செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம்

Published On 2017-03-17 06:42 GMT   |   Update On 2017-03-17 06:42 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் பணி, பிரசாரம், தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் புதுவண்ணாரப்பேட்டையில் இன்று மாலை 7 மணிக்கு நடக்கிறது.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வக்கீல் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.



வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ஆதரவு கேட்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பலமுனைப்போட்டி நிலவுவதால் வெற்றியை சாதகமாக்கி கொள்ள தேவையான முயற்சிகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சி ஆதரவு வேட்பாளரான டி.டி.வி.தினகரனுக்கு சரிசமமான பலத்தை கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனை எதிரில் தேர்தல் பணிமனையும் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் தேர்தல் பணி, பிரசாரம், தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வெற்றி திருமண மண்டபத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை தாங்குகிறார். தொ.மு.ச. பேரவை தலைவர் சண்முகம், பகுதி செயலாளர் ஏ.டி.மணி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் பணியாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் 22 அல்லது 23-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Similar News