சிறப்புக் கட்டுரைகள்
பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

சந்திரனால் ஏற்படும் யோகங்கள்- 34

Published On 2022-04-19 16:04 IST   |   Update On 2022-04-19 16:41:00 IST
சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். ஒருவரின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் குரு மற்றும் சந்திரனின் பங்கு அளப்பரியது.


வானத்தில் இருக்கும் முழு நிலவு மனதில் இனம்புரியாத எழுச்சியை ஏற்படுத்தி புத்துணர்ச்சியைத் தருகிறது. சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். மனோகாரகனான சந்திரன் நவக்கிரகங்களில் 2-ம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு நீர் கிரகம். இந்த உலகத்தில் நிலை இல்லாமல் இருக்கும் கடல்கள், ஏரிகள், தண்ணீர் சம்பந்தப்பட்ட அனைத்தும் சந்திரனுக்கு சொந்தமாகும். கடலில் அலைகள் என்றைக்குமே ஒரே மாதிரியாக இருக்காது. சந்திரன் மனோகாரகன், நீர் கிரகம் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்பவும், சந்திரனுடன் சேர்ந்த கிரகங்களுக்கு ஏற்பவும் மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத்தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும் ஜோதிட சாஸ்திரத்தில் அனைவரும் காணும் இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். கால புரு‌ஷனுக்கு நான்காம் வீடான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். ரி‌ஷப ராசியில் உச்சம் பெறும் சந்திரன், விருச்சிகத்தில் நீசமடைகிறார். கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். காலச்சக்கரத்தின் 4-வது ராசியாக சந்திரனுடைய கடகம் வருகிறது. எனவே, சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் சந்திரனுக்கும் உண்டு. சந்திரன் மனோகாரகன். அதாவது மனதை ஆள்பவன்.

சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோகமாகவும், அதுவே ராகு-கேது, சனி போன்ற கிரகங்களுடன் சேரும் போதும் அவயோக தோ‌ஷமாகவும் மாறுகிறது. சந்திரன் தரும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையில் உச்சத்தை அடைய வைக்கும். வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரன் பாதிக்கப்பட்டால் வறுமை தண்ணீரில் கண்டம்,திருமணதடை, தோல்விகள், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இந்த கட்டுரையில் சந்திரனால் ஏற்படும் சில முக்கியமான யோகம் மற்றும் அவயோகங்களையும் காணலாம்.

குரு சந்திர யோகம்

சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். ஒருவரின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் குரு மற்றும் சந்திரனின் பங்கு அளப்பரியது.

குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்தோ அல்லது ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலோ குருசந்திர யோகம் அல்லது கெஜகேசரி யோகம் எனப்படும். இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாகும். இந்த யோகம் இருக்கும் ஜாதகர்கள் நீண்ட ஆயுள்,  நீடித்த புகழ், அழியாச் செல்வம், செல்வாக்கு, காரிய சித்தி , சமுதாயத்தில் உயர்ந்த பதவி, கொடுக்கல் வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக வி‌ஷயங்கள், பூர்வ புண்ணியம், நல்ல புத்திரம் என்று பலன் ஏற்படும். இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல வசதி, மதிப்பு, மரியாதையுடன் இருப்பார்கள்.

சந்திரனுக்கு 6,8,12-ல் குரு இருந்தால் அது சகடை யோகமாகும். இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டி சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். சகடை யோகத்தால் பொருளாதார ஏற்றத் தாழ் மிகுதியாக இருப்பவர்கள் வியாழக்கிழமை காலை 11-12 மணி வரையான சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை நேத்திர தரிசனத்தில் வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

சந்திரமங்கள யோகம்

சந்திரனும், மங்களன் என்று சொல்லப்படும் செவ்வாயும் சேர்ந்து கேந்திர திரிகோணங்களில் இருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டு குபேர சம்பத்து கிடைக்கும். ஒன்றையொன்று பார்த்தாலும் பெரும் பணவரவு உண்டு. இதன் மூலம் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், ராணுவம், தீயணைப்புத் துறை, மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் என வசதியாக வாழ்வார்கள்.

