சிறப்புக் கட்டுரைகள்
பி. சுவாமிநாதன்

கருணை தெய்வம் காஞ்சி மகான்: ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்- 38

Published On 2022-04-20 16:27 IST   |   Update On 2022-04-20 16:40:00 IST
சிப்பந்தி உள்ளே எடுத்துச் செல்ல முயன்ற ‘ஸ்ரீராம ஜெயம்’ நோட்டுகள் அடங்கிய மூட்டையைத் திரும்பக் கொண்டு வரச் சொன்னார் பெரியவா. தன் முன்னால் வைக்கச் சொன்னார்.


சிப்பந்தி உள்ளே எடுத்துச் செல்ல முயன்ற ‘ஸ்ரீராம ஜெயம்’ நோட்டுகள் அடங்கிய மூட்டையைத் திரும்பக் கொண்டு வரச் சொன்னார் பெரியவா. தன் முன்னால் வைக்கச் சொன்னார்.

மூட்டைக்குள் கைவிட்டு அதில் இருந்து ஒரு நோட்டை எடுக்கச் சொன்னார் பெரியவா.

பெரியவாளுக்கு முன்னால் நின்றபடி இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சுவர்ணாம்பாளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சொல்ல முடியாத சந்தோ‌ஷம்!

பிரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நோட்டைத் தீர்க்கமாகப் பார்த்தார் பெரியவா. பின், ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதப்பட்டிருந்த அந்தப் பக்கத்தில் தன் வலக்கையை வைத்தார்.

ஒரு சில விநாடிகள் மகானின் திருக்கரம் அந்த ஸ்ரீராம ஜெயம் எழுத்துகளின் மீது பதிந்திருந்தது. பிறகு, நோட்டில் இருந்து கையை எடுத்தார். அருகில் காணப்பட்ட மூங்கில்தட்டில் இருந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்தார். சுவர்ணாம்பாளிடம் கொடுத்தார்.

தன் திருக்கரத்தால் பெரியவா வழங்கிய அந்தப் பிரசாதத்தைக் கண்கள் பணிக்கப் பெற்றுக் கொண்டார்.

குடும்பத்தோடு மீண்டும் நமஸ்கரித்தார்.

அங்கிருந்து புறப்பட்டார். பெரியவாளின் இந்த செயல்கள் அவரைப் பரவசப்படுத்தின என்றாலும், அதற்கான விளக்கம் தெரியவில்லை. பெரியவாளிடம் இருந்து நாம ஜெபத்துக்கான உபதேசம் பெற முடியவில்லை என்ற எண்ணமும் கிட்டத்தட்ட மறந்தே விட்டது. காரணம், பெரியவாளின் இந்த ஆசிர்வாதம் அதை மறக் கடிக்கச் செய்து விட்டது.

ஒரு குழந்தையின் சேஷ்டைகளுக்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கைகளில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டிருக்கும். அடுத்த ஒரு சில விநாடிகளில் அந்த பொம்மையைக் கண்டுகொள்ளாமல் அடுத்த விளையாட்டுக்குத் தாவி விடும். திடீரென்று எழுந்து நடக்கும். எங்கோ போய் உட்காரும். சில நிமிடங்கள் அந்தக் குழந்தையின் செயல்களை அருகில் இருந்து ஆராய்ந்து பார்த்தால், நமக்கு ஒன்றுமே விளங்காது. ஆனாலும், உற்சாகமாக ஏதோ செய்து கொண்டே இருக்கும் அந்தக் குழந்தை.

அதுபோல்தான் மகான்களும் தெய்வங்களும். ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்று சொல்கிறோம் அல்லவா?

மகான்களின் செயல்களும் அப்படித்தான் இருக்கும். அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

பழநிக்கு அருகே கணக்கம்பட்டியில் மூட்டை சுவாமிகள் என்கிற மகான் ஒருவர் இருந்தார். அந்தக் கிராமத்திலே அவர் வசித்து வந்த குடிசை வீட்டின் வாசல் அருகே பக்தர்கள் சென்று அமர்ந்து கொள்வார்கள். சுவாமிகள் குடிசைக்குள் இருந்து வெளியே வரும்போது தரிசிக்கலாம் என்று காத்திருப்பார்கள்.

