சிறப்புக் கட்டுரைகள்
பா.சிவந்தி ஆதித்தனார்

கொடுத்துச் சிவந்த கரமுடைய சிவந்தி ஆதித்தனார்!

Published On 2022-04-19 14:09 IST   |   Update On 2022-04-19 14:09:00 IST
உலக விளையாட்டுத் துறைக்கு இந்தியா வழங்கிய சொத்து என சிவந்தி ஆதித்தனாரைப் பற்றிச் சொல்வதுண்டு. உலக அளவில் இந்திய விளையாட்டுத் துறை நிமிர்ந்து நிற்க அவர் செய்த பணிகள் இன்னும் பலப்பல.


ஓலைச் சுவடிகளை வாகனமாக்கிக் கொண்டு பயணம் செய்த தமிழன்னை, காலத்திற்கேற்ப அச்சு வாகனத்திற்கு இடம் மாறினாள். பற்பல பண்டிதர்கள் வீடுகளுக்கெல்லாம் தன் புதிய அச்சு வாகனத்தில் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றாள். அவர்களுக்கெல்லாம் அருள் புரிந்தாள். அவர்கள் அறிவு பெற்றார்கள்.

என்றாலும் தமிழன்னையின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. அதிகம் படித்தவர்கள் மட்டுமா தன் குழந்தைகள்? பள்ளிப் படிப்பைக் கூடப் பூர்த்தி செய்யாத அதிகப் படிப்பறிவில்லாத பாமரர்களும் கூடத் தன் குழந்தைகள் தானே? அவர்களெல்லாம் தன் அருளைப் பெற்று அறிவு பெற வேண்டாமா?

தான் பெற்ற பிள்ளைகளில் எந்தப் பிள்ளை மூலம் தமிழறிந்த அனைவருக்கும் எளிய சொற்களில் அறிவு புகட்டப்படப் போகிறது?

காத்திருந்தாள் தமிழன்னை. அவள் காத்திருப்பு வீண் போகவில்லை. காலம் ஆதித்தனார் என்ற பெருமகனைத் தோற்றுவித்தது. தமிழன்னையை அச்சு வாகனமேற்றி பாமரர் உள்ளிட்ட அனைவர் வீடுகளுக்கும் அனுப்ப வழிகண்டார் அந்தப் பெருமகன்.

தினத்தந்தி தமிழன்னையின் வாகனமாயிற்று. ஏர்பிடித்து உழுபவர், நாற்று நடுபவர், களையெடுப்பவர், கூலிவேலை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், கட்டிடத் தொழிலாளர், பூக்கடைக்காரர்கள், பழம் விற்பவர்கள், தேநீர்க்கடை நடத்துபவர்கள் என அடித்தட்டு மக்கள் எல்லாம் தினத்தந்தி மூலம் மேல்தட்டு மக்களின் அறிவைப் பெறத்தொடங்கினார்கள்.

பொருளாதாரத்தில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் அறிவில் அனைவரும் ஒன்றே என்ற பெருமிதம் அடித்தட்டு மக்களிடம் ஏற்பட்டது. தினத்தந்தியைப் படித்து அதில் வந்த செய்திகளைப் பற்றி ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்ட போது அவர்களிடையே ஒரு மிடுக்கு தோன்றியது.

தமிழக அரசியல், உலக அரசியல், அறிவியல், ஆன்மிகம் எனத் தினத்தந்தி தொடாத துறையில்லை. அனைத்து அறிவுக் களஞ்சியத்தையும் அனைவருக்கும் பொதுவுடைமை ஆக்கிற்று தினத்தந்தி. அதன் எளிய தமிழ் நடை எல்லோரையும் வசீகரித்துக் கொள்ளை கொண்டது.

போகப் போக குறிப்பிட்ட வி‌ஷயம் தொடர்பாக தினத்தந்தி என்ன சொல்கிறது என்றறிய முறையாகக் கல்வி கற்ற பண்டிதர்களும் ஆவல் கொண்டார்கள். அவர்களும் தினத்தந்தியை மிகுந்த ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கினார்கள்.

சங்கீதம் அறிந்தவர்கள், சங்கீதம் அறியாதவர்கள் என இரு தரப்பினரையும் ஈர்க்கும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இன்னிசை மாதிரி, தினத்தந்தி படித்தவர், பாமரர் என எல்லோரையும் கவரத் தொடங்கியது.

ஆதித்தனாருக்குப் பின் தினத்தந்தியின் பொறுப்பை ஏற்றார் அவரது புதல்வர் சிவந்தி ஆதித்தனார். எட்டடி பாய்ந்த தாயிடமிருந்து ஆற்றல் பெற்றுப் பதினாறடி அல்ல, அதற்கு மேலும் முப்பத்திரண்டு அடி தாவிய பெருமை சிவந்தி ஆதித்தனாருடையது.

