடைந்தார். ஜோதி முருகன் என்ற பக்தர் மூலம் அவர் ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் சாலையில் கொளத்தூர் அருகே உள்ள வெள்ளறை என்ற கிராமத்தில் ஜீவ சமாதி செய்யப்பட்டார்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஐகோர்ட்டு பாபாவின் 16-வது மகா குருபூஜை வெள்ளறை கிராமத்தில் உள்ள ஜீவசமாதியில் நடைபெறுகிறது.