செய்திகள்

ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பதா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்

Published On 2017-05-26 12:47 IST   |   Update On 2017-05-26 12:48:00 IST
கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்ட சபையில் திறக்க ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோட்டில் ஈ.பி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தவறான செயல்.

கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்ட சபையில் திறக்கலாமா? அவ்வாறு செய்யக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் ஐ.ஜி. அலுவலகங்களில் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்றவர்களின் படங்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளனர். ஒரு குற்றவாளிக்கு எப்படி மணி மண்டபம் கட்டலாம்? இதையும் தவிர்க்க வேண்டும்.



ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் சரோஜாவை கடந்த 10 நாட்களாக காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என தெரியவில்லை.

அவர் மீது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பெண் அரசு அதிகாரி லஞ்ச குற்றச்சாட்டு கூறி இருந்தார். அமைச்சர் சரோஜா இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? அவரை ராஜினாமா செய்ய ஏன் வற்புறுத்தவில்லை? அமைச்சர் சரோஜாவை உடனடியாக கண்டு பிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 41 நாட்களாக இரவும், பகலும் போராடினார்கள். அவர்களை ஒரு நாள் கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இது குறித்து பிரதமரிடம் கேட்டபோது, விவசாயிகள் சட்டை அணியவில்லை. அதனால் தான் சந்திக்க வில்லை என்று கூறி இருக்கிறார்.



பிரதமர் மோடி போல விவசாயிகள் 10 லட்சம் ரூபாய் கோட்-சூட் போட்டு இருந்தால்தான் சந்தித்து பேசி இருப்பாரா? விவசாயிகளை சந்திக்க மாட்டேன் என்பது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அவமானம்.

தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக அமைச்சர் குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதை யார்-யார்? செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் அரசு பால் சுத்தமாகத் தான் இருக்கிறது என்கிற உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

ரஜினி பொதுவானவர் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து சிறிய வட்டத்துக்குள் சிக்கி கொள்ளமாட்டார் என்று நான் நம்புகிறேன்.



கடந்த சில நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே தொகுதி வளர்ச்சிக்காகவோ மக்களுக்காகவோ சந்திக்கவில்லை. அமைச்சர் பதவி போன்றவற்றை குறி வைத்து சென்று சந்தித்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி முறையில் அமைச்சர் செங்கோட்டையன் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளாரே. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, ‘‘ஒவ்வொரு நாளும் அவர் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே எனக்கு புரியவில்லை’’ என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

Similar News