சிறப்புக் கட்டுரைகள்
ஒரு வரியில் பாபா அருள்மொழிகள்

ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை 35....ஒரு வரியில் பாபா அருள்மொழிகள்

Published On 2022-04-21 17:40 IST   |   Update On 2022-04-21 17:40:00 IST
தன்னை நாடி வருபவர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்களது கர்மவினைகள் மற்றும் தற்போதைய வாழ்வியல் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பாபா அருள் மழை பெய்வது உண்டு.
சீரடி சாய்பாபா பரிபாஷையில் எத்தனையோ தகவல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஐந்து சதவீதம் கூட நமக்கு கிடைக்கவில்லை. அவர் அருளிய மொழிகளில் சிலவற்றைதான் இப்போது நாம் அவர் காட்டிய பாதையாக கடைபிடித்துக் கொண்டு இருக்கிறோம். தன்னை நாடி வருபவர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்களது கர்மவினைகள் மற்றும் தற்போதைய வாழ்வியல் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பாபா அருள் மழை பெய்வது உண்டு.
அப்படி அவர் வாய்திறந்து அருளிய மொழிகள் பெரிய கட்டுரைகளாகவும் உள்ளன. ஒரு வரி செய்திகளாகவும் வந்துள்ளன. அப்படி வந்துள்ள ஒருவரி தகவல்களை காணலாம்.
* சீரடி மண்ணில் கால் வைப்பவர்களின் துன்பங்கள் உடனே விலகி சுகம் அடைவார்கள்.
* துவாரகமாயி மசூதியில் நுழைந்ததும் மகிழ்ச்சியும், உயர்வும் தானாக வரும்.
* நான் இந்த உடலை விட்டு விலகிய பிறகும் சர்வசக்தியுடன் இருந்து அருள்பாலிப்பேன்.
* என் சமாதி என் பக்தர்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்யும்.
* என் பூத உடல் என் சமாதியில் இருந்து பேசும்.
* என் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கும் என் உபதேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் களுக்கும் நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன். 
* நான் பாரபட்சம் இன்றி அனைவரையும் நோக்குகிறேன். என் கருணையின்றி ஒரு அணுவும் அசையாது.
* நீ என்னை பார்த்தால், நான் உன்னை பார்ப்பேன். உன் பளுவை என் மீது சுமத்தினால் நான் நிச்சயமாக தாங்குவேன்.
* என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.
* தினமும் கடவுள் நாமத்தை உச்சரியுங்கள். வேதங்கள் ஓதுவதாக இருந்தால் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
* நியாய வழியில் பொருள் தேடுங்கள். எண்ணம், சொல், செயலில் அகிம்-சையை கடைபிடியுங்கள்.
* எளிமையாக வாழுங்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் தினசரி வாழ்க்கையில் தியானம், தியாகம் இரண்டையும் கையாளுங்கள்.
* பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்.
* இந்த பிரபஞ்சம் முழுவதும் நான் நிறைந்து இருக்கிறேன். இந்த உலகில் உள்ள எல்லா பொருட்களும் என்னுடையதுதான்.
* அகங்காரத்துடன் நீங்கள் ஒருவரை திட்டினால், அது என்னைத்தான் மிகவும் காயப்படுத்தும்.
* நீங்கள் எந்த அளவுக்கு என்னை நம்புகிறீர்களோ அந்த அளவுக்குதான் உங்களை நான் ஏற்றுக் கொள்வேன்.
* ஒருவருடைய தோற்றத்தைக் கண்டு அவரை எடைபோடவோ, முக்கியத்துவம் கொடுக்கவோ கூடாது. அவர் உருவத்தின் உள்ளே இருக்கும் ஆத்மாவை பாருங்கள்.
* எந்த கடமையாக இருந்தாலும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் செய்யுங்கள்.
* ஒரு போதும் சோம்பலாக இருக்காதீர்கள். ஏதாவது ஒரு நடவடிக்கையில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக இருங்கள்.
* அசைக்க முடியாத நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால்தான் குருவையும்,  இறைவனையும் புரிந்து கொள்ள முடியும்.
