செய்திகள்

அல்லி தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: ப.சிதம்பரம் பேச்சு

Published On 2016-05-05 15:34 IST   |   Update On 2016-05-05 15:42:00 IST
அல்லி தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என திருமயம் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ப.சிதம்பரம் பேசினார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு திருமயம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க–காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒற்றுமையாக உள்ளது. இதனால் தான் இந்த கூட்டணி உருவானது. ஆனால் தேர்தல் நடக்கப் போகும் நிலையில் கூட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை.

தமிழ்நாட்டின் மண்ணை மதிப்பதில்லை என்று சபதம் செய்து விட்டார் ஜெயலலிதா. 1991, 2001, 2011 ஆகிய 3 முறை ஜெயலலிதா அரசை பார்த்தாச்சு. அதனால் இந்த அல்லி தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மதுவிலக்கை அ.தி.மு.க. ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? என்று தெரியவில்லை. தமிழகம் அனைத்து துறையிலும் பின்னோக்கி செல்கின்றது. தமிழக சட்டசபை ஜெயலலிதாவின் துதிபாடும் பஜனை மடமாகத்தான் உள்ளது. 110–வது விதி படித்து விட்டு செல்வதுதான் ஜெயலலிதாவின் ஜனநாயகமா?

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் கருணாநிதி முதல்வர் ஆனதும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் உயர தி.மு.க. விற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News