செய்திகள்

கமல்ஹாசனும், ரஜினியும் சுயநலவாதிகள்- ஈஸ்வரன்

Published On 2018-06-07 09:50 IST   |   Update On 2018-06-07 09:50:00 IST
கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
ஈரோடு:

கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
Tags:    

Similar News