செய்திகள்

டெல்லியில் இப்போது எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்.சுக்கும் தர்மயுத்தம் நடக்கிறது- தினகரன்

Published On 2018-07-27 05:24 GMT   |   Update On 2018-07-27 05:24 GMT
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இப்போது தர்மயுத்தம் டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #OPS #EPS
மதுரை:

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வினர் பேசுகின்ற போது பா.ஜ.க. மட்டும்தான் பரிசுத்தமான கட்சி, அதில் உள்ள சாதாரண உறுப்பினர்கள் முதல் பெரிய பதவியில் உள்ளவர்கள் வரை தேவதூதர்கள் போன்று, விவாதத்தின்போதும், பொது மேடைகளில் பேசுகின்ற போதும் பார்க்கலாம். அவர்களுக்கு மட்டும்தான் கொள்கை சித்தாந்தம் இருப்பது போன்றும், மற்ற கட்சிகளுக்கு எல்லாம் சாக்கடைகளில் இருந்து வந்தது போன்றும் பேசுகிறார்கள்.

ஒரு அமைச்சரின் உறவினருக்கு ராணுவ ஹெலிகாப்டர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு நிர்மலா சீதாராமன் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில்தான் டெல்லி போனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமிக்கும்- ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இப்போது தர்மயுத்தம் டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பதவி இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. முதலமைச்சர் பதவி வழங்கியவர்களுக்கே துரோகம் செய்தவர்கள், மற்றவர்களுக்கு துரோகம் செய்திட எவ்வளவு நாளாகும்.

அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொது நலத்திற்கு சொன்னதை, சுயநலத்திற்காக பயன்படுத்தும் அளவுக்கு போயிருப்பதுதான் இன்றைய நிலை. இந்த ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் பா.ஜ.க. வேறு வழியின்றி மழுப்பல்தான் சொல்ல முடியும். ஏர் ஆம்புலன்சை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்? அது தவறு அதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 6, 7 மாதத்தில் தேர்தல் வரும்போது இதற்கான விடைகள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்.

பா.ஜ.க.விற்கு பயந்து பொதுச்செயலாளரையும், என்னையும் கட்சியை விட்டு ஒதுக்கினார்கள். நான் யாரையும் மிரட்டும் சுபாவம் கிடையாது. இவர்கள் சோதனை பயத்தினால் என்னை ஒதுங்க சொன்னார்கள். அவர்களுக்குதான் இப்போது இந்த நிலைமை வந்திருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் என்னோடு ஆட்டோவில் தொங்கிக் கொண்டு ஓட்டு கேட்டவர்கள், தேர்தல் ஆணையத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்று அபிடவிட் வழங்கியவர்கள் திடீர் என்று மாற வேண்டிய அவசியம் என்ன?

இனி இவர்கள் நிலைமை போணியாகாது என்பதால் இவர்களை பா.ஜ.க.வினர் கழட்டி விடுகின்றனர்.



எங்களை மக்கள்தான் கைதூக்கி விட வேண்டுமே தவிர, வேறுயாரும் எங்களை கைதூக்கி விட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் அம்மா வழி வந்த உண்மைத் தொண்டர்கள், கட்சித் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தால்தான் அதுதான் எங்களுக்கு நிரந்தர ஆதரவு. மாயக்கரங்கள் எல்லாம் உதவி செய்தால் மக்கள் எங்களை நிராகரித்து விடுவார்கள்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பில் நீதி எங்களுக்கு கிடைக்கும். நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.

பாராளுமன்றத்தில் 28 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்பதற்காகத்தான் கவனிப்பதற்காக தங்கமணியும், வேலுமணியும் டெல்லி சென்று வந்தார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இதுபோன்றதொரு அரசு தமிழகத்திற்கு தேவையா? இதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்களா? அம்மா போன்ற எவ்வளவு பெரிய ஆளுமை. தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்காத ஆளுமை பெற்ற ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள். இதுபோல் நடந்து கொள்வதற்கு பெயர் என்ன? இது துரோகம். அதனால்தான் இந்த ஆட்சி போக வேண்டும் என்கிறேன்.

நான் முதலமைச்சர் ஆவதற்காக அல்ல. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பு அலைகள் இருக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற முடியாது என்று சொன்னவர்கள், தினகரன் பின்னால், கட்சியில்லை, எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்று சொன்னவர்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் யோசித்தார்கள். எங்கள் தொண்டர்கள் கடுமையாக உழைத்தார்கள். துரோகத்திற்கு எதிராக எங்களுக்கு வாக்களித்தார்கள்.

சட்டமன்றத் தேர்தல் வந்தால் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். நான் சொல்வது நடக்கும். டி.டி.வி.தினகரன் என்கிற நபரின் ஆயுட்காலம் இருக்கின்றவரை என்னால் அந்த கட்சியோடு (பா.ஜ.க.) செல்ல முடியாது. காரணம் தமிழகத்தில் மதவாதத்திற்கு இடமில்லை. தனிப்பட்ட முறையில் விரோதம் எல் ம் கிடையாது. எங்கள் கொள்கைக்கும், அவர்களது கொள்கைக்கும் ஒத்துவராது.

எந்த பலன் கருதியும், வெற்றி, தோல்வியை வைத்து அரசியல் ஆதாயத்திற்காக கூட்டு செல்பவன் அல்ல என்று தெளிவாக சொல்லி விட்டேன்.

உண்மையிலேயே மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால், இங்கு நடக்கும் ஆட்சியை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருகிறார்களோ, அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக அமையும். எந்த மாயக்கரங்களும் எங்களுக்கு தேவையில்லை. மக்களின் ஆதரவு இருந்தால் போதும்.

இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDinakaran #OPS #EPS
Tags:    

Similar News