கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்திருந்தனர் ராஜியின் குடும்பத்தினர்.
தான் குடும்பத்துடன் மீண்டும் இந்தியாவுக்கே வந்து விட வேண்டும் என்பது ராஜியின் விருப்பம். இதை ஒரு பிரார்த்தனையாக மகா பெரியவாளிடம் வைத்து அவரது ஆசி வேண்டி காஞ்சிக்கு வந்திருந்தார்.
காஞ்சி ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்தார் பெரியவா.
நீண்ட வரிசையில் தானும் இணைந்து, கணவருடன் வந்து கொண்டிருந்தார் ராஜி. இதோ, இன்னும் ஒரு சில நிமிடங்களில் மகா பெரியவாளின் முன்னால் வந்து விடுவார்.
கிட்டத்தட்ட மகானை நெருங்கி விட்டார் ராஜி. அடுத்தது, ராஜியின் முறை.
அவருக்கு முன்னதாக இருந்த ஒரு அன்பர். நடுத்தர வயது இருக்கும். பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். கண்களில் ஏதோ எதிர்பார்ப்புடன் மகானையே பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்ன?’ என்பது போல் ஜாடையில் அவரைப் பார்த்துக் கேட்டார் பெரியவா.
‘‘பெரியவா... எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆசிகள் வேண்டும்.’’
அந்த அன்பர் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது ராஜிக்கு. ‘என்னடா இது... வெளிநாடு வாழ்க்கையே வேண்டாம் என்பதற்காக பெரியவாளின் ஆசி வேண்டி வந்தால், வெளிநாடு செல்ல உங்கள் ஆசி வேண்டும் என்கிறாரே ஒருவர்... எல்லாம் இந்த மகான் நிகழ்த்தும் லீலைகள்தானா?’ ராஜிக்கு வியர்த்தது.
வெளிநாடு செல்ல விரும்பும் அந்த அன்பருக்குப் பெரியவா என்ன ஆசி வழங்கினார் என்பதைக்கூட கவனிக்க முடியவில்லை ராஜியால். ஒரு சில விநாடிகளில் அந்த அன்பரும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்.
படபடப்பு இன்னும் அடங்காமல் ராஜியும் கணவரும் பெரியவாளுக்கு முன்னால் நின்றார்கள். முதலில் நமஸ்கரித்தார்கள்.
மகானின் பார்வை இவர்கள்மீது விழுந்தது. ராஜி பூரித்துப் போனார். விழி ஓரங்களில் கண்ணீர் தேங்கியது.
கலியுக தெய்வத்தை இத்தனை அருகில் பார்த்த பிரமிப்பு அகலாததால், பேச்சு வரவில்லை ராஜிக்கு. வாயைத் திறக்கிறார்.
காற்றுதான் வருகிறதே தவிர, வார்த்தைகள் வெளிப்படவில்லை.
பெரியவாளுக்கு அருகில் இருந்த தொண்டர், ‘‘தோ பாருங்கோ... பெரியவாகிட்ட சொல்ல வந்ததை சொல்லுங்கோ’’ என்று ராஜியை அவசரப்படுத்தினார்.
காரணம், பக்தர்கள் கூட்டம் கூடிக் கொண்டே போனது.
வரிசையின் நீளமானது நீண்டு காணப்பட்டது.
மகானைப் பார்த்துக் கும்பிட்ட நிலையிலேயே பேச ஆரம்பித்தார் ராஜி. தான் சவுதிக்குப் போனதை ஒரு சில வார்த்தைகளில் சொல்லி விட்டு, அங்கே தனக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களையும் குறிப்பிட்டு, ‘‘இந்தியாவுக்குத் திரும்பி வரணும்னு ஆசை பெரியவா. அதற்கு பெரியவா ஆசி வேண்டும்.’’
சொல்லி விட்டு கணவனும் மனைவியுமாக நமஸ்கரித்தார்கள்.
