செய்திகள்

சினிமா தியேட்டர்களுக்கு கேளிக்கை வரி குறைக்கப்படுமா?: சட்டசபையில் அமைச்சர் பதில்

Published On 2017-07-06 15:12 IST   |   Update On 2017-07-06 15:12:00 IST
சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி குறைக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த அமைச்சர் வேலுமணி, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து சினிமா துறைக்கு கேளிக்கை வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் தமிழ் திரையுலகமே இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, நூறு ரூபாய்க்கு டிக்கெட் இருந்தால் 18 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு மேலிருந்தால் 28 சதவீத வரியும் விதிக்கக்கூடிய ஜி.எஸ்.டி.யால் சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

குறிப்பாக, திரையுலகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட கலையுலகைச் சார்ந்த அத்தனை பேரும் இது குறித்து தங்கள் கவலைகளை, வருத்தத்தைத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரியுடன் கேளிக்கை வரி 30 சதவீதம் என்று மாநில அரசு முடிவு செய்திருக்கும் காரணத்தால், திரையுலகம் மேலும் அதிர்ச்சியடைந்து இருக்கிறது. 65 சதவீதம் வரி செலுத்தி எப்படி சினிமா தொழில் செய்ய முடியும் என்று அவர்கள் வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால், திரையரங்குகள் எல்லாம் முழு அடைப்புப் போராட்டத்தை இன்றோடு 4-வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்திக் கொண்டு இருந்தபோது, 1989 ல் 54 சதவீதம் இருந்த கேளிக்கை வரியை 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. பிறகு அந்த 40 சதவீத கேளிக்கை வரியும் 1.8.1998 முதல் 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.

2000-ம் ஆண்டில் மேலும் 25 சதவீதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டது. அதுமட்டுல்ல, 22.7.2006 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்.72ன் கீழ் “தமிழ் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு” அளிக்கப்பட்டது. இந்த வரி விலக்கு தமிழ் பெயர் உள்ள பழைய படங்களுக்கும், காப்பிரைட் வைத்திருக்கும் தமிழ் படங்களுக்கும் அளிக்கப்பட்டது. இது தவிர திரைப்படத்துறையினருக்காக பல்வேறு சலுகைகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு உருவாக்கித் தந்திருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் திரையுலகத்தினரின் கவலையைப் போக்கும் வகையில், சினிமா தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. சினிமா தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் தோழர்களின் நலன் கருதி, 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.


மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்று சொல்வது போல், சினிமா துறைக்கு ஜி.எஸ்.டி மூலம் 28 சதவீத வரி, மாநில அரசின் மூலம் கேளிக்கை வரி 30 சதவீதம். மத்திய அரசின் முழக்கம் என்னவென்றால், “ஒரே நாடு, ஒரே வரி”. ஆனால் இதற்கு எதிராக “இரட்டை வரி விதிப்பு” முறை சினிமா உலகத்தைச் சூழ்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வந்தவுடன் கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் , "கேரளாவில் கேளிக்கை வரி ரத்து செய்யப்படும்" என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதேபோல, மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை நூறு ரூபாய் டிக்கெட்டில் வசூலிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியில், மாநில அரசின் பங்கான 9 சதவீதத்தில் ஏழு சதவீதத்தை சினிமா பார்ப்பவர்களுக்கே வழங்கி டிக்கெட் விலையை குறைத்துள்ளது.

அதே போல் 100 ரூபாய்க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கான 28 சதவீத ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசின் பங்கான 14 சதவீதத்தில் 12 சதவீதத்தை படம் பார்ப்பவர்களுக்கே வழங்கி டிக்கெட் விலையை குறைத்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் வரியை இப்படி படம் பார்ப்பவர்களுக்கே வழங்கி போராட்டங்களுக்கு வித்திடாமல் சினிமா தொழிலை காப்பாற்ற முன் வந்துள்ளது மேற்கு வங்க அரசு.