சந்திரன், செவ்வாய் கிரக இணைவிற்கு ராகு-கேது, சம்பந்தம் இருந்தால் சிலர் மருத்துவத்துறையில் பிரபலமாக ஜொலிக்கிறார்கள். பொதுவாக இந்த கிரக சேர்க்கை பலருக்கு பணத்தால் வம்பு வழக்கைத் தருகிறது.

இந்த அமைப்பு உள்ள பெண்கள் வருமானத்தில் பெரும் பகுதியை பொருத்தமில்லாத தனது கணவருக்காகவும் அல்லது ஆண் சகோதரர்களுக்காகவும் செலவு செய்து பெரும் கடனாளியாகி விடுகிறார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் அவர்களால் கடன் இல்லாமல் வாழ முடியவதில்லை. சந்திரன், செவ்வாய்க்கு சனி, ராகு-கேது சம்பந்தத்தால் சொத்து தொடர்பான இன்னல்கள், கணவன், மனைவி கருத்து வேறுபாடு, சகோதரர்களுடன் மன பேதம், பெரும் கடன் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 8-9 மணி வரையான செவ்வாய் ஓரையில் சிவனுக்கு புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் நீங்கும்.

அமாவாசை/பவுர்ணமி யோகம்

சூரியனும், சந்திரனும் சேர்ந்து ஒரே ராசியில் இருப்பது நிறைந்த அமாவாசை. சூரியனுக்கு ஏழில் சந்திரன் இருந்தால் பூர்ண பவுர்ணமி. சூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த ஆறு ராசிக்குள் சந்திரன் இருந்தால் வளர்பிறை. சூரியனுக்கு எட்டாம் ராசி முதல் பன்னிரண்டாம் ராசி வரை தேய்பிறை. இந்த அமாவாசை யோகம் உள்ள ஜாதகர் பலவகைகளில் திறமை மிக்கவராக இருப்பார். இவர்கள் முன்னோர்களின் நல்லாசி பெற்றவர்கள். தாயும் , தந்தையும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

இவர்கள் படைப்புத் துறையில் புகழ்பெறும் யோகம் உடையவர்கள். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கதாசிரியர், கல்லூரி பேராசிரியராக, வருவதற்கு இந்த யோகம் மிகவும் கை கொடுக்கும்.

சந்திரனுக்கு நிழல் கிரகங்களான ராகு-கேது சம்மந்தம் இருப்பது கிரகண தோ‌ஷம். கிரகண சேர்க்கைகளில் நன்மையை விட, தீமைகளே அதிகம். தாய், தந்தைக்கு கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும் அல்லது பிரிந்து வாழ் வார்கள். இந்த கிரக அமைப்பு ஆன்மிகம், தியானம், பக்தி, யோகம் போன்றவற்றில் ஆர்வத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் பலவீனமான தசை காலங்களில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கிரகண காலங்களில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகு-கேது கிரகச் சேர்க்கை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு ராகுவால் உடல் பலவீனம், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ஏதேதோ உளற ஆரம்பித்து விடுவார்கள். சிலருக்கு கேதுவால் விரக்தி, வெறி ஏற்படும். தாய் மற்றும் தாய் வழி உறவினர் களின் ஆதரவு குறையும். முன்னோர்களின் நல்லாசிகள் குறைவுபடும். மிகுதியான பித்ரு தோ‌ஷ பாதிப்பு இருக்கும். சூரியன் சந்திரனுக்கு ராகு-கேது சம்பந்தம் இருப்பவர்கள் அமாவாசையில் முன்னோர்களையும், பவுர்ணமியில் குல தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

புனர் பூ தோ‌ஷம்

ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோ‌ஷமாகும். சனியும் சந்திரனும் தொடர்பு உள்ள நேரத்தில் எந்த ஒரு செயலை செய்தாலும் அது மிகப் பெரிய தடை, காலதாமதத்தை செய்யும். இதில் சனி, சந்திரன் சேர்க்கை , சம சப்தமபார்வை முதல் தர புனர்பூ தோ‌ஷமாகும்.அத்துடன் சனி அல்லது சந்திரன் நீசமாகி இருந்தால் பாதிப்பு சிறிது குறையும். நன்மையானாலும் தீமையானாலும் இரட்டிப்பான பலன்களைத் தரும். “புனர்பூ” என்றால் அதீத தடை, தாமதம் என்று பொருள். ஜாதகரின் அனைத்து செயல்களிலும் தடை, தாமதம் ஏற்படும் .

