லைஃப்ஸ்டைல்
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஆயுள் காப்பீடு

வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஆயுள் காப்பீடு

Published On 2021-05-21 03:27 GMT   |   Update On 2021-05-21 03:27 GMT
ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது.காப்பீடு குறித்து தெரியாத காலத்தில் உருவான கருத்தை இப்போதும் நம்புகிறவர்கள் உள்ளனர்.
நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை. இதற்கு காரணம் நமது மக்களிடம் இருக்கும் மனத்தடைகள்தான். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் காப்பீடு எடுத்துள்ளவர்கள் வெறும் 35 கோடி பேர்தான் என்கிறது, புள்ளிவிவரம்.

ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இறப்பை எதிர்பார்த்து காப்பீடு எடுக்கப்படுகிறது என்கிற தவறான புரிதல் இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். காப்பீடு குறித்து தெரியாத காலத்தில் உருவான கருத்தை இப்போதும் நம்புகிறவர்கள் உள்ளனர்.

ஏற்கனவே காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர்கள் நிலை என்னவாக இருக்கிறது? எத்தனை பேர் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கிறார்கள்? என்கிற விவரங்களைப் பார்க்கிறபோது அதுவும் எதிர்மறையாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பலரும் பாலிசியை தொடராமல் விட்டு விடுகின்றனர்.

பொதுவாக வீட்டில் இருந்து வெளியே கிளம்புகிறோம் என்றால் யாருக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம். இந்த நிலையில் வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடைய குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும்.

இப்போதைய நமது வருமானத்தைபோல, நமக்கு பிறகு நமது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்கிற புரிதலோடு காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிறகு கிடைக்கும் காப்பீடு தொகையை கொண்டு நமது குடும்பம் இதே வாழ்க்கைத் தரத்தோடு வாழ வேண்டும். இதற்கு தற்போதைய ஆண்டு வருமானத்தைபோல 10 முதல் 15 மடங்கு தொகைக்கு காப்பீடு பாலிசி இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஆயுள் காப்பீடு பாலிசிகளை 24 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பொதுக் காப்பீடு பாலிசிகளை 28 நிறுவனங்கள் வழங்குகின்றன. இவற்றை ஐ.ஆர்.டி.ஏ. என்கிற காப்பீடு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பு முறைப்படுத்தி கண்காணித்து வருகிறது. உலக அளவில் நமது கட்டுப்பாட்டு அமைப்பு வலுவானதாக உள்ளதால் காப்பீடு நிறுவனங்களும் முறையாக செயல்பட்டு வருகின்றன. தற்போது செயல்பட்டு வரும் காப்பீடு நிறுவனங்கள் மேற்கொண்டு செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றால் ஐ.ஆர்.டி.ஏ. தலையிட்டு காப்பீடுதாரர்களை பாதுகாக்கும் விதத்தில் நமது கட்டுப்பாட்டு அமைப்பு வலுவானது.
Tags:    

Similar News