சிறப்புக் கட்டுரைகள்
திருமணம்

இரண்டாவது திருமணம் யாருக்கு வரம்-சாபம்?: 25

Published On 2022-02-15 18:08 IST   |   Update On 2022-02-15 18:08:00 IST
பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் தனித் தன்மையோடு கூடிய ஆன்மா தான். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு நீண்ட இல்வாழ்க்கை பயணம் உள்ளது. அந்த பயணத்தில் இனிமையான இல்வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. காசு, காமம், சொத்து சுகம் இவை அனைத்தையும் தாண்டி எனக்கு நீ உனக்கு நான் என்ற ஆத்மார்த்த அன்பை பகிர்ந்து வாழும் பல ஆதர்சன தம்பதிகள் உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் தனித் தன்மையோடு கூடிய ஆன்மா தான். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு நீண்ட இல்வாழ்க்கை பயணம் உள்ளது. அந்த பயணத்தில் இனிமையான இல்வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. காசு, காமம், சொத்து சுகம் இவை அனைத்தையும் தாண்டி எனக்கு நீ உனக்கு நான் என்ற ஆத்மார்த்த அன்பை பகிர்ந்து வாழும் பல ஆதர்சன தம்பதிகள் உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் திருமணமான ஆறு மாதத்தில் கோர்ட்டு படி ஏறி விவாகரத்து பெறும் தம்பதிகளும் இருக்கிறார்கள். அறுபது வயதானாலும் குழந்தைகள் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கருத்து வேறு பாட்டுடன் வாழும் தம்பதிகளும் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் கடைசி காலம் வரை தன் அன்பை, உணர்வை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.

நடைமுறை வாழ்வில் திருமண வாழ்க்கை தோல்வியை ஏற்படுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதாவது வரதட்சணை கொடுமை, மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமை, குழந்தை பாக்கியமின்மை, வாழ்க்கைத் துணையின் இறப்பு, புரிதல் இல்லாத காதல் திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால் இரண்டாவது வாழ்க்கையை நோக்கிப் பயணிக்க வேண்டிய சூழல் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

திருமணம் எனும் பந்தம் இல்லறத்தின் இனிய வரம். இன்பமான, மன நிறைவான வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை. ஒருவருக்கு ஏற்படும் இருதாரத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம். வாழ்க்கைத் துணையின் மறைவிற்கு பின்பு மீண்டும் மணம் முடிப்பது ஒரு வகை. வாழ்க்கை துணை இருக்கும் போதே இன்னொரு மணம் புரிவது இரண்டாவது வகை.

மருத்துவ வசதி குறைவாக இருந்த காலத்தில் எதிர்பாராத இடர்களால் வாழ்க்கைத் துணையை இழந்தால் ஆண்கள் மட்டுமே மறுமணம் செய்து கொண்டார்கள். ஆனால் தற்காலத்தில் பெண்களும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய காலச் சூழல் வந்து விட்டது. இயற்கை நிகழ்வினால் உருவாகும் இரண்டாம் தாரம் ஏற்றுக்கொள்ள கூடியது. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாம் தாரத்தை நாடுபவர்கள் இரண்டாம் தரமான வாழ்க்கையைத் தான் அனுபவிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. வெகு சிலருக்கு திருமணம் மன நிறைவான வாழ்க்கையை தருகிறது. ஒரு தாரத்தையே சமாளிக்க முடியாத இந்த கலி காலத்தில் இரண்டாம் தாரம் என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகத்தான் இருக்கிறது.