* உன்னிடம் என்ன இருக்கிறதோ அது கடவுள் தந்தது. அதை வைத்து திருப்தி அடைய கற்றுக்கொள்.
* ‘‘நான் யார்?’’ என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருங்கள். உரிய நேரத்தில் அதற்கு விடை கிடைக்கும்.
* இன்பமும், துன்பமும் ஒரு மாயை, கானல் நீர். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
* எப்போதும் அமைதியாகவே இருக்க பழகு. அதனால் உனது ஆன்மாவின் குரலை உன்னால் கேட்க முடியும்.
* என்னை நம்பி வருபவர்களை பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்று இருக்கிறேன். எனவே எதிர்காலத்தில் சாரை சாரையாக எறும்பு ஊர்ந்து வருவது போல மக்கள் சீரடிக்கு வருவார்கள்.
* நான் வழங்கும் உதி என் பக்தர்களை எப்போதும் காப்பாற்றும்.
* நான் ஒரு இடத்தில் இல்லாத போதும் எனது அறிவுரைகளை நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அறிவுரைகள் உன்னுடன் உறவாடும். அந்த அறிவுரைகளுடன் சரண் அடைந்துவிடுங்கள்.
* முக்தி அடைவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள். அதற்கு அறம் சார்ந்த நீதி தவறாத வாழ்க்கையை வாழுங்கள்.
* மரணத்தின் போது கூட மனதில் எந்த ஆசையையும் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தின் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.
* குடும்பத்தினரிடம் எப்போதும் அணுகூலமாக இருங்கள். நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.
* வாழ்வில் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நமது மனம் சபலத்தை ஏற்படுத்தும். அவற்றில் சிக்காமல் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.
* வாழ்க்கையில் எது நடந்தாலும் நிலை குலைந்துவிடக் கூடாது. சாட்சியாக இருப்பது போல அமைதியாக இருக்க வேண்டும்.
* பேராசையை அடியோடு விட்டுவிடுங்கள்.  அதுபோல இலவசமாக வரும் எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
* உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் நேசித்து பழகுங்கள். உங்களை யாராவது விமர்சித்தால் பேசாமல் கடந்துவிடுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவைதான் உங்களுக்கு பிரதிபலனாக அமையும்.
* மெய் ஞானம் உள்ள மனிதன் கூச்சல் போடமாட்டான். ஒருவர் உன்னிடம் விவாதித்து பத்து கருத்து கூறினால், நீ ஒரே ஒரு கருத்து மட்டுமே சொன்னால் போதும்.
* யாருடைய ஆசையையும் யாராலும் நிவர்த்தி செய்துவிடவே முடியாது. ஒவ்வொருவருக்கும் கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதுதான் நின்று நிலைக்கும்.
* நீ விதைத்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும். நீ எனக்கு என்ன கொடுக்கிறாயோ அது இரண்டு மடங்காக மாறி உனக்கே திரும்பி வரும்.
* என்னிடம் நிறைய பொக்கிஷம் உள்ளது. அதை புரிந்து கொண்டு என்னை அணுகினால்  உயர்ந்த ஞானத்தை பெற முடியும்.
* ஒருவர் உனக்கு கெடுதல் செய்தால் பதிலுக்கு நீ கெடுதல் செய்யாதே. நன்மையை செய்து பார். அதன் விளைவுகள் அற்புதமானது.
* திருமண பந்தத்தில் அடிமையாகிவிடாதே. மரணத்தையும், பிறப்பையும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்து நடந்து கொள்.
* யாரிடமும் மத வித்தியாசம் பார்க்காதீர்கள். கோவில்களும், மசூதிகளும் ஒன்றுதான்.
* கடவுளை பார்க்க வேண்டுமானால் அதற்கான மன உறுதியை மேம்படுத்திக் கொள். உள்நோக்கி பார்க்கும் பார்வை தேவை. அதில் கவனம் செலுத்தினால் கடவுள் உன் முன் வந்து நிற்பார்.
* பூர்வ ஜென்மத்தின் தொடர்புகளால்தான் இந்த பிறவியில் ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்ள முடிகிறது. ஒருவர் இன்னொருவரை பார்க்கிறார் என்றாலே அது அனைத்துமே பூர்வ ஜென்மத்தின் நீட்டிப்பாகும்.
