செய்திகள்

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் டெபாசிட் கூட பெறமுடியாது: மு.க.ஸ்டாலின்

Published On 2017-03-30 13:44 IST   |   Update On 2017-03-30 13:44:00 IST
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் டெபாசிட் கூட பெற முடியாது என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரிவீரமங்களத்தில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயம் சண்முகத்தின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து தினகரனின் பெரா அ.தி.மு.க.வும், ஓ.பி.எஸ்.சின் மணல் மாபியா அணியும் போட்டியிடுகின்றன. 2 அணிகளும் ஒன்றாக இருந்தபோதும், தற்போதும் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் மக்களுக்காக சண்டை போட்டு கொள்ளவில்லை. முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக சண்டை போட்டு கொள்கின்றனர். முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று பதவி வெறி பிடித்து அலைகின்றனர்.

முதல்வர் பதவி கிடைத்து விட்டால் ஊழல் செய்யலாம். அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே போராடுகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியான ஒன்று. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் டெபாசிட் கூட பெற முடியாது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு அச்சமடைந்துள்ளது. போட்டியிட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதற்காக தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துகின்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.


நான் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, முன்னாள் எம். எல்.ஏ. சுப்புராம் ஆகியோரும் வலியுறுத்துகின்றனர்.

முதல்வர் நாற்காலியில் யார் யாரெல்லாமோ அமர்ந்த இடத்தில் நானும் அமர்வதா? என்ற தயக்கம் இருந்தது. இருந்த போதிலும் தமிழ்நாடு மக்களின் நலனை காக்கவும் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமையவும் அந்த பொறுப்பை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News