லைஃப்ஸ்டைல்
உயரும் சமையல் எரிவாயு விலை... சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

உயரும் சமையல் எரிவாயு விலை... சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

Published On 2021-05-19 04:39 GMT   |   Update On 2021-05-19 04:39 GMT
எரிவாயுவின் விலை தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே. இதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன.
எரிவாயுவின் விலை தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நடுத்தர மக்களின் பட்ஜெட் எகிறிகொண்டிருக்கிறது. இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே. இது நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன.

எப்போது சமையல் செய்தாலும் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள்.இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும்.

வேகவைப்பது குழம்பு தயார் செய்வது போன்றவற்றுக்கு சாதாரண பாத்திங்களுக்கு பதில் பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் நேரமும் எரிவாயுவும் மிச்சாகும்.

இரண்டு பேருக்கு சமைப்பதற்காக பத்து பேருக்கு சமைக்கும் பாத்திரத்தை பயன்படுத்தாமல் சரியான அளவு பாத்திரம் கொண்டு சமைக்க வேண்டும். குழிவான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்துக்கு பதிலாக தட்டையான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தில் சமைக்கும் போது வெப்பம் சீராக பரவி சமையல் சீக்கிரமாக முடிந்து எரிபொருள் பயன்பாடும் குறையும்.

அடுப்பை பற்றவைப்பதற்கு முன் சமையல் செய்ய தேவையானவை அனைத்தையும் தயார் நிலையில் அருகிலேயே வைத்துகொள்ள வேண்டும். அடுப்பில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது கடுகையும், கறிவேப்பிலையையும் தேடிகொண்டிருக்க கூடாது. இதனால் நேரமும், எரிபொருளும் விரயமாகும்.

தண்ணீரோ குழம்போ கொதிக்கும் போது அடுப்பை சிறுதீயில் வைத்துவிடுவது நல்லது. இதனால் அவை பொங்கி வழிந்து அடுப்பு அணைத்து எரிபொருள் வீணாவதை தடுக்கலாம்.

மிகவும் முக்கியமாக கேஸ் அடுப்பில் பர்னர்களை அடிக்கடி தூசு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எரிபொருளை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும்.

குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக சாப்பிடும் போது குழம்பு, பொரியல் முதலியவைகளை அடிக்கடி சூடு செய்ய வேண்டியிருக்கும். மாறாக எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டால் எரிபொருள் மிச்சமாவதுடன் நமது ஒற்றுமையும் அதிமாகும்.

சிக்கனமாக இருப்பது நமது வீட்டின் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்துக்கும் நல்லது.
Tags:    

Similar News