செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: முத்தரசன்

Published On 2017-02-22 13:49 IST   |   Update On 2017-02-22 13:49:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் அரசியல் கட்சிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் . எனவே அதனை செயல்படுத்தக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே மீத்தேன் வாயு எடுக்க முயற்சி நடந்தது. தற்போது புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கும் வகையில் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.



ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் அரசியல் கட்சிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மக்கள் மனநிலையை புரிந்து மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இது பற்றி நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ராஜா குரல் கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar News