மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டாம்: வைகோ பேட்டி
கோபி:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோபியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் தற்போது கேள்விக் குறியாகி விட்டது. காவிரி உரிமை பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறினார்கள். ஆனால் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்டத்தை அனுப்பி உள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி தரவில்லை. ஆனால் கர்நாடக அரசோ அங்கு அணை கட்ட ஆரம்பித்து விட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடு வாசலில் பல மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு அதை கண்டு கொள்ளாமல் திட்டத்தை கொண்டு வருவோம் என்ற நிலையை பின் பற்றி வருகிறது.
தமிழ்நாடு என்றால் மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரையாகி விட்டது. மத்திய அரசால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 சதவீதம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். 98 சதவீதம் பேர் தான் மற்ற பாடத்தில் படிக்கிறார்கள்.
மத்திய அரசிடம் தமிழக அரசுநீட் தேர்வு குறித்து வலியுறுத்தியும் பலன் இல்லாமல் போய் விட்டது. இதற்காக தமிழக அரசை குற்றம் சாட்டவில்லை. மத்திய அரசைத்தான் குற்றம் சாட்டுவேன்.
ஒவ்வொரு மாநிலமும் தமிழ்நாட்டைதான் வஞ்சித்து வருகிறது. மத்திய அரசுக்கு இது குறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சொல்வது என்ன வென்றால் மத்திய அரசுக்கு என்றும் பயப்பட வேண்டியதில்லை. மாநில அரசை மத்திய அரசு உடனே கலைக்க முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நமது உரிமைகளை மத்திய அரசுக்கு எடுத்து கூற வேண்டும். தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக உள்ளனர். தஞ்சையில் அண்ணா நூற்றாண்டு விழா ம.தி.மு.க. சார்பில் நடத்தப்பட உள்ளது. தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில்லை.
நீதிக்காக போராடும் எங்களுக்கு சலிப்பே கிடையாது. ஏரி குளங்களில் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக தெரிகிறது. இதை கண்டிக்கிறேன். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.