செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு நீட் பற்றி முழுமையாக தெரியுமா?: தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

Published On 2017-09-09 13:56 IST   |   Update On 2017-09-09 13:56:00 IST
நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும் என தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இன்றைய கால கட்டத்தில் நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. நேற்று தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு மருத்துவ இடங்கள் கிடைத்து இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அப்படி பேசி இருந்தால் அந்த கூட்டத்திற்கே அவசியம் இல்லாமல் போய் இருக்கும். தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து தமிழக மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து தங்களது அரசியல் சுயலாபத்துக்காக மாணவர்களின் நலனை கெடுத்து தங்கள் அரசியல் கோட்டையை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனாலேயே நீட்டை எதிர்க்கிறார்கள்.

பா.ஜனதா இதற்கு ஒரு போதும் அனுமதிக்காது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நமது மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள் அப்படி இருந்தும் ஏன் நீட் தேர்வில் முதல் 25 இடங்களில் வரவில்லை என்று கேட்கிறார். ஏனென்றால் திறமை சாலியான மாணவர்கள் முதலிடத்தில் வர முடியாததற்கு காரணம், உங்களுடைய கல்வி தரம் அப்படி இருக்கிறது. நமது கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனி நீட் தேர்வை நீங்கள் எதிர்க்க முடியாது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது ஒன்றே வழி.

தி.மு.க. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்துங்கள். வருகிற 13-ந்தேதி கூட போராட்டத்தை அறிவித்து இருக்கிறார். அந்த போராட்டம், இந்த போராட்டம் என்று பயமுறுத்தி மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார்.

நீட் தேர்வு பற்றி என்னவென்றே தெரியாத 5-ம் வகுப்பு மாணவர்களை ரோட்டில் நிறுத்தி கம்யூனிஸ்டுகாரர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது மன்னிக்க முடியாதது.

வேலூர் சி.எம்.சி.யில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் நீட் எதிர்ப்பு என்று சொல்கிறார்கள். சி.எம்.சி. மீது பல வழக்குகள் உள்ளது. அங்கு 80 சதவீதம் இடங்கள் சிறுபான்மையினருக்குத்தான் கொடுக்கிறார்கள். 80 சதவீதம் பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அப்படியானால் பெரும் பான்மையினருக்கு அங்கு மறுக்கப்படுகிறதா?

இன்று நடிகர்கள் எல்லாம் படிப்பவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஆனால் நீட் தேர்வு பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்.

இவர்கள் எல்லாம் பல கோடிக்கு நடித்துக் கொண்டு இருக்கும்போது நாங்கள் எல்லாம் தெருக்கோடியில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். இவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், அனிதாவை கொன்றது நீட் அல்ல. நீட் அரசியல். பணத்தின் மீது நடந்த அரசியல், இன்று பிணத்தின் மீது நடக்க ஆரம்பித்து இருக்கிறது.

ஏழை மாணவர்களின் கல்வியைப் பற்றி பேசுகிறீர்களே?. இத்தனை ஆண்டுகள் எவ்வளவு ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு யாரிடமாவது இருக்கிறதா? இதை திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் விளக்குவோம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Similar News