செய்திகள்
ராஜன் செல்லப்பா

நான் நடனம் ஆடுவது போல் வாட்ஸ்-அப்பில் அவதூறு வீடியோ: ராஜன் செல்லப்பா போலீசில் புகார்

Published On 2017-02-14 02:43 GMT   |   Update On 2017-02-14 02:43 GMT
வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்துள்ளார்.
மதுரை:

மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா தனது வக்கீல் மூலம் மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மதுரை மேயராக இருந்து மக்கள் பணியாற்றினேன். 2016-ம் ஆண்டு முதல் மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகவும், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறேன். மக்கள் மத்தியில் நற்பெயரும், நன்மதிப்பும் பெற்றுள்ளேன்.

இந்த நிலையில், என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் கடந்த 12-ந் தேதி முதல் வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு நபர் நடனமாடுகிறார். அந்த வீடியோவிற்கு கீழ், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நடனமாடும் காட்சி என்று போடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல.

ஆனால் வீடியோவில் நான் நடனம் ஆடுகிறேன் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர். வாட்ஸ்-அப் மட்டுமின்றி முகநூலிலும் ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில், எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து இந்த வீடியோவில் என்னை தொடர்புபடுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Similar News