எனவே, நிறைவாக நான் இந்த அரசை கேட்டுக் கொள்ள விரும்புவது, கேரள அரசு கேளிக்கை வரியை ரத்து செய்துள்ள நிலையில் அப்படியொரு கொள்கை முடிவை தமிழகத்திலும் எடுத்து சினிமா தொழிலை பாதுகாக்கும் சூழ்நிலையை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்சும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

1939-ம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரியதாகும். இதுவரை இந்த வரியை  மாநில அரசு வசூலித்து நிர்வாக செலவு போக மீதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுத்தது.

தற்போது ஜி.எஸ்.டி. வரி வந்துள்ளதால் மாநில அரசு கேளிக்கை வரியை வசூலித்தால்  ஜி.எஸ்.டி. வரிக்குள் உட்படுத்தப்படும்  என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே இது உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரி வருவாய் என்பதால் ஏற்கனவே இருந்த தமிழ்நாடு கேளிக்கை வரியை ரத்து செய்து விட்டு உள்ளாட்சி அமைப்புகளே இந்த வரியை வசூலிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

ஏற்கனவே கிராமப்புறங்களில் 20 சதவீத கேளிக்கை வரியும், நகர்புறங்களில் 30 சதவீத கேளிக்கை வரியும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டது. எனவே கேளிக்கை வரி புது வரி அல்ல.

ஏற்கனவே இது அரசால் வசூலிக்கப்பட்ட வரிதான். இப்போது உள்ளாட்சி அமைப்புகள் நேரடியாக வசூலிக்கிறது.

ஜி.எஸ்.டி. வரியில் 100 ரூபாய்க்கு குறைவான நுழைவு  கட்டணம் இருக்குமானால் 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு மேல் இருந்தால் 28 சதவீதமும் வரி வசூலிக்க வழி உள்ளது. ஏற்கனவே திரைப்பட துறையை பொறுத்தவரை பல இனங்களுக்கு மத்திய அரசு வசூலித்த சேவை வரி பல வகைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேளிக்கை வரியை வசூலிக்கும் அதிகாரம் கொடுத்துள்ளோம். ஆகவே கேளிக்கை  வரியையும், ஜி.எஸ்.டி. வரியையும் இரட்டை வரியாக கருத முடியாது.

18 சதவீதம் அல்லது 28 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி.யில் வசூலிக்கப்பட வேண்டும். இதனால் திரையரங்குக்கு பாதிப்பு இருக்காது.

தமிழக அரசால் திரைப்படங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரி விலக்கு தொடருமா? என்பது பற்றி கடந்த 3-ந்தேதி திரைப்பட துறையினர் முதல்- அமைச்சரை சந்தித்து பேசினார்கள்.

அப்போது சினிமா கட்டணத்தை உயர்த்துவது பற்றியும்  பேசப்பட்டது. கேளிக்கை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்.

அவர்களிடம் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய நிதி ஆதாரம் என்று முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக திரைப்பட துறையினர் 2 கட்டமாக பேச்சு நடத்தி உள்ளனர்.

இன்று மீண்டும் முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை  நடத்த உள்ளனர். அதில் நான் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் திரைப்படத் துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து கண்டிப்பாக முதல்- அமைச்சர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் என்று கருதுகிறேன்.

திரைப்பட துறையினரிடம் இது புது வரி அல்ல என்று அவர்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.



அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உள்ளாட்சித்துறை அமைச்சர் விளக்கம் தந்திருக்கிறார். உள்ளாட்சிகளுக்கு வர வேண்டிய நிதி பற்றி அவர் குறிப்பிட்டுச் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உள்ளாட்சிகளுக்கு நிதி வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜி.எஸ்.டி., வரியில் மாநில அரசின் பங்காக இருக்கக்கூடிய 9 சதவீதம் மற்றும் 18 சதவீதத்தில் இருந்து உள்ளாட்சிகளுக்கு நீங்கள் நிதியை வழங்கலாம். நாம் எப்படி மத்திய அரசிடம் இருந்து நிதியை எதிர் பார்க்கிறோமோ, அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளும் மாநில அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்ற கருத்தை அமைச்சருடைய கவனத்துக்கு  கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News