செய்திகள்

10 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்

Published On 2018-06-11 02:53 GMT   |   Update On 2018-06-11 02:53 GMT
தி.மு.க.வில் சமீபத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, 10 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட வாரியாக கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களில், சில இடங்களில் பகுதிக் கழக, ஒன்றிய கழக செயலாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருப்பூர் வடக்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, நாமக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்களிலும், சில இடங்களில் மாநகரப் பொறுப்பாளர், பகுதி கழகப் பொறுப்பாளர், நகரக் கழகச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, அந்தப் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் இரா.தமிழ்மணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தென்றல் செல்வராஜ் புதிதாக கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.காந்திசெல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News