செய்திகள்

தமிழகத்தில் லஞ்சம்- ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும்: காதர் மொய்தீன்

Published On 2017-02-20 10:33 IST   |   Update On 2017-02-20 10:33:00 IST
தமிழகத்தில் லஞ்சம்- ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர்மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது உள்ள மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி வருகிறது. மாநில அரசு சிறுபான்மையினரின் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை முறையாக வழங்குவதில்லை.

மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மையினரின் மத விவகாரத்தில் தலையிடுகிறது. முஸ்லிம்களின் ‌ஷரியத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு முயல்கிறது. இதனை முற்றிலும் கைவிட வேண்டும். மத சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு நீதிமன்றத்திற்கோ, அரசுக்கோ அதிகாரம் கிடையாது.

தமிழக சட்டமன்றத்தில் காமராஜர், அண்ணா, ராஜாஜி, கருணாநிதி உள்ளிட்ட அறிஞர்கள் விவாதம் செய்திருக்கிறார்கள். சட்டமன்றம் விவாத மன்றமாக இருக்க வேண்டும். விதண்டாவாதம் செய்யும் மன்றமாக இருக்கக்கூடாது.

முதல்-அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்தபோது அவரின் காரை சோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இது எதிர்கட்சி தலைவரை அவமானப்படுத்தும் செயல். அப்போதே ஆளும் கட்சி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது.

பின்னர் சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சட்டை கிழிப்பு, எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது கொடுமையான நிகழ்ச்சி. தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலை. சட்டசபைக்குள் யாரும் சாதி பெயரை சொல்லி குறிப்பிடாமல் இருக்கும் போது சபாநாயகர் தனபால் ஜாதி ரீதியாக பேசியிருப்பது ஏற்புடையது அல்ல.

சட்டமன்றத்தில் சாதி ரீதியான செயலுக்கு அனுமதி கிடையாது. சபாநாயகரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News