கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் எங்களுக்கு தார்மீக ஆதரவு: திவாகரன் பேட்டி
ஈரோடு:
ஈரோட்டில் நடந்த அ.தி. மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சசிகலாவின் தம்பி திவாகரன் நிருபர்களி டம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். ஆனால் கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் 48 எம்.எல்.ஏ.க் கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி திறமையான நிர்வாகியாக இருந்தாலும் அவரால் கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடியாது.
தமிழகத்தில் ஊழல் அதிகமாக காணப்படுகிறது. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 2 லட்சமும், வனத்துறை பணி இட மாறுதல், உயர் பதவிகளுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது.
தமிழகத்தை கடந்த 63 ஆண்டுகளாக ஆண்ட தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடனாக இருந்தது. ஆனால் கடந்த 2011 முதல் 2016 வரை அது ரூ. 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மின் துறை அமைச்சர் தங்கமணி தட்கல் முறையை அமல்படுத்தி ஊழல் செய்கிறார். தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்று அவர் கூறுகிறார். ஆனால் மின்சாரமே இல்லை.
விவசாயிகளுக்கு மும்முனை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மட்டுமே மின்சாரம் உள்ளது.
சசிகலா சிறையில் இருப்பதற்கு தி.மு.க. தொடர்ந்த வழக்குதான் காரணம். ஆனால் தற்போது ஆளும் கட்சியினர் மீது தி.மு.க. ஏன் வழக்கு தொடரவில்லை?
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்டபட 5 அமைச்சர்கள் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கிப்போன கப்பலின் கேப்டன் போல உள்ளார்.
சபாநாயகர் தனபால் முதல்-அமைச்சராக வர வேண்டும். அப்போதுதான் கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள பிரச்சினை ஒழியும்.
இவ்வாறு திவாகரன் கூறினார்.