பெண்கள் உலகம்
பெண்கள் செலவுகளை குறைத்து சிக்கனமாக இருப்பது எப்படி?

பெண்கள் செலவுகளை குறைத்து சிக்கனமாக இருப்பது எப்படி?

Published On 2022-05-20 03:34 GMT   |   Update On 2022-05-20 03:34 GMT
பார்த்து பார்த்து செலவு செய்தாலும் கைமீறி போய்விடும் செலவை சமாளிப்பதும், முன்கூட்டியே அது குறித்தான திட்டமிடுதலும் எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி ஏற்றத்தில், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பது தான் பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. பார்த்து பார்த்து செலவு செய்தாலும் கைமீறி போய்விடும் செலவை சமாளிப்பதும், முன்கூட்டியே அது குறித்தான திட்டமிடுதலும் எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

கிரெடிட் கார்ட் உபயோகிப்பதில் கவனம்:

இன்றைய தேதியில் கைமீறிப் போகும் செலவுக்கு, பலருக்கும் அவசரத்தில் கைக்கொடுக்கும் ஒன்றாக கிரெடிட் கார்ட் இருக்கிறது. அதேசமயம், கிரெடிட் கார்டை நாம் சரியான விதத்தில் உபயோக்கிறோமோ? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கெடு நாட்களுக்குள், கிரெடிட் கார்டுக்கான தொகையை திருப்பி செலுத்தும் அளவிலான பணத்தை மட்டுமே செலவழியுங்கள்.
இல்லை எனில் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி சதவீதம் அதிகமாகும். அத்தகைய தருணங்களில் உங்கள் வங்கியுடன் பேசி, அதனை பர்சனல் லோனாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். இதனால், வட்டிக்கான சதவீதம் குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

செலவுகளை குறையுங்கள்:

அவசியமான, அத்தியாவசியமான செலவுகளைத் தவிர, உங்கள் விருப்பத்துக்கு என செலவு செய்வதில், கவனமாக இருங்கள். ஒரு நாளில் எதற்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பதை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் அவசியமானது எது? தவிர்க்கக் கூடியது எது என்பதை கவனித்து, அடுத்த முறை அதைத் தவிருங்கள். இதன் மூலம் தேவையில்லாத செலவுகள் குறைந்து உங்கள் சேமிப்பு உயரும்.

வருமானத்தை அதிகரியுங்கள்:

இந்தக் காலத்தில் ஒரு வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துவது கடினமானது. அதனால், எப்பொழுதுமே இரண்டாவது வருமானம் வரும்படியான வேலையோ அல்லது தொழிலையோ கைவசம் வைத்திருப்பது நல்லது. உங்கள் தொழில் சார்ந்தே, உங்களுக்கு திறமை இருக்கும் பிற தொழில், வருவாய் தரக்கூடிய முதலீடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, இரண்டாவது வருமானத்தை அதிகரிக்கலாம். மேலும், இப்பொழுது சமூக வலைதளங்கள் வருமானம் பெற, நம்மை நாமே விளம்பரப்படுத்தி கொள்ள சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது. அதனை சரியான வழியில் உங்களுக்கேற்றாற் போல உபயோகித்துக் கொள்ளலாம்.

சேமிப்பு முக்கியம்:

உடல் நலன், பொதுவான காப்பீடு, வாகனங்களுக்கு காப்பீடு, வங்கி சேமிப்பு என்பதை எல்லாம் தாண்டி, உங்களிடம் கைவசம் ஒரு சிறு சேமிப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நிச்சயம் எதாவது அவசியமான விஷயங்களுக்கு அது உதவும்.

புத்திசாலித்தனமான வழியில் பணத்தை கையாண்டால் செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்தலாம்.
Tags:    

Similar News