லைஃப்ஸ்டைல்
தவிர்க்க முடியாத சிறிய சமையலறை சாதனங்கள்...

தவிர்க்க முடியாத சிறிய சமையலறை சாதனங்கள்...

Published On 2021-10-18 02:25 GMT   |   Update On 2021-10-18 02:25 GMT
சமையலறையில் நாம் செய்யும் வேலையையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் சாதனங்கள் புதிது புதிதாக சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
சமையலறையில் நாம் செய்யும் வேலையையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் சாதனங்கள் புதிது புதிதாக சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அதில் சில தவிர்க்க முடியாத சாதனங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் தயிர் உறை ஊற்றும் சாதனம்

குளிர் காலங்களில் தயிரை உறைய வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான வேலை என்றே சொல்லலாம். ஆனால், இந்த எலெக்ட்ரிக் கர்ட் (தயிர்) மேக்கரின் மூலம் நான்கு ஐந்து மணி நேரத்தில் கெட்டியான, சுவையான தயிர் தயார். இந்தச் சாதனமானது பார்ப்பதற்கு சிறிய கேஸிரோல் போன்று உள்ளது. பிளாஸ்டிக்கினால் வெளிப்புறமும் உள்ளே ஸ்டீலினால் செய்யப்பட்ட ஒரு கிண்ணமும் அதனை மூடுவதற்கு மூடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிண்ணத்தில் சிறிதளவு தயிரை ஊற்றி பரப்பி அதன் மேல் அறை வெப்பத்திலிருக்கும் பாலை ஊற்றி மூடிகளைப் போட்டு மூடி மின்சாரத்தை இயக்கினரல் அருமையான தயிர் தயார். இவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.

ஃபுட் ப்ராசஸர்

ஒருசில நிமிடங்களிலேயே காய்கறிகளை அறுப்பது, துருவுவது, சப்பாத்தி மாவு பிசைவது என நம் சமையலறையில் மேஜிக்கை செய்யும் சாதனம் என்று இதைச் சொல்லலாம். எவ்வளவு காய்கறிகளையும் நிமிடங்களில் பல வகையான அளவுகளில் வெட்டித் தருவதற்கென்று பிரத்யேகமான பிளேடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சப்பாத்தி மாவை இதைவிட எளிதாக நம்மால் பிசைய முடியாது என்றே சொல்லலாம்.

ஸ்பின் அண்டு ஸ்ட்ரெயின் கொலேண்டர்

இவ்வகை வடிகட்டி (கொலேண்டர்) பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட கூடை வடிவ வடிகட்டியாகும். இதனால் பழம் மற்றும் காய்கறிகள் மட்டுமல்லாது சாதம், அவல், நூடுல்ஸ் என அனைத்தையும் கழுவி, வடிகட்டுவதுடன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பிடியை அழுத்துவதன் மூலம் கூடையானது சுழன்று தண்ணீரே இல்லாதவாறு சுத்தமாக வடிகட்டுகின்றது.

ஹேண்ட் பிளெண்டர் மற்றும் சாப்பர்

பிளெண்டர் மற்றும் சாப்பர் ஒரே சாதனமாக இணைத்து விற்பனைக்கு வந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த சாதனத்தின் மூலம் காய்கறிகளை பொடியாக நறுக்குவது, பாதாம், முந்திரி போன்றவற்றைப் பொடியாக நறுக்குவது மட்டுமல்லாமல் சிறிய அளவிலிருக்கும் கீரைகளையும், மோரையும் கடைய முடியும்.

அதேபோல் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பிளென்டரின் மூலம் ஷேக்ஸ், ஸ்மூத்திஸ், கோல்ட் காஃபி மற்றும் மோர், கீரை என எதை வேண்டுமானாலும் கடையலாம். கேக் மற்றும் பிஸ்கட்டை வீட்டில் தயாரிப்பவர்களுக்கு க்ரீம்களைத் தயார் செய்யவும், பேட்டர்களைத் தயார் செய்யவும் இவை மிகவும் உதவுகின்றன. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷ்கர் அமைப்பின் மூலம் வீட்டிலேயே வெண்ணெய் எடுப்பதும் எளிதாகின்றது.

மடக்கக்கூடிய பார்பிக்யு ஸூட்கேஸ்

ஒருசிறிய ஸூட்கேஸ். அதனைத் திறந்தால் பிரித்து பெரிதாக்கிக் கொள்ளக் கூடிய கிரில் ட்ரேயானது கொடுக்கப்பட்டுள்ளது. சார்கோலை உபயோகித்து பார்பிக்யு உணவுகளை சுடச்சுட செய்யலாம். நம் சமையலறையில் ஒருசிறிய இடத்திலேயே இதை வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் எங்கு வெளியில் சுற்றுலா சென்றாலும் இதை எடுத்துச் சென்று சமைப்பது எளிது.
Tags:    

Similar News