கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது - கனிமொழி
புதுச்சேரி:
தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் புதுவை கம்பன் கலையரங்கில் நடந்தது.
கருத்தரங்கிற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாற்று திறணாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் நியமன பதவிகளாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைகள் படி அவர்கள் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுவை கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா இந்து, இந்தி, இந்துஸ்தாகளை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நடந்தால் சிறு பான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள் ஆகியோர் அடிமைகள் ஆக்கப்படுவார்கள்.
எனவே மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும், நமது உரிமைகள் நிலைபெற மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும்.
கருத்தரங்கில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. செயல் திட்டகுழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். சென்னை-சேலம் பசுமை வழிசாலை திட்டத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் அரசு செயல்பட்டு வருகிறது என்றார். #Kanimozhi #GovernorKiranBedi