செய்திகள்

கடைசி மீனவரை மீட்கும்வரை தேடுதல் வேட்டை நீடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-12-12 13:11 IST   |   Update On 2017-12-12 13:11:00 IST
கன்னியாகுமரி கடலில் மாயமான கடைசி மீனவரை மீட்கும்வரை தேடுதல் வேட்டை நீடிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி கடலில் ‘ஒக்கி’ புயல் காரணமாக மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

44 மீனவ கிராமங்களிலும் ஒரு குழு அமைக்கப்பட்டு அரசு சார்பாக ஒரு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மீனவர்களை தேடும் பணி நடக்கிறது.

புயல் காற்று காரணமாக அண்டை மாநிலம், தீவுகளில் மீனவர் தஞ்சம் அடைந்து இருக்கலாம். அவர்களை மீட்க கடற்படை, காவல்படை, விமானப்படை போர்க்கால அடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டு வருகிறது. கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் வேட்டை நடைபெறும்.


எந்த நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் இருந்தாலும் நவீன கப்பல், விமானம் மூலம் அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாயமான மீனவர்கள் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். பத்திரமாக திரும்பி வருவார்கள்.

கடலில் கண்டு பிடிக்கப்பட்ட மீனவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர் தான் அடையாளம் காட்ட வேண்டும். இல்லையெனில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். அடையாளம் காட்டப்பட்ட மரணம் அடைந்த மீனவர்களின் எண்ணிக்கையைத்தான் நாங்கள் கூறி உள்ளோம்.

முதல்-அமைச்சர் ஏற்கனவே புயல் சேதம் குறித்தும், மீனவர்கள் பற்றியும் 4-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து பல உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்து உள்ளார்.

ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News