மூட்டை சுவாமிகள் வெளியே வந்ததும், குறிப்பிட்ட ஒரு பக்தரைப் பார்த்து வருமாறு ஜாடை காட்டுவார். தனக்கு அனுக்ரஹம் கிடைத்து விட்டதாகக் கருதி அந்த பக்தரும் உற்சாகத்துடன் ஓடி வருவார். அப்போது ஒரு இடத்தில் குவிந்திருக்கும் மணலைக் காண்பித்து, ‘இதை அள்ளி அங்கே கொண்டு போடு’ என்பார்.

மூட்டை சுவாமிகள் காண்பிக்கிற மணல் குவியல் இந்த இடத்தில் இருந்து அந்த இடத்துக்குப் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. சாலையில் அந்த மணல் குவியல் இங்கு இருந்தாலும் ஒன்றுதான்; அங்கு இருந்தாலும் ஒன்றுதான்.

என்றாலும், ‘இந்த மணல் குவியல் இங்கு இருந்தால் என்ன... இதை ஏன் அள்ளிப் போட வேண்டும் சுவாமிகளே...’ என்று சம்பந்தப்பட்ட பக்தர் மூட்டை சுவாமிகளிடம் விளக்கம் கேட்க முடியாது. மகான்கள் சொன்னால், செய்து விட வேண்டும்.


சாதாரண மனிதர்களான நம்மால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

இதற்கான காரணத்தை சுவாமிகளின் அத்யந்த பக்தர் ஒருவர் அப்போது சொன்னார். ‘அந்த பக்தரின் கெட்ட கர்ம வினைகளை அவரிடம் இருந்து சுவாமிகள் அகற்றுகிறார்.’

ஒரு குருநாதரிடம் இருந்து பக்தருக்கு எப்பேர்ப்பட்ட அனுக்ரகம் பார்த்தீர்களா?

இது போல், சிப்பந்தி உள்ளே எடுத்துப் போன ‘ஸ்ரீராம ஜெயம்’ நோட்டுகளை வரவழைத்து, அந்த நோட்டைப் பிரிக்க வைத்து, அதில் பெரியவா ஏன் கையை வைக்க வேண்டும்? பெரியவாளின் இந்தச் செயலுக்கு உண்டான விளக்கத்தை எப்படியாவது எவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார் சுவர்ணாம்பாள்.

அதற்கேற்ற சந்தர்ப்பமும் ஒரு கட்டத்தில் அமைந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டவள்ளி மடத்தில் சந்நியாசியாக இருந்தவர் ஒரு அவதூத சுவாமிகள். ராம மந்திரத்தின் சிறப்புகளை வெளியுலகுக்குப் பரப்புகிற பணியில் அந்தக் காலத்தில் தீவிரமாக இருந்தவர். எப்போதும் ராம நாம ஜெபத்திலும், பிரசாரத்திலும் இருப்பவர்.

‘ஸ்ரீராம ஜெயம்’ நாமத்தை விடாமல் நித்தமும் எழுதுகிற வழக்கம் கொண்ட சுவர்ணாம்பாளுக்கு இந்த சுவாமிகளின் அறிமுகம் அமைந்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த மகானை ஒரு முறை நேரில் தரிசித்து அருள் பெற்றார்.

அப்போது மகா பெரியவாளை தேனம்பாக்கத்தில் தான் தரிசித்தது பற்றியும், ‘ஸ்ரீராம ஜயம்’ நாமம் எழுதப்பட்ட நோட்டுப் பக்கத்தில் தன் வலக்கையை வைத்து எடுத்து ஆசிர்வதித்தது பற்றியும் விரிவாகச் சொன்னார் சுவர்ணாம்பாள்.

எல்லாவற்றையும் கேட்ட அந்த அவதூத சந்நியாசி, ‘நீ ரொம்ப பாக்கியம் பண்ணி இருக்கே... ‘ராம’ மந்திர உபதேசத்தை பெரியவா உனக்குக் கொடுத்திருக்கா. தவிர பெரியவா உனக்குக் கொடுத்தது ஸ்பரிச தீட்சை’ என்றார்.

இதைக் கேட்ட சுவர்ணாம்பாளுக்கு உடல் சிலிர்த்தது. ‘ஸ்பரிச தீட்சையா... இந்த தீட்சையை ஒருவர் பெறுகிறார் என்றால், அவரது உடலை சம்பந்தப்பட்ட குருநாதர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தொட வேண்டும் அல்லவா? நம் உடல் மீது பெரியவா கைவைக்கவே இல்லையே...’ என்று நினைத்தார் சுவர்ணாம்பாள்.

