செய்திகள்

சிஸ்டம் சரியில்லை என்று ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ரஜினி கூறாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

Published On 2017-07-14 13:24 IST   |   Update On 2017-07-14 13:24:00 IST
சிஸ்டம் சரியில்லை என்று ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ரஜினி கூறாதது ஏன்? என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூரில் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த ஆட்சி இன்னுமா உள்ளது என பொதுமக்கள் கேட்கின்றனர். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது பா.ம.க. மட்டும்தான். தமிழகத்தில் 81 லட்சத்து 18 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்கள் வேலைக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- எனக்கு முதல்வராகும் ஆசை கிடையாது. மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. தமிழகத்தை தற்போது ஏழரை சனி பிடித்துள்ளது. இரண்டு திருடர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.

தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஓன்றரை கோடி மக்கள் ஓட்டு போட்டு காப்பாற்றியதாக கூறுகின்றனர். அந்த ஓட்டை எனக்கு போட்டிருந்தால் நான் தமிழகத்தையும், மக்களின் தலை எழுத்தையும் மாற்றியிருப்பேன்.


தமிழ் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினி காந்த் கலைஞரை பாராட்டிய போது சொல்லியிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொல்லியிருக்கலாம்.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் ஊழல் வழக்கில் சிறை சென்றிருப்பார். தமிழக முதல்வர் பழனிசாமி தெருவில் நடந்து சென்றால் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. எதற்காக இவ்வளவு போலீசார் பாதுகாப்பு.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. சின்னத்தை பார்த்து ஓட்டு போட்ட மக்கள் இனி திட்டத்தை பார்த்து ஓட்டு போட வேண்டும். ரூ.200, 300-க்கு ஓட்டை விற்று விட்டீர்கள். ஆனால் இனிமேல் அது போல் நிலை ஏற்படாது என நினைக்கிறேன். எனவே தமிழ் நாட்டை நாசப்படுத்தியவர்களை தூக்கி போடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News