புனர்பூ அமைப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை இருக்கும். மற்றவரின் குறை களைக் கண்டறிந்து அதை பெரிதுபடுத்துவதில் வல்லவர்களாகவும் இருப்பதுடன் ,

ஒருவரை பார்த்தவுடன் அவரின் குண நலன்களை துல்லியமாக கணித்துவிடும் தன்மையுடையவர்கள். இந்த தோ‌ஷமானது எப்போதுமே ஆழ்மனதில் ஒரு இனம்புரியாத சோகத்தை வைத்து இருப்பதுடன் சின்ன சின்ன விசயங்களில்கூட பய உணர் வைத்தரும். மேலும், கோட்சாரத்திலோ அல்லது தசாபுக்தியிலோ சனி-சந்திரன் தொடர்பு படும்போது இனம் புரியாத கவலைகள் மற்றும் துக்கங்களை தரும். மன சஞ்சலம், சபலம் மிகுந்திருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஆளுக்கு தகுந்தாற்போல், இடத்திற்கு தகுந்தாற்போல் குண இயல்புகளை சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வார்கள். எதிர்மறை எண்ணங்கள் மிகுதியாக இருக்கும். மன சஞ்சலத்தின் உச்சகட்ட சேர்க்கை இந்த புனர்பூ அமைப்பு. திருமணத்திற்கு முன்பு திருமணத்தடையையும், திருமணத்திற்கு பிறகு இல்லற இன்பத்தை கெடுத்து விவாகரத்து, மறுமணம் போன்ற பிரச்சனைகளையும் தரும்.

சிலருக்கு இல்லற துறவறத்தையும் ஒரு சிலருக்கு சந்நியாச யோகத்தை தந்துவிடும். இல் வாழ்வில் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும். மிகக்கடுமையாக இருந்தால் பிரம்மச்சாரி வாழ்க்கையை கூட வாழ வைத்துவிடும்.

சனி மற்றும் சந்திரனுக்கு ராகு-கேதுக்கள் சம்பந்தம் இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான இடர்கள் மிகுதியாக இருக்கும். தொழிலால் கடன், வேலையாட்களால் மன உளைச்சல் அல்லது நிலையற்ற தொழில் போன்ற பாதிப்புகள் நிலவும். இவர்கள் முதலீடு போட்டு சொந்த தொழில் செய்யக் கூடாது.

புனர் பூ தோ‌ஷத்தால் மிகுதியான பாதிப்பு இருப்பவர்கள் புண்ணிய நதிகளில் புனித நீராடல் செய்ய வேண்டும். பிரதோ‌ஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி பிரதோ‌ஷ வழிபாடு செய்வது மிகச் சிறப்பு.

ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய பாக்கிய பலம் நன்றாக அமைந்தாலும் சந்திர பலம் மிக முக்கியம். இந்த ஜென்மத்தில் ஒருவர் அனுபவிக்கும் நல்ல தீயவினைகளை உடலே அனுபவிக்கிறது. அதனால் தான் உடல்காரகன் சந்திரனை வைத்து யோக, அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் உடல் காரகனான சந்திரன் பலம் பெற்றால் 6ம் பாவக பலன்களான பெரும் பகையோ அல்லது வியாதியோ அல்லது கடனோ ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. சிறு தலைவலி என்று கூட படுக்கமாட்டார்கள். எந்த சிறு வியாதி வந்தாலும் தானாகவே சரியாகிவிடும்.

எனவே ஒருவருக்கு அனைத்து விதமான சுப பலன்களும் நடக்க சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் சுப கிரகங்களுடன் கூடியும் சுப கிரகங்களின் பார்வை பெற்று இருப்பதும் அவசியம். ஜனன கால ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தவர்கள் வளர்பிறை காலங்களில் சந்திரனை வழிபட வேண்டும். தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நேர்மாறான பலன்களை தரும் என்பதால் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட வேண்டும்.

Similar News