செய்திகள்

திருமங்கலம் ‘பார்முலா’ என்பது பற்றி எதுவும் தெரியாது: ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில்

Published On 2016-11-24 03:39 GMT   |   Update On 2016-11-24 08:44 GMT
திருமங்கலம் ‘பார்முலா’ என்பது பற்றி எதுவும் தெரியாது என்று ஐகோர்ட்டில் நடந்த தேர்தல் வழக்கின் குறுக்கு விசாரணையின்போது மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இதில், மு.க.ஸ்டாலின் வெற்றிப்பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர், அவரை சைதை துரைசாமியின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்து வந்தார். ஏற்கனவே 3 நாட்கள் மு.க.ஸ்டாலினை சைதை துரைசாமியின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். 4-வது நாளாக நேற்றும் இந்த குறுக்கு விசாரணை நடந்தது.

அப்போது மு.க.ஸ்டாலினிடம் சைதை துரைசாமியின் வக்கீல் செய்த குறுக்கு விசாரணையின் விவரம் பின்வருமாறு:-

கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டனவா?

பதில்:- விதிமுறைக்கு உட்பட்டு வேட்பாளர் என்ற முறையில் என் புகைப்படத்துடன் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

கேள்வி:- சுவரொட்டிக்கு ஆன செலவு கணக்கில் காட்டப்பட்டதா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் 27 தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டதா? இந்த பணிமனையில் வைத்து வாக் காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதா?

பதில்:- எத்தனை பணிமனைகள் அமைக்கப்பட்டது? என்று எண்ணிக்கையில் கூறமுடியாது. பணிமனைகள் அமைக்கப்பட்டது. ஆனால், அதில் பணம் வினியோகம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். மனுதாரர் என்மீது திட்டமிட்டு இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கேள்வி:- பிரசாரத்தின்போது வீடு வீடாக சென்று உங்களது புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டதா?

பதில்:- ஆமாம். கட்சிக்காரர்கள் வினியோகம் செய்தனர்.

கேள்வி:- தேர்தல் பணிமனையில் உள்ள ஆட்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டதா? அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டதா?

பதில்:- அதை நான் கவனிக்கவில்லை.

கேள்வி:- வாக்கு சேகரிக்கத்தானே பணிமனைகள் தொகுதியில் அமைக்கப்பட்டது?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- பணிமனையில் வேலை செய்பவர்களுக்கு என்ன வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன?

பதில்:- கட்சிக்காக வேலை செய்பவர்கள் வசதிகளை எல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள்.

கேள்வி:- உங்கள் கட்சியின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வத்தை நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்று ஏற்கனவே நீங்கள் அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளர்கள். இந்த வீடியோவில் அவர் இருக்கிறாரா?, முரளி என்பவர் இருக்கிறாரா? (இப்படி கேள்வி கேட்ட வக்கீல், ஈஸ்வரி ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை போட்டுக்காட்டினார்கள்)

பதில்:- பன்னீர்செல்வம் உள்ளார். முரளி இல்லை.

கேள்வி:- அந்த வீடியோவில் உங்களது வக்கீல் கிரிராஜன் உள்ளாரா?

பதில்:- ஆமாம் உள்ளார்.

கேள்வி:- திருமங்கலம் ‘பார்முலா’வை போல கொளத்தூர் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா?

பதில்:- தெரியவில்லை.

கேள்வி:- திருமங்கலம் பார்முலா என்பது தெரியவில்லையா?, புரியவில்லையா?

பதில்:- எனக்கு அதுபற்றி புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.

கேள்வி:- மகளிர் சுய உதவிக்குழு மூலமாக ஈஸ்வரி ஆஸ்பத்திரியில் பணம் வழங்கப்பட்டதா?

பதில்:- இல்லை.

கேள்வி:- ரெயில்வே ஊழியர்கள் மனமகிழ் மன்றத்தின் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா?

பதில்:- இல்லை.

கேள்வி:- ரெயில்வே ஊழியர்கள மனமகிழ் மன்றத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது என்பதை கேள்விப்பட்டு, போலீசார் அங்கு வந்தபோது, உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இரு மோட்டார் சைக்கிளை அனாதையாக விட்டுவிட்டு தலைமறைவானார்கள் என்று மனுதாரர் சைதை துரைசாமி, தன் மனுவில் குற்றம் சுமத்தியுள்ளாரே?

பதில்:- இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறேன். இது பொய்யான குற்றச்சாட்டு.

கேள்வி:- சைதை துரைசாமியை அவதூறு செய்யவேண்டும் என்று உங்களது தேர்தல் முகவர் வி.எஸ்.ரவி, துண்டு பிரசுரங்களை அச்சிட்டு பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்தாரா?

பதில்:- இந்த குற்றச்சாட்டை மனுவில் படித்து பார்த்து, இதுகுறித்து வி.எஸ்.ரவியிடம் கேட்டபோது, அவர் அதை முற்றிலுமாக மறுத்தார்.

இதுபோல பல கேள்விகள் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரும் பதிலளித்தார். இதன்பின்னர் இந்த வழக்கின் இருதரப்பு வக்கீல்களின் இறுதிகட்ட வாதத்துக்காக, விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News