செய்திகள்

அரசின் திட்டங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தாது ஏன்?: ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கேள்வி

Published On 2016-05-02 15:35 IST   |   Update On 2016-05-02 16:45:00 IST
அரசின் திட்டங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தாதது ஏன்? என்று ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

தேவகோட்டை:

தேவகோட்டை அண்ணா அரங்கில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்ற உறுப்பினர்களாக யாரிடமும் நாங்கள் பணம் வாங்காமல் ஏழை, எளிய மக்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம். எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே கூடாது. தமிழகத்தில் தான் கடமையை செய்வதற்காக லஞ்சம் பெறப்படுகிறது.

அம்மா என்ற பட்டத்தை யார் கொடுத்தது. தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆர்.படத்தை போடுகின்றனர். அம்மா குடிநீர், அம்மா உணவகம் என எதற்கு எடுத்தாலும் அம்மா பெயரை பயன்படுத்துகிறார். எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு இருந்தால் ஏன் அவர் பெயரை பயன்படுத்த வில்லை. எம்.ஜி.ஆர். கொடுத்தது தான் இரட்டை இலை. இந்த இரட்டை இலையை எடுத்து விட்டு சேவல் சின்னத்தில் நின்று பாருங்கள், நீங்கள் வெற்றி பெருவீர்களா என்று.

அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் நடக்கிற போட்டி இது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அது அதர்மம். மக்களுக்காக நான் என்கிறார் ஜெயலலிதா. அவருக்கு வயிற்றுப்பசி என்பது தெரியுமா? வயிற்றுப்பசியைப் பற்றி எனக்கு தெரியும்.

பல ஆயிரம் கோடி ஊழல் செய்து பணபலத்தை வைத்துள்ளனர். ஆனால் எங்களிடம் மக்கள் பலம் மட்டுமே உள்ளது. இந்த 6 பேர் கூட்டணி ஆறுமுகம், ஏறுமுகமாகிறது. பதவி ஆசையால் 93 வயதில் கருணாநிதி ஊரைச் சுற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News