சிவந்தி ஆதித்தனாரைப் பற்றி என்ன சொல்ல! அவர் பத்திரிகை உலகின் எம்.எஸ்.! பண்டிதர், பாமரர் என அனைவரையும் தினத்தந்தி என்ன சொல்கிறது எனப் பார்க்க வைத்த பெருமைக்குரியவர்!

தமிழ்மொழிக்கும் தமிழகத்துக்குமான அவரது சேவைகள் பன்முகம் கொண்டவை. ஆன்மிகம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட இன்னும் பல துறைகளில் அவரது பணிகள் தனி முத்திரை பதித்தன.

சிவந்தி ஆதித்தனாரைச் சிவந்த ஆதித்தனார் என்றே சொல்லலாம். அதாவது கொடுத்துக் கொடுத்துக் கரங்கள் சிவந்த ஆதித்தனார். குணத்தால் மகாபாரதக் கர்ணனின் வாரிசாகத் தமிழகத்தில் அவ்வப்போது சிலர் தோன்றத் தானே செய்கிறார்கள்! அத்தகைய வள்ளல்களால் தானே தமிழகம் தழைக்கிறது.

கடையெழு வள்ளல்களுக்குப் பிறகு தோன்றிய தமிழகத்தின் மிகச் சில வள்ளல்களில் சிவந்தி ஆதித்தனாரும் ஒருவர். அவரது கொடையால் ஆன்மிகத் துறை, கல்வித் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்டப் பல துறைகள் வளம்பெற்றன. வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் அவர் செய்த தான தர்மங்களை இன்றும் நினைவுகூர்ந்து நெகிழ்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

*சிவந்தி ஆதித்தனார் தம் தந்தை அறிவுறுத்தியபடி பத்திரிகைத் தொழிலைப் படிப்படியாக அடிமட்டத்திலிருந்து கற்றுக் கொண்டவர். அப்படிக் கற்றுக் கொண்டால் தான் பத்திரிகைத் துறை சார்ந்த எல்லா நுணுக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அப்போதுதான் முதலாளி தொழிலாளி நல்லுறவு சிறப்பாக அமையு மென்றும் சி.பா. ஆதித்தனார் கருதியது உண்மை ஆயிற்று.

பத்திரிகைத் துறை சார்ந்த அனைத்தையும் அறிந்துகொண்ட சிவந்தி ஆதித்தனார் ஊழியர்களை வெறும் ஊழியர்களாகக் கருதாமல் தம் சொந்த சகோதரர்களாகவே கருதினார். அவர்கள் மேல் மட்டற்ற அன்பு செலுத்தினார்.

சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு தினத்தந்தி பத்திரிகை விற்பனையில் விறுவிறுவென உயர்ந்து பெரும் சாதனை படைத்தது. இதை அறிந்து பண்டித ஜவகர்லால் நேரு அவரை அழைத்துப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

செய்திகளுக்குத் தலைப்பிடும்போது அந்தத் தலைப்பு அம்புபோல் பாய வேண்டும் என்று சிவந்தி ஆதித்தனார் சொல்வாராம். செய்திகளைச் செதுக்கிச் செதுக்கி எளிய சொற்களில் எல்லோருக்கும் புரிகிற வகையில் தரவேண்டும் எனபதில் செய்தியாளர்களை மிகுந்த கவனத்தோடு இருக்கச் சொல்வாராம்.

அளவற்ற தமிழ்ப் பற்றுடைய அவர் தமிழ் மொழிக்கு ஏதேனும் பிரச்சினை வருமானால் தம் தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களைத் தமிழைக் காக்கும் போர்வாளாக மாற்றிவிடுவார். அந்த நாளிதழ்கள் எழுப்பும் தமிழுணர்ச்சியில் மக்களும் தமிழுணர்வு பெறுவார்கள். சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தியின் முகப்பில் “வெல்க தமிழ்!” என்ற வாசகத்தை இடம்பெறச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடக்கமும் அமைதியும் அவரது இனிய பண்பு நலன்களாக அவரிடம் எப்போதும் குடிகொண்டிருந்தன. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தியின் நிர்வாகப்பொறுப்பை ஏற்று ஊழியர்களை வழிநடத்திய பெருமை அவருக்கு உண்டு.