ஒரு திருமணம் கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக் கொண்டு இருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தின் மூலம் ஏழாமிடம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம். அதாவது வாழ்க்கை துணையால் பெறும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மன மகிழ்வைத் தருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ளவரா? தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ்வார்களா? என்பது போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு இரண்டாம் தாரம் ஏற்பட ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் சுக்ரன் கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முதல் தாரத்துடன் தேவையற்ற வம்பு வழக்கு அல்லது பிரிவினையை ஏற்படுத்துகிறது. ஜனன கால ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2-ம் இடத்திற்கு அல்லது களத்திர ஸ்தானம் எனும் 7-ம் இடத்திற்கு எத்தனை கிரகங்கள் சம்பந்தம் உள்ளதோ அத்தனை நபர்கள் திருமண வாழ்வில் சம்பந்தம் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதாவது 7-ம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை திருமணங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

7-ம் இடத்திற்கு சூரியன், செவ்வாய் சேர்க்கை, குருச் சுக்ரன் சேர்க்கை இருந்தால் இருதார பலன் உண்டு. சுக்ரன், சனி சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. ஆனால் பொருத்தமற்ற வாழ்க்கை துணை அமைந்து வாழ்க்கைத் துணையால் அவமானம், மனக்கசப்பு உண்டாகும். அதே போல் சூரியன், சுக்ரன் சேர்க்கை, சூரியன் செவ்வாய் சேர்க்கை களத்திர காரக கிரகங்களை பலவீனமடையச் செய்வதால் மறுமணம் நடக்கும்.

சுக்ரன் சந்திரன் சேர்க்கை இருந்தால் மாமியார், மருமகள் கொடுமையால் குடும்பம் பிரியும். ஏழாம் இடத்தில் பதினொன்றாம் அதிபதி நிற்பது அல்லது பதினொன்றாம் இடத்தில் ஏழாம் அதிபதி அமரும் போது 7-ம் அதிபதி பலம் குறைந்து 11-ம் அதிபதி வலுப்பெற்றால் வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் செல்லும்.

2, 7-ம் அதிபதிகள் 11-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுதல் அல்லது 11-ம் அதிபதி 2, 7-ம் பாவகத் தோடு சம்பந்தம் பெறும் போது பொதுவாக 7-ம் அதிபதி அல்லது 7-ல் நின்ற கிரகம் புதன், குரு, செவ்வாய், சூரியனின், ராகு-கேதுக்களின் நட்சத்திர சாரங்களைப் பெறக்கூடாது.

இதில் புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் இரண்டாவது வாழ்க்கையை ஏற்படுத்தும். குரு,செவ்வாய், சூரியன் உடைபட்ட நட்சத்திரங்கள். இவற்றின் 4 பாதங்களும் இரண்டு ராசிகளுக்கு சம்பந்தம் பெறுவதால் திருமண வாழ்க்கை உடையும் வாய்ப்பு அதிகம். மேலும் ராகு-கேதுக்கள் பிரிவினையை ஊக்குவிக்கும் கிரகங்களாகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜு, யோனி பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினரை பிரிக்கும்.11-ம் பாவகத்திற்கு திரிகோணதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படும்.

11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல், 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும்போது இரு தாரம் ஏற்படும். 7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். ஜென்ம லக்ன அடிப்படையில் இருதார அமைப்புகள் ரி‌ஷபம், மிதுனம், கடகம், துலாம், மீனம் ஆகிய 5 லக்னத்திற்கு இயல்பாகவே இருப்பதால் இரு தார யோகம் உண்டு.

ரி‌ஷபம் : கால புரு‌ஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்ரனின் ஆட்சி வீடு ரி‌ஷபத்தில் உச்சம் பெறும். ராகு ஏழாம் இடமான விருச்சிகத்தில் நீசம் பெறும். விருச்சிகம் கால புரு‌ஷ ஸ்தானத்தில் எட்டாம் இடம். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்க முடியாத மறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.

மிதுனம் : இந்த லக்னம் கால புரு‌ஷ ஸ்தானத்தில் மூன்றாம் இடம் என்பதால் அடிக்கடி வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். லக்னாதிபதி புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். புதனும், சுக்ரனும் நட்பு கிரகம். மேலும் சுக்ரன் மிதுனத்திற்கு 5, 12-ம் அதிபதி என்பதால் தக்க நேரத்தில் துணையாக இருந்து இரண்டு தார யோகத்தை செய்து காட்டுவார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் புதன், சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் இரண்டு திருமணம் உண்டு.

