லைஃப்ஸ்டைல்
இல்லத்தரசிகளின் சிக்கனமே குடும்பத்தின் சேமிப்பு

இல்லத்தரசிகளின் சிக்கனமே குடும்பத்தின் சேமிப்பு

Published On 2021-06-26 03:28 GMT   |   Update On 2021-06-26 13:39 GMT
வீட்டு செலவுக்கு கணவர் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து சிறுகச்சிறுக சேமித்து சீட்டு கட்டுவது, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை.
சேமிப்பு விஷயத்தில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். அம்மாக்கள் அஞ்சறைப்பெட்டியிலும் அரிசி, பருப்புகளின் உள்ளேயும் பணத்தை ஒளித்து வைத்து சேமிப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டு செலவுக்கு கணவர் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து சிறுகச்சிறுக சேமித்து சீட்டு கட்டுவது, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை.

குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பாதுகாப்பை சோர்வில்லாமல் செய்பவளே நல்ல குடும்பத்ததலைவியாவாள்.

இது ஒருபுறமிருக்க கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கிக்குவிக்கும் பெண்களும் உண்டு. ஆடம்பரத்துக்காக கடன் வாங்கி அதை திரும்பசெலுத்த முடியாமல்  அவதிப்படுவோரும் உண்டு. மாதம் முழுவதும் எப்படியெல்லாம் செலவழிக்க முடியுமோ அப்படியெல்லாம் செலவழித்து விட்டு மாதக்கடைசியில் கடன் வாங்கி மீண்டும் மாதத் தொடக்கத்தில் சம்பளத்தில் பெரும் பகுதியை கடன் செலுத்துவோரும் உள்ளனர்.

அமெரிக்க அரசு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் செலவு செய்வதாக சொல்லப்படுகிறது. ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான பொருள்களை பயன்படுத்தினாலும் ஆடைகள் வாசனைத்திரவியங்கள், சோப் போன்றவற்றை வெவ்வேறு வண்ணங்களிலுமே பயன்படுத்துவார்கள். இரண்டின் உள்ளடக்கமும், மூலப்பொருட்களும் ஒன்றாக இருந்தாலும் விலையில் மாற்றம் இருக்கும். பெண்களுக்கான பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். பெண்களை குறிவைத்து விற்கப்படும் பொருட்களுக்கும், விளம்பரத்துக்கும் அதிக செலவாகிறது. பேக்கிங்கும் கவர்ச்சிகரமாக இருப்பதால் அவற்றுக்கான செலவு அதிகமாகிறது.

வரவுக்கேற்ற செலவு செய்தால் வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர கஷ்டமாக மாறாது. வரவுக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வது கஷ்டத்தில் மட்டுமல்ல பெரும் நஷ்டத்திலும் தள்ளிவிடும்.

வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் சிக்கனமே, நாட்டின் நல்ல பொருளாதாரத்துக்கு அடித்தளமாக அமைகிறது. பொருட்களை வாங்குவதற்கு முன் அவற்றுக்கான தொகையை சேமிப்பு பணத்திலிருந்து செலவழிப்பது பற்றி பெண்கள் யோசிக்க வேண்டும். காலங்காலமாக கையில் இருப்பதை கொண்டு குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்செல்லும் பெண்களை பார்த்துக்கொண்டே தான் வளர்ந்து வந்துள்ளோம்.  அனாவசியச்செலவுகள் எவையென உணர்ந்து தவிர்த்திடுவோம். நம்முள் இருக்கும் ஆக்க சக்தியை உணர்வோம். செயல்படுத்தி நல்வாழ்வு வாழ்வோம்.
Tags:    

Similar News