செய்திகள்

திருநாவுக்கரசர் பா.ஜ.க.வுடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா?: இளங்கோவன் கிண்டல்

Published On 2017-01-09 15:33 IST   |   Update On 2017-01-10 11:22:00 IST
காங். தலைவர் திருநாவுக்கரசர் நான் அ.தி.மு.க.வில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். அப்படியானால் பா.ஜ.க.வுடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா? என இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரி இன்று 3-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று போராட்டம் நடத்தும் போக்குவரத்து ஊழியர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

பிறகு இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை தமிழக அரசு உடனே ஏற்க வேண்டும், வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு போக்குவரத்து ஊழியர் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆகவே போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது. முதல் அமைச்சர் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பணி எண் உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுததி வருகிறார்கள். ஆனால் ஒரு அமைச்சர் அது தேவையில்லை என்று கூறி உள்ளார். அவர் பேச்சு எந்த வகையில் நியாயம்? அவர் பேச்சு பொருப்பற்ற பேச்சாக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நான் அ.தி.மு.க.வில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாரதீய ஜனதாவுடன் இருந்திருந்தால் திருநாவுக்கரசர் பிரதமர் ஆகி இருப்பாரா?.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

பேட்டியின்போது ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி அருகில் இருந்தார்.

Similar News