என்றாலும், தீட்சையும் உபதேசமும் கிடைத்து விட்டதில் ஒரு ஆனந்தம்.

நித்தமும் ‘ராம’ சிந்தனையுடன் நோட்டுகளில் சுவர்ணாம்பாள் எழுதிய நாமாக்களுக்கு சாட்சாத் ஸ்ரீராமபிரானே பெரியவா ரூபத்தில் ஆசிர்வதித்தது போல் ஒரு பரவசம்.

தீட்சைகளில் பல வகைகள் உண்டு. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, திருவடி தீட்சை என்று நிறைய உண்டு.

உபதேசம் தருகின்ற குருநாதர் ஒருவரைத் தொட்டு தீட்சை வழங்குவது ஸ்பரிச தீட்சை. ‘ஸ்பரிசம்’ என்றால் தொடுவது.

‘நயன தீட்சை’ என்றால், கண்களால் பார்த்து வழங்குவது. தீட்சை ஏற்றுக் கொள்கிறவருக்குப் புரிகிறாற் போல் குருநாதர் வழங்குவார்.

‘திருவடி தீட்சை’ என்பது, தீட்சை ஏற்பவர் நமஸ்கரிக்கிறபோது அவரது சிரசில் குருநாதர் தன் திருவடிகளை வைத்து அனுக்ரகம் செய்வது.

தகுதி உள்ள பக்தர்களுக்கு இது போன்ற பல வழிகளில் தீட்சை வழங்கி இருக்கிறார் மகா பெரியவா. ஆனால், வெகு வெகு சொற்பமானவர்கள்தான் பெரியவாளிடம் இருந்து தீட்சை பெற்றிருக்கிறார்கள்.

மகா பெரியவாளிடம் தீட்சை பெறுவதை விட அவர் சொல்கிற உபதேசங்களையும் அருளுரைகளையும் கேட்டே வாழ்ந்தார்கள் பக்தர்கள். இதன் மூலம் தங்களை நல்வழிப்படுத்திக் கொண்டார்கள்.

இங்கே சுவர்ணாம்பாளுக்குப் பெரியவா வழங்கியது ‘ஸ்பரிச தீட்சை’ என்று அவதூத சந்நியாசி சொன்னார் அல்லவா?

எப்படி சுவர்ணாம்பாளைத் தொடாமலே ‘ஸ்பரிச தீட்சை’ வழங்க முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதுதானே?

மகாராஷ்டிரா அவதூத சந்நியாசி எப்படி இதைச் சொன்னார் தெரியுமா? சுவர்ணாம்பாள் எழுதிய ‘ஸ்ரீராம ஜயம்’ நோட்டில் பெரியவா தன் திருக்கரம் பதித்தார் அல்லவா?

எழுத்துகள் சுவர்ணாம் பாளுடையவை. அதில் பட்ட கரம் மகானுடையது.

தென்றல் காற்று கண்களுக்குப் படுவதில்லை. ஆனால், அது நம்மைக் கடந்து போகிற போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணுகிறது அல்லவா? உடல் சிலிர்க்கிறோம் அல்லவா?

அதுபோல் மகான்களின் ஸ்பரிசம் இப்படித்தான் நடக்கும். நம்மை நேரடியாகத் தொட மாட்டார்கள். தொட்டது போன்ற உணர்வு!

மகான்கள் நம்மைக் கடந்து செல்கிறபோது அவர்களின் மூச்சுக் காற்று நம்மீது பட்டாலே போதும்.

நாம் காணிக்கையாகச் செலுத்திய பொருட்கள் மீது அவர்களின் திருக்கரம் பட்டாலே போதும்.

மகான்களின் திருக்கரம் பட்ட ஒரு பொருள், அவரது சிப்பந்தி மூலம் நமக்குக் கிடைத்தாலே போதும்.

இப்போது புரிகிறதா?

சுவர்ணாம்பாளின் நீண்ட நாள் ஆசையான நாம ஜபம் உபதேசம் பெற வேண்டும் என்ற ஆசையை ‘ஸ்பரிச தீட்சை’ மூலம் நிறைவேற்றி வைத்திருக்கிறார் பெரியவா.

எப்பேர்ப்பட்ட அனுக்ரகம் இது?

இது மட்டுமல்ல... சுவர்ணாம்பாளின் இன்னொரு ஆசையையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார் பெரியவா.

(தொடரும்)

swami1964@gmail.com

Similar News