கடகம் : கடக லக்னத்தினருக்கு சுக்ரன் 11-ம் அதிபதி. சுக்ரன் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.

துலாம் : கால புரு‌ஷ ஸ்தானம் ஏழாம் இடம். இதன் அதிபதி சுக்ரன். சுக்ரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி தசை சுக்ர புத்தி அல்லது சுக்ர தசை, சனி புத்தியால் இரண்டாம் திருமணம் நடக்கிறது.

மீனம் : இயல்பாகவே இரட்டை தன்மை நிறைந்த லக்னம். மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.

பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.

இரண்டாம் திருமணம் யாருக்கு வரம் : இளைய தாரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஏழு, பதினொன்றாம் இடம் சுப வலுப்பெற்றால் இரண்டாம் திருமண வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தரும். பதினொன்றாம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி, உச்சம் பெற்று ஏழாம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் இளைய மனைவியால் யோகம் உண்டு. அதே போல் இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் அதிபதி வலுப்பெற்று தசை நடத்தினால் இளையதாரத்தால் பணம், புகழ் கிட்டும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பதவி, புகழ், அந்தஸ்து, கவுரவமான வாழ்க்கை உண்டு. லக்னம் ஏழாம் இடத்திற்கு சுக்ரன் செவ்வாய், சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் இரண்டாம் திருமணத்தில் நிம்மதியாக இருக்கிறார்கள்.

இரண்டாம் திருமணம் யாருக்கு சாபம் : பதினொன் றாம் இடம் அசுப வலுப்பெற்றால் இரண்டாம் வாழ்க்கை துரதிர்ஷ்டத்தை தரும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் மூன்று, நான்காம் இடத்துடன் சம்பந்தம் பெற்றால் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வைத்த கதை தான். பதினொன்றாம் அதிபதி ஆறு, எட்டு, பனி ரெண்டாம் இடத்துடன் சம்பந்தம் பெற்று குருப் பார்வை பெற்றால் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்து இளைய தாரத்தால் வம்பு, வழக்கு கட்டப் பஞ்சாயத்து என கடனாளியாக வாழ்வார்கள். சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மற்றும் தவறான இன்பத்திற்காக இரண்டாவது வாழ்க்கையை தேடினால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கசக்கும். ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் கேது, செவ்வாய் கேது சம்பந்தம் இருப்பவர்கள் அனுசரித்து போகாமல் பல திருமணம் செய்தால் சாபம் நிறைந்ததாக இருக்கும்.

உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்காக மறு திருமணம் செய்யலாம். உண்மையில் வாழவே முடியாத வகையில் பிரச்சினை இருந்தாலும் இரண்டாம் திருமணம் நடத்தலாம்.

சிறு சிறு கருத்து வேறுபாட்டிற்கு பிரிய நினைத்தால் எத்தனை திருமணம் செய்தாலும் மண வாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கும். பலர் இது போன்ற காரணத்தினால் நல்ல வாழ்க்கைத் துணையை இழந்து பிறகு வருந்துகிறார்கள். அதேபோல் வாழ்க்கைத் துணையின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை சரி செய்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். அதீத எதிர்பார்ப்பு மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத பல திருமணங்களே இன்று நீதிமன்ற வாசலிலும், இணைய முடியாமல் வீட்டிலும் மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான ஒன்றல்லவா?

ஒரு பிரச்சினை என்று வரும் போது ஒருவர் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கும். அந்த பிரச்சினையில் கணவன், மனைவி தவிர்த்து 3-ம் நபரின் தலையீடு பிரச்சினையை பெரிது படுத்தும். குறிப்பாக தம்பதியினரின் பெற்றோர்கள், நண்பர்கள். இதில் எத்தனையோ நண்பர், நண்பிகளே வில்லி, வில்லனாக மாறுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பிரிந்த பிறகு தவறை உணர்வதை விட வாழும் போதே விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிமையாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் மரபு.

பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோ‌ஷமாக இருந்தாலும் அந்தத் தோ‌ஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோ‌ஷம்தான். அந்த சந்தோ‌ஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடு வது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.

ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படி யாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.

Similar News