செய்திகள்

இரவு நேரத்தில் வீடுபுகுந்து கைது செய்வது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Published On 2018-06-26 16:48 IST   |   Update On 2018-06-26 16:48:00 IST
இரவு நேரத்தில் வீடுபுகுந்து கைது செய்வது ஏன்? என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #TNassembly #EdappadiPalaniswami

சென்னை:

சட்டசபையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உதயசூரியன் (தி.மு.க.) பேசியதாவது:-

தமிழகத்தில் பொதுவாக போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் சிலரை கைது செய்யாமல் விடுவது உண்டு. சிலரை கைது செய்வது உண்டு. இன்னும் சிலரை இரவில் கைது செய்வதும் உண்டு.

எங்கள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தவர் 4 முறை போலீஸ் துறைக்கு மந்திரியாக இருந்தவர்.  நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைத்து அவரை கைது செய்த படலம் உண்டு.

அது என்ன இரவு நேரத்தில் கைது செய்வது? வீடு இருக்கிறது, நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். யாரும் எங்கும் ஓடிவிட மாட்டார்கள். ஏன் இரவு நேரத்தில் புகுந்து கைது செய்ய வேண்டும்.

பெரிய நிகழ்வுகளாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். கிராமத்தில் வாய்க்கால் வரப்பு தகாராறு, அண்ணன்- தம்பி தகராறு, ஒரு பெண்ணை அடுத்தவர் வீட்டு பையன் இழுத்துச் சென்ற தகராறு இதுபோல் பல்வேறு வி‌ஷயங்களில் இரவு நேரத்தில் தாய்- தந்தையரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கைது செய்கிறார்கள். இந்த நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறைக்கு தகுந்த வழிமுறையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

காவல்துறையினர் இரவு நேரத்தில் சென்று கைது செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்கள். உங்களுடைய ஆட்சி காலத்தில் நாங்கள் எல்லாம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பொழுது எங்களையும் கைது செய்திருக்கிறீர்கள்.

நானே 6 முறை கைது செய்யப்பட்டு இருக்கிறேன். பல்வேறு போராட்டங்களின் வாயிலாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்கள் ஆட்சியிலும் கைது செய்திருக்கிறீர்கள். ஆகவே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு காவல் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறுனார்.

தொடர்ந்து உதய சூரியன் பேசும்போது, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை இன்னும் நடைபெறுவதாக கூறினார். அதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

உங்கள் ஆட்சியிலும் போதைப் பொருள்கள் விற்கப்பட்டிருக்கின்றது. அந்த தகவலை நாளைக்கு சொல்கிறேன். ஆகவே, ஆட்சி யார் செய்தாலும், போதைப் பொருள் விற்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும். இன்றைக்கு அம்மாவினுடைய அரசைப் பொருத்தவரைக்கும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆகவே, போதைப் பொருள்கள் வெளியிலே விற்கப்படுகின்றது என்று தகவல் கிடைத்தவுடன் காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். என்னவோ அம்மாவினுடைய அரசில் தான் போதைப்பொருள்கள் விற்பதைப்போலவும், இவர்கள் ஆட்சியில் போதைப்பொருள் விற்காதது மாதிரியும் ஒரு கற்பனையான தோற்றத்தை இங்கே உருவாக்கக்கூடாது.

உங்களுடைய ஆட்சியிலும் சரி, எந்த ஆட்சியாக இருந்தாலும், போதைப் பொருள்கள் விற்பது தவறு, அது காவல் துறையின் கவனத்திற்கு வந்தபொழுது, அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNassembly #EdappadiPalaniswami

Tags:    

Similar News