எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - புதுவைக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா? நாராயணசாமி கேள்வி
ஆலந்தூர்:
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று கூறிய தீர்ப்பில் சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் புதுவை மாநிலத்தை பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே மாதிரியான பிரச்சினையில் நீதிமன்றத்தில் 2 விதமான தீர்ப்பு வந்துள்ளது. இதுபற்றி வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக புதுவை கொறடா மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்த முரணான தீர்ப்பு பற்றி நாங்கள் வலியுறுத்துவோம். 2 விதமான தீர்ப்பு பற்றி மக்கள் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே போல் புதுவையிலும் நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
பிரதமர் மோடி புதுவை வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நானும், அமைச்சர்களும் கடிதம் கொடுத்துள்ளோம்.
சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். பிரதமர் மோடி எதற்கும் செவி சாய்க்கவில்லை. பிரதமர் நினைத்திருந்தால் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #CMNarayanasamy #MLADisqualifycase