ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. சதி: ஈஸ்வரன் குற்றச்சாட்டு
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் மாலைமலர் நிருபருக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி படுகொலைக்கு முக்கிய காரணம் தமிழக அரசு காவல்த்துறை நிலைபாடு தான். வெளி மாநிலங்களுக்கு கொள்ளையர்களை பிடிக்க செல்லும் போலீசார் ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகள் தலைமையில் தான் செல்ல வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சென்றிருக்க கூடாது. சொந்த மாநில இன்ஸ்பெக்டர்களையே மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது வெளி மாநில இன்ஸ்பெக்டர்களை எப்படி மதிப்பார்கள்?
எனவே உயர் அதிகாரிகள் தலைமையில் செல்லும் போது எந்த மாநிலத்துக்கு செல்கிறோமோ அந்த மாநில உயர் அதிகாரிகள் சகஜமாக பேசுவார்கள். அதன் மூலம் வேண்டிய உதவிகள் கிடைக்கும். முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா என்றால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகிறார்கள். அப்படி இருக்க பெரிய கொள்ளையர்களை பிடிக்க 5 பேர் கொண்ட போலீசார் செல்வது எப்படி சரியாகும்?.
வெளி மாநில கொள்ளையர்களை பிடிக்க செல்லும் போது 200 பேர் கொண்ட சிறப்பு படையுடன் செல்ல வேண்டும். அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக எந்த மாநிலத்துக்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இது போன்று சம்பவம் இனி மேல் நடக்காது.
ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்த வரை மீண்டும் பணப்பட்டுவாடா ஆரம்பித்து விட்டது. கடந்த முறை எந்த காரணத்திற்காக தேர்தலை நிறுத்தினார்களோ? இந்த முறையும் அதே தவறு தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்தல் ஆணையர் பணபட்டுவாடாவை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கவில்லை. வருமான வரித்துறையினர் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
நேற்று கூட பணபட்டு வாடா செய்ததாக தி.மு.க.வினர் சிலரை போலீசிடம் பிடித்து கொடுத்தனர். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று விடக் கூடாது என்பதால் ஆளும் அ.தி.மு.க.அரசு தேர்தலை நிறுத்த இது போன்ற சதி வேளையில் ஈடுப்பட்டுள்ளது. இந்த முறையும் தேர்தல் ரத்தானால் மக்களுக்கு தேர்தல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும். எனவே தேர்தல் ஆணையம் இனியாவது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வவாறு அவர் கூறினார்.