செய்திகள்

தமிழக அரசு, மோடி அரசாக ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி குற்றச்சாட்டு

Published On 2018-05-28 09:21 GMT   |   Update On 2018-05-28 09:21 GMT
தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது என்று கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். #KVeeramani
கும்பகோணம்:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட நவீன என்கவுண்டர் ஆகும். என்கவுண்டரில் தனி நபரை ஓட வைத்து சுடுவார்கள். இங்கு கூட்டத்தை கூட்டி அதில் தனி நபரை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உயிருக்கு ரூ.10 லட்சம் தருகிறோம், ரூ.20 லட்சம் தருகிறோம் என்று விலை கூறுகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் அவர் அரசுக்கு சாதகமான கருத்தையே கூறுவார். எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தூத்துக்குடியில் 144 உத்தரவை விசித்திர சட்டமாக்கி விட்டனர்.


தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மோடி சொல்வதையெல்லாம் கேட்டு செயல்படுகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததால் அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. அதை ஏன் செய்யவில்லை.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். குருகுல கல்வியை விட மோசமான கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது.

பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் ஓராண்டுக்குள் அந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #KVeeramani
Tags:    

Similar News