சிவந்தி ஆதித்தனார் பிறந்த நட்சத்திரம் மூலம். ஆண்மூலம் அரசாளும் என்றபடி அவர் பத்திரிகை உலகை ஆட்சி செய்தார். மகாகவி பாரதியார் நட்சத்திரமும் மூலம் தான். மூல நட்சத்திரத்தில் பிறந்த சிவந்தி ஆதித்தனார் மூலம் பத்திரிகைத் துறை தழைத்தது.

*ஆன்மிகத்தில்பெரிதும் தோய்ந் திருந்ததுசிவந்தி ஆதித்தனாரின் பக்குவப்பட்ட பொன்மனம்.கோவில் திருப் பணிகளைச் செய்வதில் பழைய சேர, சோழ, பாண்டிய மாமன்னர்களைப் போல் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் அவர்.

பழைய கோயில்களைச் சீரமைப்பது, கோயில்களின் முகப்பில் மண்டபங்கள் கட்டுவது, ஆலயங்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவது என எந்த ஆன்மிகப் பணிக்கும் அவர் தயங்கியதே இல்லை.

அவரது குலதெய்வம் செந்தூர் முருகப் பெருமான்தான். திருச்செந்தூரில் நடக்கும் முருகன் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டுச் செலவு, எப்போதும் பார்க்க மாப்பிள்ளை போல் இருந்த இவருடையதே! இவரது தங்க மனம், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்குத் தங்கமயில் செய்துகொடுத்துப் புண்ணியம் பெறவும் வழிவகுத்தது.

சிவந்தி ஆதித்தனார் செய்த ஆன்மிகத் திருப்பணிகளுக்கெல்லாம் கோபுரக் கலசமாகத் திகழ்வது தென்காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அவர் செய்த திருப்பணியே. ஒன்பது நிலைகொண்ட 178 அடி உயர ராஜகோபுரத் திருப்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்த சாதனையாளர் அவர்.

பராக்கிரம பாண்டியனும் அவன் தம்பி குலசேகர பாண்டியனும் கட்டிய தென்காசி கோயில் கோபுரம் இடி மின்னல் தாக்கிச் சேதமடைந்து 220 ஆண்டுகள் மொட்டைக் கோபுரமாகவே காட்சி தந்தது.

ராஜகோபுரத்தை மீண்டும் எழுப்பும் பணியில் ஈடுபட யாரும் முன்வராதபோது சிவந்தி ஆதித்தனார் அந்தச் சவாலைத் தாம் ஏற்றார். பெருமுயற்சி செய்து ராஜகோபுரத்தை மீண்டும் நிர்மாணித்தார். இன்று கோபுரத்தை அண்ணாந்து பார்ப்பவர்கள் எல்லாம் மனதிற்குள் அமரர் சிவந்தி ஆதித்தனாரையும் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள்.

இந்துக்கோயில்களுக்கு மட்டுமல்ல, மத நல்லிணக்கத்தைப் போற்றிய இவர் முஸ்லிம்களின் மசூதி, கிறிஸ்துவர்களின் சர்ச் போன்றவற்றிற்கும் உதவிகள் புரிந்துள்ளார்.

பாளையங்கோட்டை ஆயுத போலீஸ் குடியிருப்பில் கிறிஸ்துவக் கோயில், அடைக்கலாபுரம் கிறிஸ்துவ ஆலயம், செங்கோட்டை ஜும்மா பள்ளிவாசல் மூன்றும் அவரது உதவிகளைப் பெற்று அவரின் உயர்ந்த மத நல்லிணக்கப் போக்கிற்கு என்றென்றும் உதாரணங்களாகத் திகழ்கின்றன.

சிவந்தி ஆதித்தனாரின் ஆன்மிகப் பணிகளைக் கண்டு மனம் நெகிழ்ந்த கிருபானந்த வாரியார் சுவாமிகள், அவரை இத்தகைய உயர்ந்த பணிகளைச் செய்யவந்த அவதார புரு‌ஷர் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

*தமிழகத்தின் சுதந்திர வரலாறு துப்பாக்கி சுடுவதில் வல்லவரான ஒரு தியாகியைத் தன் பொன்னேட்டில் பதிவு செய்துள்ளது. அந்த சுதந்திரத் தியாகி தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான வ.வே.சு. ஐயர். அவர்தான் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் கலையில் பயிற்சி அளித்தவர்.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய சிவந்தி ஆதித்தனாரும் குறிபார்த்துத் துப்பாக்கி சுடும் கலையில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது வியப்பளிக்கிறது.

துப்பாக்கி சுடத் தெரிந்தவர்கள் தாம் குறித்த இலக்கைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாமல் தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற வல்லவர்கள். சிவந்தி ஆதித்தனாரின் பத்திரிகைத் துறை சார்ந்த அத்தனை நோக்கங்களும் நிறைவேறியதற்கும் வழிவழியே அவை தொடர்ந்து நிறைவேறி வருவதற்கும் அவரது இலக்கிலான கவனக் குவிப்புதான் காரணமாயிருக்கக்கூடும்.