* எதற்கும் பதட்டப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் என்னிடம் ஒப்படையுங்கள். அவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.
* என் வேலையே உங்களை ஆசிர்வதிப்பது தான். எனவே என்னை நோக்கியே வாருங்கள்.
* என்னிடம் நீங்கள் வந்துவிட்டால் உங்கள் பொறுப்பை நான் உடனே ஏற்றுக் கொள்வேன். அதற்குரிய கணக்கை கடவுளிடம் காட்ட வேண்டியது எனது கடமை ஆகும்.
* கடன் வாங்காதீர்கள். குறிப்பாக ஆன்மிக யாத்திரை செய்யவும், பண்டிகைகளை கொண்டாடவும் கடன் வாங்கவே வாங்காதீர்கள்.
* போகியை விட யோகியே சிறந்தவன்.
* உங்கள் சக்திக்கு ஏற்றபடி அடிக்கடி தர்மம் செய்யுங்கள். 
* அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். அதிர்ஷ்டம் என்பது நிழல். அது எப்போது வேண்டுமானாலும் விலகி சென்றுவிடும்.
* ஒருவனுக்கு பதவியும், அதிகாரமும் கிடைக்கும் போது பணிவாக இருக்க வேண்டும். எடுத்து எறிந்து பேசும் ஆணவ குணம் வரவே கூடாது.
* உங்கள் தேவைக்கு ஏற்ப சாப்பிடுங்கள். விலக்கப்பட வேண்டிய உணவு வகைகளை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.
* வாழ்வதற்குரிய நடைமுறைகளை சன்னியாசிகள் நிறைய சொல்லி உள்ளனர். அவற்றை காது கொடுத்து கேட்டு நடைமுறைப்படுத்துங்கள். அப்படி நடைமுறைப்படுத்தினால், உங்கள் இதயம் தூய்மை ஆகும்.
* பெற்ற தாய், ஆயிரம் புண்ணிய தீர்த்தங்களுக்கு நிகரானவள். அவளை கடவுள் போன்று வழிபட வேண்டும். பெற்றோர் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வழிபடும் பழக்கத்தை எப்போதும் கையாளுங்கள்.
* சகோதர, சகோதரிகளிடம் உண்மையான அன்புடன் இருங்கள். உங்கள் சகோதரிக்கு தேவையான ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களுக்குரிய கடமையை செய்த உணர்வை பெற முடியும்.
* என்னுடைய ஆத்மா அழிவற்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே எப்போதும் உங்கள் பொறுப்புகளை என்னிடம் தரலாம்.
* நீங்கள் இந்த உலகில் எங்கு இருந்தாலும், என்ன செய்து கொண்டு இருந்தாலும் அவை எல்லாம் எனக்குத் தெரியும். உங்களது ஒவ்வொரு அசைவையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
* உங்கள் சிந்தனையில் மையப்பொருளாக எப்போதும் என்னை நீங்கள் வைத்துக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் பரமாத்மாவை சென்று அடைவீர்கள்.
* கங்கையை தேடி நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. என் பாதத்தை நம்பிக்கையோடு உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். கங்கை கரைபுரண்டு வருவதை உணருவீர்கள்.
* நான் எங்கும் வியாபித்து இருக்கிறேன். எனக்கென்று எந்தவொரு வடிவமும் கிடையாது. நான் ஒரு இடத்தில் நுழைந்து செல்வதற்கு வாசல் தேவை இல்லை. இதை எப்போதும் நினைவில் கொண்டு பின்பற்றுங்கள்.
* எனது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், அறிவுரைகளும் உங்களுக்கு நம்பிக்கையூட்டும். நீங்கள் செல்லும் பாதை கடினமானதாக இருக்கலாம். ஆனால் நான் காட்டும் பாதையில் சென்றால், அது உங்களுடைய குறிக்கோளை எந்த வித ஆபத்தும் இன்றி அடைவதற்கு உதவியாக இருக்கும்.
சீரடி சாய்பாபா இப்படி சொன்ன இன்னும் பல அற்புத மொழிகளை அடுத்த வாரமும் பார்க்கலாம்...

Similar News