பெரிதாகச் சிரித்தார் பெரியவா.
ஆஹா! இந்த சிரிப்புக்குப் பின்னர்தான் எத்தனை அர்த்தங்கள்!
அந்தணர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கின்றன சாஸ்திர நூல்கள். அதாவது, கடல் தாண்டியே போகக் கூடாது.
அப்படித்தான் இருந்தார்கள் ஒரு காலத்தில்.
இறையருளாலும், குருவருளாலும் எல்லாமே அவர்களுக்கு இங்கே கிடைத்தது.
பொருள், அருள், நிம்மதி, சந்தோஷம், நிறைவு, பாசம் இப்படி என்னென்ன நல்ல வார்த்தைகள் இருக்கின்றனவோ, அனைத்தையும் போட்டுக் கொள்ளுங்கள். எல்லாமே கிடைத்தன அவர்களுக்கு.
வளமை என்பது ஒருவர் பெற்றிருக்கிற பொருட்செல்வத்தில் அல்ல.
பொருள் இருந்தும் நிம்மதியைத் தொலைத்தவர்கள் உண்டு.
வறுமையில் இருந்தாலும் கஷ்டப்பட்ட பிராமணர் என்று பெரும்பாலும் பார்க்க முடியாது. எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு நிம்மதியாகத்தான் இருந்தார்கள்.
ஆனால், சுமார் அறுபது வருட காலத்துக்கு முன் நாத்திகம் என்பது தமிழகத்தில் வேரூன்ற... பிராமணர்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஆங்காங்கே எடுக்கப்பட்டன.
விளைவு உள்ளூரில் பிழைக்க முடியாது என்று தீர்மானித்த படித்த பிராமணர்கள் இடம் பெயர்ந்தார்கள். டெல்லி, பம்பாய் போனவர்களும் உண்டு. அமெரிக்கா, அரபு தேசம் போனவர்களும் உண்டு. அப்போதைக்கு அவர்கள் எண்ணம் தாங்கள் கொண்டிருக்கிற பக்தியை விடக் கூடாது என்பதுதான்.
ஆக, பிராமணர்கள் துவக்கக் காலத்தில் விரும்பி வெளிதேசம் போகவில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
பரப்பிரம்ம சொரூபமாக அமர்ந்திருக்கும் மகா பெரியவாளுக்குத் தெரியாதா இவை எல்லாம்?
மனிதர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சாஸ்திரத்தை வளைத்துக் கொள்கிறார்கள். ஆனால், மகான்கள் அப்படி அல்ல.
அதனால்தான், மனிதர்களின் நிலை கண்டு பெரிதாகச் சிரித்தார் பெரியவா.
‘மீண்டும் இந்தியாவுக்கே வர வேண்டும்’ என்கிற தங்கள் விருப்பத்தைக் கேட்டு ஏன் சிரிக்கிறார் என்பதற்கான காரணம் ராஜிக்குப் புரிந்தும் புரியாமல் இருந்தது.
பிறகு பெரியவா திருவாய் மலர்ந்தார்: ‘‘ஒண்ணும் கவலைப்படாத... உன் ஆசைகள் அனைத்தும் பூர்த்தி ஆகி விடும்.’’
எப்பேர்ப்பட்ட அனுக்ரக வார்த்தைகள். ராஜியின் கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தது.
‘‘பெரியவா.... பெரியவா...’’ என்று அந்த மகானைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
உத்தரவு கிடைத்தது. பிரசாதம் பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் திரும்பினார் ராஜி.
அடுத்த ஒரு சில மாதங்களுக்குப் பின் இந்தியாவுக்குத் திரும்ப ஒரு அனுக்ரகமும் கிடைத்தது.
எல்லாம் மகானின் திருவாக்கே அன்றி வேறில்லை என்பதில் ராஜிக்குத் திடமான நம்பிக்கை.
