மக்கள் பிரச்சினைகள் பற்றி அரசு கவலைபடவில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
ஆலந்தூர்:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிக்க சி.சி.டி.வி. கேமராவில் அந்த நிகழ்வு பதிவு ஆகியிருக்கும் என்றால் அங்குள்ள கேமராக்களும் வேலை செய்யவில்லை.
ஆனால் காவல் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசும்போது தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து இருக்கிறது, சட்டம்- ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பேசுகின்றனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பது பற்றி ஏன் பேச வில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார்.
எதிர்க்கட்சியை விட மத்திய அரசுக்குதான் பயங்கரவாதம் பற்றி தெரிய வரும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு துறை இருக்கிறது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து மாநில அரசிடம் எடுத்துரைத்து அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை.
சென்னையில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. தமிழக அரசு எந்த செயல்பாடும் இல்லாமல் உள்ளது. குடிநீர் பிரச் சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினையில் அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.
மு.க.ஸ்டாலின் நீர்நிலைகளை தூர்வாரி வருகிறார். அரசு எதுவும் செய்யவில்லை.
பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சலுகை விவகாரம் குறித்து கர்நாடக அரசின் நடவடிக்கையை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.