செய்திகள்

சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய பரபரப்பு சி.டி.: அமைச்சர் உதயகுமார் வெளியிட்டார்

Published On 2017-08-31 14:09 IST   |   Update On 2017-08-31 14:09:00 IST
சசிகலா குடும்பத்தை பற்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய சி.டி.யை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ளார்.
சென்னை:

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் கடை நிலை தொண்டன் என்ற அடிப்படையில் 2 சி.டி.க்களை வெளியிட்டுள்ளேன். ஒன்று 30-12-2011 அன்று நடந்த கட்சிக் கூட்டத்தில் மறைந்த முதல்வர் அம்மா உரையாற்றிய சி.டி.யாகும்.

இதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் (சசிகலா குடும்பம்) பற்றி தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற பேச்சு விவரங்கள் அதில் உள்ளன.

மற்றொரு சி.டி. 20-11-2013 அன்று எடப்பாடி பழனிசாமி இல்ல திருமண விழாவில் அம்மா பேசிய பேச்சு விவரங்கள் அடங்கியுள்ளது.

1974-ம் ஆண்டில் கட்சியின் கிளை செயலாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணியாற்றியது முதல் அவர் கட்சிக்கு எப்படி உறுதுணையாக இருந்தார். விசுவாசமாக இருந்தார். படிப்படியாக அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்தது போன்ற விவரங்கள் குறித்து பேசியுள்ளார். அது வாக்குமூலமாக, மதிப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வை சிலரின் சுயநலத்துக்காக பலி கொடுக்கக்கூடாது என்பதற்காகவும், அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்கள் இதனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதனை வெளியிடுகிறேன்.

இப்போது கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் குடும்பத்தின் நிலை என்ன? அவர்களை அம்மா எந்த நிலையில் வைத்திருந்தார்கள் என்பது தெரியவரும்.

அ.தி.மு.க.வில் இல்லாத தங்களை இருப்பதாக காட்டிக்கொண்டு தொண்டர்களை குழப்புகிறார்கள். பதவி ஆசையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.


10 ஆண்டுகள் என்ன நடந்தது? அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள், கட்சியில் அங்கீகாரம் பெற முடியாதவர்கள், அவரது மறைவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பங்கு பெற வேண்டும் என்ற வெறியில் குழாயடி சண்டையை விட, தெரு சண்டையை விட மிக மோசமாக சண்டை போடுகிறார்கள்.

புரட்சித்தலைவரால், அம்மாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்குவதாக அறிக்கை விடுகிறார்கள். தமிழக மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சுயநலத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அம்மா வகுத்து கொடுத்த பாதையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். இந்த அரசு சேவையாற்றும் நேரம் இது. இந்த நேரத்தில் தேவையில்லாமல் பதவி ஆசையில் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். தனி நபரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

இதனை பார்த்து மக்கள் முகம் சுழிக்கிறார்கள். அறுவறுக்கத்தக்க வகையில் இந்த நடவடிக்கை இருக்கிறது. அம்மாவின் ஆசியுடன் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசை நடுநிலையாளர்கள் பாராட்டுகிறார்கள்.

இந்த அரசு அம்மாவால் அங்கீகரிக்கப்பட்டவர்களால் தான் வழி நடத்தப்படுகிறது. அதனால் தொண்டர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும். ஆட்சி, கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் மனநிலையாகும்.

பிரிந்த இரு அணிகளும் சேருவதற்கு தினகரன் 60 நாட்கள் ‘கெடு’ வைத்தார். ஆனால் 70 நாளில் சேர்ந்தோம்.

இதில் என்ன குறை, குற்றம் கண்டார்கள்? இப்போது எதிர்ப்பு தெரிவித்து வரும் 21 எம்.எல்.ஏ.க்களும் இந்த அரசை கவிழ விடமாட்டார்கள். சுய நலவாதிகள் அமைதியாக இருந்தால் குழப்பம் ஏற்படாது.

அம்மா மறைந்த போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் பின்னர் இப்போது தெளிவாக இருக்கிறோம்.

மாநில பிரச்சனையில் மத்திய அரசு தலையிடுவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவது முறையல்ல. தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் மாநில அரசு சுமூக உறவு வைத்துள்ளது.

இந்த அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணியை ஒரே குடும்பம் என்ற வகையில் மன்னித்து விட்டோம். செங்கோட்டையனுக்கு சசிகலா அமைச்சர் பதவி கொடுத்ததில் தவறு இல்லை. அவர் கட்சியில் மூத்த நிர்வாகி.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News