அடுத்து ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
மைசூரைச் சேர்ந்தவர்கள் வெங்கட்ராம ஐயர்- சுவர்ணாம்பாள் தம்பதியர்.
பெரும்பாலும் மைசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், காஞ்சி ஸ்ரீமடத்துடன் அத்தனை தொடர்பில் இருப்பதில்லை. எனவே, மகா பெரியவாளைப் பற்றி சுவர்ணாம்பாளுக்கு அவ்வளவாகத் தெரியாது. கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர, அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை.
1950-களில் வெளியான தமிழ் தீபாவளி மலர்களில் மகா பெரியவாளின் வண்ணப்படம் முழுப் பக்க அளவுக்குப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. யதேச்சையாக இந்த மலர்களை வாங்கிய சுவர்ணாம்பாள், அதைப் படிக்கிறபோது பெரியவாளின் புகைப்படங்களையும் பார்த்தார். தன்னையும் அறியாமல் அந்த மகான் மேல் அவருக்குப் பக்தி பெருகியது.
இதை அடுத்து அந்த மலர்களில் இருந்த பெரியவா படங்களைத் தனியே எடுத்தார். அவற்றை பிரேம் செய்தார். அந்தப் படங்களைத் தன் இல்லத்து பூஜையறையில் வைத்தார். நித்தமும் பூஜிக்க ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட இதே காலத்தில் தமிழ் வார இதழ் ஒன்றில் மகா பெரியவாளின் அற்புதங்களும் அருள் வாக்குகளும் தொடர் கட்டுரைகளாக வெளி வந்து கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் படிக்கப் படிக்க... பெரியவா மீதிருந்த பக்தி அதிகமானது.
‘இப்பேர்ப்பட்ட மகானை இத்தனை நாட்களாகத் தரிசிக்காமல் விட்டு விட்டேனே’ என்று வருத்தப்பட்டார் சுவர்ணாம்பாள்.
முதன் முதலாக மகா பெரியவாளை சுவர்ணாம்பாள் தரிசித்தது கலவையில். 1975-ம் ஆண்டு.
பெரியவாளை நெருங்கி அவரிடம் பேச வேண்டும் என்கிற சுவர்ணாம்பாளின் ஆசை அப்போது நிறைவேறவில்லை. காரணம், கலவை முகாமில் அப்போது மவுனத்தில் இருந்தார் மகான். எனவே, ஆசிகளை மட்டும் பெற்றுக் கொண்டு திரும்பி விட்டார்.
அடுத்த தரிசனம் எப்போது கிடைத்தது தெரியுமா?
1978 யாத்திரையின்போது!
கர்நாடக மாநிலம் ஹம்பியில் பெரியவாளைத் தரிசித்தார். அதன் பின் ஹம்பியில் இருந்து தார்வாருக்குப் பெரியவா யாத்திரை சென்றார்.
‘மகா பெரியவாளிடம் இருந்து மந்திர தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஆசை சுவர்ணாம்பாளுக்கு.
தார்வாரில் பெரியவா இருந்தபோது தன் மனதில் இருந்த ஆசையை ஸ்ரீமடத்தில் இருந்த பலரையும் பார்த்துக் கேட்டார். ஆனால், அதற்கான பதில் கிடைக்கவில்லை.
ஸ்ரீராமஜயம் எழுதுகிற பழக்கம் 1960-ல் இருந்தே சுவர்ணாம்பாளுக்கு இருந்து வந்தது. நித்தமும் சிரத்தையாக அமர்ந்து ‘ராம’ நாமத்தை மனதுக்குள் ஜபித்துக் கொண்டு ஒரு நோட்டில் எழுதுவார்.
தார்வாரில் பெரியவா தங்கி இருந்தபோது இந்த ‘ராம’ நாம நோட்டுகளை எடுத்துக் கொண்டு போனார் சுவர்ணாம்பாள்.
அங்கு தரிசனத்தின்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
(தொடரும்)
swami1964@gmail.com