செய்திகள்

அ.தி.மு.க.வினர் மோடியை ஆதரிப்பதில் ஒரே அணியாக உள்ளனர்: முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2017-07-01 09:45 IST   |   Update On 2017-07-01 09:45:00 IST
தமிழகத்தில் அ.தி.மு.க எத்தனை அணிகளாக இருந்தாலும் மோடியை ஆதரிப்பதில் ஒரே அணியாகத்தான் உள்ளனர் என்று இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.
மயிலாடுதுறை:

இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மொழி என்று மத்திய அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும். பசுபாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்வது கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். காந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் மோடி. பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? மத்திய அரசால் தமிழக உரிமைகள், நலன்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் பாதிக்கும் என்று மத்திய நிதி மந்திரி கூறுகிறார். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன்கொடுத்து வட்டியை கூட வசூல் செய்யாமல் இருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே வரி என்று ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றன. அதனை பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்கவும் இல்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க எத்தனை அணிகளாக இருந்தாலும் மோடியை ஆதரிப்பதில் ஒரே அணியாகத்தான் உள்ளனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்றவை விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த அமைச்சர் சட்டப்படி எதையும் சந்திப்பேன் என்கிறார். நேர்மையான அமைச்சராக இருந்திருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மழைநீரை சேமிக்க எந்த ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது.

பழங்காலங்களில் உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் தடுப்பணை கட்டுவதைவிட அதில் இருக்கும் மணலை கொள்ளை அடிக்கத்தான் ஆளும்கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் கியாஸ் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் அதனை இப்பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News