செய்திகள்

2 அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

Published On 2017-02-11 05:07 GMT   |   Update On 2017-02-11 05:07 GMT
நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.பி.க்கள், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.

அதேசமயம், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என கூறுகிறார். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது அ.தி.மு.க.வின் மக்களவை எம்.பி.க்களான பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து இருவரும் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

கூவத்தூர் விடுதியில் வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக வெளியில் வருவதற்கும், தங்கள் சொந்த தொகுதிக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News