செய்திகள்

மேகதாது விவகாரத்தில் முதல்வர் தெரிவித்த கருத்து தவறானது: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published On 2017-08-21 10:47 IST   |   Update On 2017-08-21 11:11:00 IST
மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்து இருப்பது தவறானது என ஜி. ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

நாகப்பட்டினம்:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற விசாரணை குறித்து திருவாரூரில் முதல் - அமைச்சர் அளித்த பேட்டியில் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி உள்ளார். இது தவறான தகவலாகும்.


இரு வேளை மேகதாது விவகாரத்தில் தமிழக நலன் பாதிக்காது என முதல்-அமைச்சர் கூறுவது உண்மையெனில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும் போது மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் அணை கட்டினால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் எடுத்து கூறும்படி தமிழக அரசு அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையுமா? இணையாதா? என்பது அவர்களது பிரச்சினை. ஆனால் பிளவுபட்டுள்ளதால் தமிழக மக்கள் நலன் பாதிக்கிறது. இந்த இரு அணிகளையும் பாரதீய ஜனதா அரசு இயக்குகிறது.

இதனால் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இரு அணிகளும் கட்டுப்பட்டு நடக்கின்றன. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ஆட்சேபிப்பதில்லை.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

Similar News