*ஆலயம் பதினாயிரம் நாட்டல், ....அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாடினார் மகாகவி பாரதியார். ஆலயப் பணியை விடச் சிறந்தது கல்விப் பணி என்பது பாரதியார் கருத்து. ஆனால் ஆலயப் பணியையும் கல்விப் பணியையும் சேர்த்துச் செய்தவர் என்பதே சிவந்தி ஆதித்தனாரின் பெருமை.

கல்வித் துறை சார்ந்து அவர் நிகழ்த்திய சாதனைகள் பல. திருச்செந்தூரில் தம் தந்தை ஆதித்தனார் நிறுவிய கல்லூரியைப் பல்கலைக் கழகம் அளவு உயர்த்தியவர் இவர்தான்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடல் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்விவியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும் இருந்தவர். பற்பல பல்கலைக் கழகங்களில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார் இந்த மாபெரும் கல்வியாளர்.

அவரது கல்விச் சேவைகளைப் பாராட்டி அவருக்குக் கல்விக் காவலர் என்ற பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது பொருத்தம்தான்.

*விளையாட்டுத் துறையில் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார் சிவந்தி ஆதித்தனார். கைப்பந்தாட்டம் அவருக்குக் கைவந்த கலை! இந்திய கைப்பந்து விளையாட்டுச் சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர். அகில இந்திய கராத்தே பெடரே‌ஷன் நிறுவனத் தலைவர்.

மறைந்து போகவிருந்த சிலம்பம் என்னும் விளையாட்டை மீட்டெடுத்தார் தமிழர் தந்தை எனப் போற்றப்படும் சி.பா. ஆதித்தனார். சடுகுடுவை ஆசிய விளையாட்டுகளில் ஒன்றாய் மாற்றினார், தமிழர் தந்தையைத் தந்தையாகப் பெற்ற சிவந்தி ஆதித்தனார்.

உலக விளையாட்டுத் துறைக்கு இந்தியா வழங்கிய சொத்து என சிவந்தி ஆதித்தனாரைப் பற்றிச் சொல்வதுண்டு. உலக அளவில் இந்திய விளையாட்டுத் துறை நிமிர்ந்து நிற்க அவர் செய்த பணிகள் இன்னும் பலப்பல.

சிவந்தி ஆதித்தனார் தம் வாழ்நாளில் பெற்ற பட்டங்கள் பலப்பல. விஜயஸ்ரீ, செம்மனச் செம்மல், சிரோன்மணி, டாக்டர் உள்ளிட்டவை அவற்றில் சில. இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக சிவந்தி ஆதித்தனாருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவற்றையெல்லாம் விடப் பெருமையுடையது அவரால் பயன்பெற்ற ஏழை மக்கள் அவரை அன்பு ததும்ப ஐயா என அழைத்து மகிழ்ந்தது.

* இதழியல் உள்ள மட்டும்

இவர் பெயர் வாழும் இந்து

மதமுள்ள மட்டும் செய்த

மாப்பணி நிலைக்கும்`

என்று அண்மையில் காலமான கவிஞர் கா. வேழவேந்தன் இவரைக் கவிதையில் பாராட்டியுள்ளது மிகப் பொருத்தம்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும். ஆதித்தனாரின் பெருமை சிவந்தி ஆதித்தனாரின் செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டதுபோல் சிவந்தி ஆதித்தனாரின் பெருமை அவரின் வழித் தோன்றலான சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இன்று மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, கோகுலம் கதிர், ஹலோ எப்எம், தந்தி டிவி, மற்றும் பல கல்வி நிறுவனங்கள் என இன்னும் பல அமைப்புகள் தழைத்துச் செழிக்கிறதென்றால் அதன் பின்னணியில் சி.பா.ஆதித்தனார் மற்றும் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் உழைப்பும் அருளாசியும் உள்ளன என்பதே உண்மை.

வழிவழியே வந்த தமிழ்ப் பண்பாட்டில் தினத்தந்தியின் தனித்த இடம் தலை முறைகள் தாண்டியும் தழைக்கிறது. என்றென்றும் தமிழ்ப் பத்திரிகை உலகின் பேராலமரமாய் தினத்தந்தியின் உயரிய பணிகள் தழைத்துக் கொண்டே இருக்கும். அதற்கு சிவந்தி ஆதித்தனார் மனமுருகி வழிபட்ட திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருவருள் துணை நிற்கும்.

தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

Similar News