செய்திகள்

அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2018-07-13 14:42 IST   |   Update On 2018-07-13 14:42:00 IST
அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல என்றும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju
மதுரை:

அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை காளவாசலில் ரூ.55 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை வருகிற 15-ந் தேதி காலை 8.40 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது மதுரை நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமான திட்டமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நவீன வாகன நிறுத்துமிடம், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்சை இணைத்து உயர்மட்ட மேம்பாலம், வைகை ஆற்றை சீரமைப்பதுடன் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள், அப்பல்லோ சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், குருவிக்காரன்சாலையில் மேம்பாலம்.

ரூ1,250 கோடி மதிப்பில் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம், கீழவாசலில் உயர்மட்ட மேம்பாலம், கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் போன்ற சிறப்பான திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மத்திய அரசுடன், அ.தி.மு.க. அரசு இணக்கமாக இருப்பதால் வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற முடிகிறது.

தரைவழி போக்குவரத்துக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு, தமிழகத்துக்கு தந்துள்ளது.

மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதை தேர்தல் கூட்டணியாக கருதிவிட முடியாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

தேர்தல் நேரத்தில் கட்சிகள் அணி மாறுவது உண்டு. தொகுதி பங்கீட்டில் கூட வெளியேறிய கட்சிகளும் உள்ளன.


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் லட்சியத்தை நோக்கி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வழி காட்டுதலுடன் பயணம் செய்து வருகிறோம்.

அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #SellurRaju
Tags:    

Similar News