பேச்சுவார்த்தை தேதி விரைவில் முடிவு செய்யப்படும்: செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி மற்றும் குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒரு தேதி முடிவு செய்யப்படும். அந்த தேதியில் இரு அணியிலும் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும் என நம்புகிறோம்.
பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பரிசீலனையில் உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மீண்டும் நாளை அவர் மத்திய அரசை அணுகி வலியுறுத்த உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.